அதிபர் ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்:12மணியுடன் பாடசாலைகள் பூட்டு!
வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி என்கிறார் கோட்டக்கல்விப்பணிப்பாளர் சபூர்தம்பி.
சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவம்19) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறைப் பாடசாலைகளில் நடைபெற்றுள்ளது.இச் சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேசப் பாடசாலைகளில் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில் தொடராகப் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன் தங்கள் பிள்ளைகளைத் தருமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர்.சிலர் அதிபர் ஆசிரியர்களுடன் வாக்கவாதத்திலும் ஈடுபட்டனர்.
இது பற்றித் தெரியவருவதாவது பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் தம்பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. விடயத்தை ஆராந்த போது மாணவர்களைப் பீ.சீ.ஆர். எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடக்கவில்லையென்று தெரியவந்துள்ளது.
மாணவர்களுக்கு பீ.சீ.ஆர். எடுத்த நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு வருகைதந்த பொலிசார் தெரிவித்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை. மாகாண மட்டப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் இடைநடுவில் பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தால் ஆசிரியர்களைத் தவிர மாணவர்கள் எவரும் இல்லாத நிலையில் பாடசாலைகள் வெறிச்சோடிக் கிடந்தை அவதானிக்க முடிந்தது
• வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை கோட்டக்கல்விப்ணிப்பாளர் எம்.சபூர்த்தம்பியிடம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்.
எனது கோட்டத்தில் 37பாடசாலைகள் உள்ளன. அதில் 9தமிழ்ப்பாடசாகைள் மீதி 28முஸ்லிம் பாடசாலைகள்.அங்கு 16000 மாணவர்கள் 1500ஆசிரியர்கள் உள்ளனர்.
இன்று காலை 10.30மணியளவில் பரப்பட்ட பிசிஆர் வதந்தியால் பெற்றோர்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு பிள்ளைகளை அழைத்துச்சென்றனர். சிலர் மதிலுக்கு மேலால் ஏறி உட்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தம் பிள்ளைகளை கூட்டிச்சென்றனர்.
இதனால் முஸ்லிம் பாடசாலைகள் 12மணியளவில் இழுத்துமூடப்பட்டன. அனைவரும் வெளியேறினார்கள்.
ஒருவாறாக நீண்டநாளைக்குப்பிறகு இவ்வாரம்தான் பாடசாலைகள் வழமைக்குத்திரும்பின. அதற்குள் இப்படியொரு துர்பாக்கியநிலைமை.இனி இந்த நிலைமையிலிருந்து விடுபட எத்தனை நாட்களாகுமோ தெரியாது. நான் ஊரிலுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபையிடம் கதைத்துள்ளேன்.எமது பணிப்பாளரிடமும் கூறியுள்ளேன். என்றார்.