2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு யாழ் திருமறைக்கலா மன்றத்தில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பின்போது மாற்று அணிகளைச் சேர்ந்த கட்சிகள் ஐக்கியப்பட்டால் வாக்குச்சிதறலை தடுக்கலாம் என்று பொதுவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும் அப்படி ஒரு இணைப்பு அப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சந்திப்பின் முடிவில் யாழ்.பல்கலைக்கழக புலமை சாராஊழியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு சொன்னார்..
”இவர்களை இப்போதைக்கு ஒற்றுமைப்படுத்த முடியாது. ஒற்றுமைப்படுத்த வெளிக்கிட்டால் அவர்கள் எங்களைத்தான் விரோதமாகப்பார்ப்பார்கள். எனவே அவர்களை அவர்களின் போக்கில் விடுவோம். அவர்கள் சிதறிப்போய் தேர்தலை எதிர்கொள்ளட்டும். அதில் வெல்பவர் வெல்லட்டும் தோற்பவர் நோற்கட்டும். அதற்குப் பின் அவர்கள் ஏதோ ஒரு வழிக்கு வருவார்கள். அப்பொழுது அவர்களை ஐக்கியப்படுத்தலாம்” என்று.
அவர் அவ்வாறு கூறி இரண்டு ஆண்டுகளின் பின்னரே ஒரு தற்காலிக ஐக்கியத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டு காலப்பகுதிக்குள் மூன்று தேர்தல்கள் நடந்துவிட்டன. இதில் கடைசியாக நடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் சிதறின. இதன் விளைவாக கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. ஆனால் கூட்டமைப்பு இழந்த 6 ஆசனங்களையும் மாற்று அணி பெறவில்லை. மாற்று அணி 3 ஆசனங்களையே பெற்றது. இவ்வாறு கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு கோலம் மாறியதன் விளைவாக உருவாக்கிய ஒரு புதிய சூழலே கடந்த வாரம் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகளுக்கிடையில் ஒரு விவகாரமையக்கூட்டை உருவாக்கக் கூடிய நிலைகளை தோற்றுவித்தது.
கொள்கைக்கூட்டு உடனடிக்கு சாத்தியம் இல்லை. அப்படி ஒரு கொள்கை கூட்டு உருவாகும் வரையிலும் தமிழ் தேசியக் கட்சிகள் சிதறிக்கிடந்தால் அது தென்னிலங்கைமையகட்சிகளுக்கும் அவற்றின் சேவகர்களுக்குமே வாய்ப்பாகி விடும்.எனவே ஒரு கொள்கை கூட்டு ஏற்படும் வரையிலும் காத்துக்கொண்டிருக்காமல் தற்காலிகமாக சமயோசிதமாக கட்சிகளை பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் தற்காலிக கூட்டுக்குள் கட்டிப்போட வேண்டும். இதன் மூலம் தனியோட்டம் ஓடக்கூடிய கட்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை உண்டு.
இந்த அடிப்படையில்தான் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மூன்று கட்சிகளையும் ஜெனிவாவை நோக்கி ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு மூன்று சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்புகளில் முதலாவது கிளிநொச்சியில் நடந்தது. திருமலை ஆயரும் மத குருக்களும்உட்பட குடிமக்கள் சமூகப்பிரதிநிதிகள் கலந்து கொண்ட இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிகலந்து கொள்ளவில்லை. விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக அருந்தவபாலன் பங்கு பற்றினார். கூட்டமைப்பின் சார்பாக சுமந்திரன் வந்திருந்தார். சிவாஜிலிங்கமும் ஆனந்தியும் வந்திருந்தார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய சுமந்திரன் பெருமளவுக்குஜெனிவாவோடு அதாவது ஐநா மனித உரிமைகள்பேரவையோடு ஏதோ ஒரு விகிதத்திலாவது எங்கேஜ் பண்ணவேண்டும் என்ற தொனிப்பட பேசினார்.ஜெனிவாவுக்கு வெளியே போவதில் இருக்கக் கூடிய சவால்களையும் சுட்டிக்காட்டி கதைத்தார். சந்திப்பில் கலந்து கொண்ட சிவாஜிலிங்கம் தாம் அங்கம் வகிக்கும் விக்னேஸ்வரனின் கூட்டணி ஜெனிவாவுக்குஅனுப்புவதற்கு என்று தயாரித்து வைத்திருக்கும் ஓர் ஆவணத்தை முன்வைத்துப் பேசினார். அதில் அவர் ஜெனிவாவை முழுவதுமாக கைவிடாமல் அதில் ஏதோ ஒரு விகிதமளவுக்கு எங்கேஜ்பண்ணிக் கொண்டு ஜெனிவாவைகடந்துபோக வேண்டும் என்று சொன்னார். அவருடைய வார்த்தைகளில் சொன்னால் யாரையாவது உதைவது என்றால் ஒரு காலை நிலத்தில் ஊன்ற வேண்டும்.
சிவாஜிலிங்கமும் சுமந்திரனும் சில இடங்களில் பொருந்திப் போவது போல் இருந்தது. எனவே இரண்டு கட்சிகளும் தங்களுக்கிடையில் ஒரு பொது முடிவுக்கு வந்தால் என்ன என்ற தொனிப்பட சுமந்திரன் கேட்டார். ஆனால் அதற்கு அங்கு கூடியிருந்த குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகள் உடன்படவில்லை. அது ஒரு பொதுத்தீர்மானத்துக்கு வருவதற்குரிய பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலான சந்திப்பின் தொடக்கமே தவிர அங்கே உடனடியாக ஒரு பொது தீர்மானத்துக்கு வரவேண்டிய தேவை இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. அருந்தவபாலன் அதை வலியுறுத்தினார். கடந்த ஆறாண்டு காலநிலை மாறு கால நீதிப் பயில்வின் தோல்விகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் உச்சமான கோரிக்கைகளை ஐநாவில் முன்வைக்க வேண்டும் என்று குடிமக்கள் சமூகங்களும் மதகுருக்களும் கேட்டுக்கொண்டார்கள். ஐநாவில் என்ன கிடைக்கும் என்று சிந்திக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் எதை கேட்கிறார்கள் என்பதனை கூர்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவுக்கான கோரிக்கை அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
சந்திப்பின் முடிவில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.அடுத்த சந்திப்பு வவுனியாவில் என்று தீர்மானிக்கப்பட்டது. வவுனியா சந்திப்புக்கு கஜேந்திரகுமார் வந்திருந்தார். அங்கே அவர் ஜெனிவாவை குறித்து விமர்சன பூர்வமாக உரையாற்றினார். குறிப்பாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில் பேசிய சுமந்திரனும் ஜெனிவாவை கையாள்வதில் அதாவது கடந்த 6 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையோடு தமது கட்சி முன்னெடுத்த நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் என்ற பரிசோதனை முயற்சி வெற்றி பெறவில்லை என்பதனை ஏற்றுக்கொண்டார். எனவே ஜெனிவாவை கடந்து போவது என்பதில் மூன்று தரப்புக்கும் இடையில் ஒரு பொது நிலைப்பாடு காணப்பட்டது.
அவ்வாறு ஜெனிவாவை கடந்து போவது வரையிலும் ஜெனிவாவில் அதாவது மனித உரிமைகள் பேரவையில் எவ்வளவு விகிதத்துக்கு என்கேஜ்பண்ணுவது என்பதில் மூன்று கட்சிகளுக்கும் இடையில் விகிதவேறுபாடுகள் இருந்தன. குறிப்பாகட்ரிபிள்ஐஎம் என்றழைக்கப்பட்ட ஒரு பொறிமுறையை சிவாஜிலிங்கம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் கஜேந்திரகுமார் அதை ஆவணத்தில் இணைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பொறிமுறைமியான் மருக்குரியது. ஒரு நாட்டுக்கென்று விசேஷமாக உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு பொறிமுறையை கேட்டால் அந்தப் பொறிமுறையை உருவாக்குவதோடு ஐ.நா. நின்றுவிடும் என்றும் அவர் சொன்னார்.
ட்ரிபிள்ஐஎம் எனப்படுவது பர்மாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. நீதிவிசாரணை ஒன்றுக்கான அடிப்படைத் தகவல்களை திரட்டும் ஒரு பொறிமுறை. இந்த பொறிமுறையை நாங்கள் கேட்டால் ஐநா அதையொத்த ஏதோ ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்திவிட்டு பிரச்சினைக்கு தீர்வாக அறிக்கைகளையே வெளியிட்டுக் கொண்டிருக்கும். மாறாக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு போக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம். என்று அவர் கேட்டுக்கொண்டார்.அனைத்துலககுற்றவியல் நீதிமன்றம் ஒரு நீதிவிசாரணையை முன்னெடுத்தால் அதற்கென்று சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டும் ஒரு பொறிமுறையை அந்த நீதிமன்றமே உருவாக்கும் .எனவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும் என்ற கோரிக்கைக்குள் ட்ரிபிள்ஐஎம் போன்ற ஒரு பொறிமுறைக்கான கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று கஜேந்திரகுமார் வாதிட்டார். அதோடு அண்மைய ஆண்டுகளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளை சுட்டிக்காட்டி புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. என்றும் அவர் கூறினார் இவை அரசற்றதரப்புக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சாதகமானவை என்றும் அவர்கூறினார்.
இதனிடையே,இச்சந்திப்பிற்கு சில நாட்கள் கழித்து அதாவது 6ஆம் திகதிகொழும்பில் ஒரு சந்திப்பு நடந்தது. மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவண முத்துவால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் பங்கு பற்றினார்கள்.அதில் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு பொது அணுகுமுறைக்கு வருவது என்று முடிவெடுக்கப்பட்டது.ஆறாம்திகதி நடந்த சந்திப்பின் விளைவாக எழாம்திகதியும்ஒரு சந்திப்பு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டது.எனினும்அதுவெற்றி பெறவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப்புகளின் தொடர்ச்சியாக மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் சிறீகாந்தா போன்றோரும் பங்குபற்றினர். பலத்த வாதப்பிரதிவாதங்களின் முடிவில் ஒரு பொது ஆவணத்தை தயாரிப்பது என்று மூன்று கட்சிகளும் ஒத்துக்கொண்டன. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலான சந்திப்பில் கட்சிகள் தங்களுக்கிடையே பலமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டன. அச்சந்திப்பில் பங்கு பற்றிய திருமலை ஆயர் இரண்டு தடவைகள் கண்டிப்பான குரலில் இடையீடு செய்யவேண்டியிருந்தது.
விக்னேஸ்வரனின் கூட்டணி சர்வஜன வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை குறிப்பிட்ட ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்காலிகமாக தளர்த்தியது. அதேசமயம் கூட்டமைப்பு நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டது. எனவே இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை கேட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வது என்ற ஒரு முடிவுக்கு மூன்று கட்சிகளும் ஒன்றாக வந்தன. விக்னேஸ்வரனின் கூட்டு வலியுறுத்தி யட்ரிப்பில். ஐ.எம் என்ற பொறிமுறையை கஜேந்திரகுமார் காலவரையறையோடு ஏற்றுக்கொள்வது என்று சம்மதித்தார். இதன்பின்னர் ஒரு பொது ஆவணத்தை இறுதியாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்படித்தான் மூன்று கட்சிகளும் ஒரு பொது இணக்கத்துக்கு வந்தன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்தமை; மாற்று அணிக்கு 3 ஆசனங்கள்கிடைத்தமை; புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலையீடு; கஜேந்திரகுமாரின் கட்சிக்குள் ஏற்பட்ட உடைவு போன்ற பல்வேறு காரணிகளின் விளைவாகவே இப்படி ஒரு தேவை கருதியகூட்டை உருவாக்கவேண்டிய நிலைமைகள் கனிந்தன. கடந்த ஆறாண்டு காலமாக ஜெனிவாவை உத்தியோக பூர்வமாககூட்டமைப்பு கையாண்டு வந்தது இது விடயத்தில் சுமந்திரன் தொடக்கத்தில் தனியோட்டம் ஓட முயற்சித்தார். என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனினும் டயஸ்போராஅமைப்புகளின் முன்முயற்சிகாரணமாகவும் உள்நாட்டில் குடிமக்கள் சமூகங்களின் தலையீடு காரணமாகவும் ஒரு பொது அணுகுமுறைக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆனால் இந்த உடன்படிக்கை ஒரு கொள்கைக் கூட்டு அல்ல. நடந்தது இனப்படுகொலை என்பதனை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருப்பதும் அதற்குரியபரிகார நீதியைக் கேட்பது என்பதில் அது ஏனைய கட்சிகளுடன் உடன்பட்டமையும் ஒரு திருப்பகரமான மாற்றம். கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் பெற்றதோல்விகளில் இருந்து பாடம் கற்கத்தயாராகிவிட்டது. எனவே அது புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை சுதாகரித்துக் கொள்கிறது. ஆனால் நிச்சயமாக இது ஒரு கொள்கைக் கூட்டு அல்ல.இது ஒரு சமயோசிதக்கூட்டு. தேவை கருதிய விவகாரமையக்கூட்டு. இனிமேலும் உடனடிக்கு இதுபோன்ற கூட்டுக்களே சாத்தியப்படும். இவ்வாறான கூட்டுகளின் திரட்டப்பட்ட விளைவாக சிலசமயம் எதிர்காலத்தில் ஏதும் கொள்கை கூட்டுஏற்படலாம்.
ஆனால் இங்கு முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு மாற்றம் உண்டு. 2013 ஆம் ஆண்டு முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பில் மன்னார் ஆயர் உட்பட கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகளும் சம்பந்தரின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். இச்சந்திப்பில் தான் ஒரு தமிழ்த் தேசிய பேரவையை உருவாக்குவது என்றும் யோசிக்கப்பட்டது. சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வரும் தொனிப்பட சொன்னார்…. “பிஷப் நீங்கள் சொல்லுங்கோ ஆனால் இறுதி முடிவை நான்தான் எடுப்பேன்” என்று. ஆனால் 8 ஆண்டுகளின் பின் கிளிநொச்சிசென்ற்.திரேசாள் மண்டபத்தில் நடந்த சந்திப்பில் திருமலை ஆயர் கண்டிப்பான சன்னமான குரலில் இடையீடு செய்தபொழுது எந்த ஒரு கட்சித் தலைவரும் அவரைப்பார்த்து சம்பந்தர் சொன்னதைப் போல சொல்லத் துணியவில்லை. தமிழ்த்தரப்பு இறந்த காலத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் விளைவா இது? குறிப்பாக தமிழ் அரசியலின் மீது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் செல்வாக்கு செலுத்தலாம் என்ற ஒரு நம்பிக்கையை இது அதிகப்படுத்தியுள்ளதா?