நீண்ட காலமாக கனடாவில் தமிழ்க் கவிதை மற்றும் கவிதை இலக்கணம், கவிதை வகுப்புக்கள் ஆகியவற்றை நடத்தி இலக்கியச் சேவையாற்றும் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், இணையவழி ஊடாக நடத்திய ‘ஞானகானம்’ பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த 17-01-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேற்படி நிகழ்விற்கு கழகத்தின் தலைவர் கவிஞர் கந்தஶ்ரீ பஞ்சநாதன் அவர்கள் தலைமை வகித்தார்.
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் நீண்ட கால உறுப்பினரும் கவிஞருமான அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களது ஐந்து பாடல்களே ‘ஞானகானம்’ என்னும் பெயரில் வெளியிடப்பெற்றன.
ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள், ஆசியுரை வழங்கினார். கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் குரு ஆசியுரை வழங்கினார்.
வெளியிடப்பெற்ற ஐந்து பாடல்களில் பக்திப் பாடலை வைத்திய கலாநிதி இராமநாதன் லம்போதரன் அவர்கள், மாவீரருக்கான பாடலை கவிஞர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்கள், குருவிற்கான பாடலை கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள், வன்னி மண் புகழ்பாடும் பாடலை கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன், தமிழ் மொழியின் பெருமையினைப் பாடும் பாடலை உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் ஆகியோர் வெளியீட்டு வைத்து கருத்தாளமிக்க உரைகளை ஆற்றினார்கள்.
இந்த ஐவரின் உரைகளும் பாடல்களுக்கு ஏற்பவும் , கவிதை மற்றும் இசை சார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருந்ததாக கலந்து கொண்ட பலர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். அத்துடன் பாடலாசிரியர் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களது கவிதை புனையும் ஆற்றல், யாப்பிலக்கணத்தில் அவர் அடைந்துள்ள இடம், அயராத உழைப்பு, நட்பு பாராட்டும் உள்ளம் ஆகியவை தொடர்பாக ஒவ்வொரு பேச்சாளரும் குறிப்பிட்டுச் சென்றமை அவருக்கான புகழாரங்களை எடுத்துக்காட்டின.
பாடல்களைப் பற்றிய தொகுப்புரையை வழங்கிய கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் தனது உரையில் பல விடயங்களை எடுத்துத் கூறினார். கனடாவில் கலை இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக ஓய்வின்றி ஆற்றி வரும் பணிகளை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறான விழாக்கள், பணிகள், படைப்பிலக்கியங்களின் வெளியீடுகள் ஆகியவை இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான விடயங்களும் படைப்பிலக்கிய முயற்சிகள் இடம்பெறுமா என்று கேள்வியையும் எழுப்பினார். நெடுங்காலமாக தமிழ் இலக்கியப் பரப்பிலும் கல்வித் தளத்திலும் சிறந்த ஒரு விமர்சகராக பிரகாசிக்கும் அவரது கருத்துக்கள், அங்கு கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கின என்றால் அது மிகையாகாது.
தொடர்ந்து பாடலாசிரியர் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களது பதிலுரை இடம்பெற்றது. அதன்போது அவர்கள்கனடாவின் தன்னை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்த கவிநாயர் கந்தவனம் மற்றும் பண்டிதர்- அமரர்- அலெக்ஸாண்டர் ஆகியோர்க்கு நன்றி கூறி, தன்னுடைய இலக்கிய மற்றும் சமூகப் பங்களிப்பை எப்போது உற்சாகப்படுத்தி ஊக்கமளிக்கும் நண்பர்கள், குறிப்பாக கனடா தமிழ்க் கவிஞர் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து கவிஞர் கழகத்தின் முக்கிய உறுப்பினர் கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம் நன்றி கூறினார்.
தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட பல ஆரவலர்கள் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களைப் பாராட்டி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்