கதிரோட்டம் 22-01-2021
அகழ்வாராச்சி என்ற பெயரில் இலங்கையில் இடம்பெறும் இனம் மற்றும் மதம் சார்ந்த அழிப்பு நடவடிக்கைகள் அரசின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகள் என்பது வெளிப்படையாக காட்ட முனைந்தாலும், அவை அரச பயங்கரவாதத்தின் செயற்பாடுகளாகவே அமைகின்றன என்பது தற்போது காட்சியளிக்கின்றன.
எந்தளவிற்கு அரசாங்கமும் இதை ஒரு அரசின் நியாயமான செயற்பாடாக காட்ட முனைந்தாலும், மறைமுகமாக இந்த அகழ்வாராய்ச்சி என்னும் பெயரோடு மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அனைத்தும், இராணுவத்தின்; துணையோடு நடத்தப்படுகின்ற திட்டமிட்டட அரச-இராணுவ பயங்கரவாத செயற்பாடு என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் தமிழ்ப் பிரதேசம் என்ற பார்வையிலும் சைவ சமயத்தின் குறியீடுகளாகவும் வழிபாட்டு தலங்களாகவும் விளங்கும்; இடங்களை குறிவைத்து அங்கு பௌத்த மதம் சார்ந்த ஸ்தலங்களையோ அன்றி குடியேற்றங்களையோ ஏற்படுத்த முனைவது வெளிச்சமாகவே தெரிகின்றது
முல்லைத்தீவு குருந்தூர் ஐயனார் ஆலய அழிப்பு பற்றி அவர்மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக எமது வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
அதனுடைய தொடராக பல வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய வழிபாட்டோடு ஒன்றிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்து எறியப்பட்டு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுளது. இது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் மிக வேதனையான செயலாக பார்க்கப்படுகிறது.
தொடர்பே இல்லாத இடங்களில் புதிது புதிதாக இவ்வாறான செயல்களை செய்வது திட்டமிட்ட செயலாகவே எண்ணத்தோன்றுகின்றது. தற்போது ஏதோ குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்த நிலையில் படிப்படியாக தமிழர் பிரதேசத்தில் முன்னரை விட மோசமான நிலையில் மொத்தமான தமிழர் வழிபாட்டு நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றது. எமது வழிபாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இதை அனைத்தினையும் கண்டும் காணாதது போல் கடந்து செல்கின்றனர். அரசியல் வாதிகளும் ஆன்மீகவாதிகள் அல்லது ஆன்மீக அமைப்புகளும். அவர்கள் பெயரளவிலேயே மட்டுமே அமைப்புகளாக இருக்கின்றன அன்றி இனமத நலன்களை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்பதே அனைவரதும் குரலாக உள்ளது