ஈழத்தை சிவபூமி என அழைத்திருக்கிறார் தமிழ்ச் சித்தரான திருமூலர். மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்ற, திருமூலர், திருமந்திரம் என்ற சைவத்தின் முதன்மை இலக்கியத்தைப் படைத்தவர். அவர் ஈழத்தை சிவபூமி என்று அழைத்தமைக்கு காரணம், ஈழம் சைவப் பண்பாட்டினால் தலை சிறந்து விளங்கிய பூமி என்பதனால் ஆகும். ஈழம் கடலால் சூழப்பட்ட நிலம் மாத்திரமல்ல. சிவாலயங்களால் சூழப்பட்ட தீவுமாகும். ஈழம் என்ற பெயர் கூட இரண்டாயிரம் வருடங்கள் பழமையான பெயர். சங்க கால இலக்கியத்தில் இருந்து சோழர்கால இலக்கியங்கள் வரையில் ஈழம் என அழைக்கப்பட்டிருப்பது ஈழத்தின் தொன்மைக்கு சான்றெனலாம்.
இலங்கையின் பல பாகங்களிலும் கண்டெடுக்கப்பட்ட தொன்மைச் சான்றுகள் பலவும் ஈழத் தீவின் பூர்வீகத்தையும் புராதனத்தையும் எடுத்துரைக்கின்றன. ஈழத் தமிழ் மக்கள் இத் தீவின் பழங்குடிகள் என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் உண்டு. அத்தகைய ஈழத் தீவில் வடக்கு கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களைத்தான் ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகமாக கோரிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்களிடம் இருந்த விட்டுக்கொடுப்பையும் இன, மத பன்மைத்துவத்தை மதிக்கும் பண்பையுமே இந்த விட்டுக் கொடுப்பு உணர்த்துகின்றது. இன்றைய தென்னிலங்கையில் இருக்கின்ற கதிர்காமமும் இல்லாமல் ஆக்கப்பட்ட தொண்டீச்சரம் ஆலயமும் ஈழம் என்ற தீவு எதுவுரை விரிந்திருந்தது என்பதற்கு தக்க சான்றுகள் ஆகும்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கில் இன்றும் ஈழ மக்கள் செறிந்து வாழ்கின்ற நிலையில், அங்கே சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பை காலம் காலமாக சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில்தான், ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுப் போராட்டம் துவங்கப்பட்டது. ஈழத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் விஜயனின் வருகையுடன் துவங்கிய ஒன்று. அது சுதந்திரத்திற்குப் பிறகும் தீவிரம் அடைந்த நிலையில்தான் ஈழத் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்கின்ற தனித் தேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் நிலத்தையும் மதப் பண்பாட்டையும் அழிக்க வேண்டும் என்ற ஆக்கிரமிப்புக் கொள்கையில் சிங்கள தேசம் உறுதியாக இருக்கிறது.
ஒரு காலத்தில் முழுக்க முழுக்க சைவமும் தமிழும் தழைத்தோங்கிய நிலங்கள் எல்லாம் இன்று பௌத்த சிங்கள பூமியாக மாற்றப்பட்டுள்ளன. கந்தலாய் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைசமும் தமிழும் வளர்ச்சி பெற்ற பிரதேசம். ‘கண் தளைத்த குளம்’ என்பது கந்தலாய் என மருவியது. அங்கே இருக்கும் சிவன் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்றது. சோழ மன்னான குளக்கோட்டனின் ஆட்சியில் இக் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. கந்தலாய் குளத்தில் நீராடிவிட்டு இந்த ஆலயத்தை வணங்கியதால் பார்வை இழந்தவர் பார்வை பெற்றதனால் கந்தலாய் எனப் பெயர் பெற்றதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தப் பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டமையினால் இன்றைக்கு இது சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.
ஈழத்தின் இதய மாவட்டங்களாக உள்ள திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சிங்களமயமாக்கும் வேலைகள் ஸ்ரீலங்காவை மாறி மாறி ஆளுகின்ற அரசுகளால் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் மகிந்த ஆட்சியில் வடக்கு கிழக்கு எல்லையோரத்தில் பல சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. நாளும் பொழுதுமாக அங்கே நடக்கின்ற குடியேற்றங்கள், தமிழ் நில அழிப்பின் தீவிரத்தை உணர்த்துகிறது. கொக்கிளாயில் இருந்து வவுனியா நெடுங்கேணி எல்லை வரையில் இந்த குடியேற்ற முயற்சிகள் கடந்த பல வருடங்களாக நடந்திருக்கின்றன. அத்துடன் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற, கொக்கிளாய் இன்று முற்று முழுதான சிங்களக் குடியேற்ற கிராமமாக மாறிவிட்டன.
அதைப்போல வவுனியா தெற்கில் பல கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்போதும் சிங்கள பௌத்த பேரினவாதம் அடங்குவதாயில்லை. அது தமிழர்களின் தாயகத்தை முழுமையாக தின்று செரிக்கத் துடிக்கின்றது. இந்த நிலையில்தான் அண்மையில் ஸ்ரீலங்கா அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா தலைமையில், சிங்களப் பிக்குகளும் சிங்களப் படைகளும் வந்து முல்லைத்தீவின் குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை வைத்து, அகழ்வு முன்னெடுக்கப் போவதாக பூசை செய்து சென்றுள்ளனர். அங்கே சிங்கள பௌத்த அடையாளங்கள் புதைந்துள்ளதாக கதை விட்டுள்ளனர். முல்லைத்தீவை ஆக்கிரமிக்க சிங்களப் பேரினவாதம் ஏதோ திட்டம் தீட்டியுள்ளது என்பது மாத்திரம் நன்றாகப் புரிகின்றது.
ஏற்கனவே முல்லைத்தீவின் கொக்கிளாய் முற்றாக பறிபோயுள்ள நிலையில், தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சிங்களவர்கள், முல்லைத்தீவு நகரம் மற்றும் நாயாறு போன்ற பகுதிகளில் மீன் பிடித்து தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சுறண்டுகின்ற வேலைகளை செய்து வருகின்றனர். அத்துடன் முல்லைத்தீவு செம்மலையில் உள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து பாரிய புத்தர் சிலை ஒன்றை வைத்தார்கள். 2009 போருக்குப் பிறகு இந்த சிலை வைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கே ஒரு பிக்கு குடியேறி பாரிய விகாரை அமைத்து வந்ததுடன் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை செய்ய தமிழ் மக்களுக்கு இடையூறுகளையும் அட்டகாசங்களையும் செய்து வந்தனர்.
இதனையடுத்து குறித்த புத்தர் புற்றுநோயால் இறந்த நிலையில் பிள்ளையார் ஆலய தீரத்தக் கரையில் அவரின் உடலை எரித்து சைவ ஆலயத்தின் விதிமுறைகளுக்கு தீங்கு விளைவித்தனர். இந்த நிலையில் தற்போது முல்லைத்தீவில் குருந்தூர் மலையையும் சிங்களப் பேரினவாதம் இலக்கு வைத்திருக்கிறது. கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் சிங்கள அரச படைகளின் பாரிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அண்டிய பகுதியில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்களை வைத்து விட்டு, அது பொலனறுவைக்கால கற்கள் என்று சிங்கள இராணுவத்தினர் கதைவிட்டு சிங்கள ஊடகங்களையும் திட்டமிட்டுக் குழப்பி இருந்தனர்.
2009ஆம் ஆண்டு இன அழிப்புப் போர் முடிக்கப்பட்ட பின்னர், சிங்கள அரச படைகளால் வடக்கு கிழக்கு கைப்பற்றப்பட்டவுடன் அங்கே பௌத்த சிங்களப் பேரினவாத்தின் சிலைகள், விகாரைகளை அமைக்கின்ற முயற்சிகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக தமிழர்களின் தாயகத்தை அழித்து அதன் அடையாளங்களை மாற்றுகின்ற முயற்சிகள் மும்மரமாக இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த சமயத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்தான் தமிழ் மக்களின் நகரங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும் கட்டப்பட்டன.
அத்துடன் தென்னிலங்கையில் இருந்து சிங்களப் பிக்குகளும் அழைத்து வந்து குடியேற்றப்பட்டனர். எதிர்காலத்தில் அவையெல்லாம் சிங்களவர்களின் இடம் என்றும் பௌத்தம் இருந்த இடம் என்றும் சொல்லி, தமிழர்களின் தாயகத்தை முற்று முழுதாக அழிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம், வர்த்தமானி வாயிலாக தமிழர்களின் பூர்வீக இடங்களை எல்லாம் பௌத்த சிங்கள இடங்கள் என்று கூறி ஆக்கிரமிக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றது. மகிந்த காலத்தில் முன்னர் தொடங்கிய இந்த வேலை மைத்திரி – ரணில் ஆட்சியின் போதும் நடந்தது. அப்போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் 1000 விகாரைகளை அமைக்கப் போகிறோம் என்று அறிவிக்கப்பட்டது.
குருந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் முயற்சிகள், தமிழ் மக்களை பெரும் துயரத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக்கியுள்ள நிலையில், யாழ் நிலாவரைக் கிணற்றையும் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் இன்னொரு புறத்தில் நடந்துள்ளன. தமிழர்களின் தாயகத்தை முற்றாக ஆக்கிரமிக்க வேண்டும் என்பதும் வடக்கு கிழக்கு இணைப்பு நிலங்களை துண்டித்து ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான் பௌத்த சிங்களப் பேரினவாத்தின் நோக்கம் ஆகும். வைசவமும் தமிழும் தழைத்தோங்கிய சிவபூமியை சிங்கள பூமியாக்கும் ஸ்ரீலங்கா அரசின் முயற்சியை உலகம் தடுக்குமா? குறிப்பாக இந்து நாடெனப்படும் இந்தியா தடுக்குமா? இதனை தடுக்கும் வகையில் தமிழ் தலைமைகள் புத்தி சாதுரியமான வேலைகளை மெய்யான அக்கறையுடன் செய்வார்களா?
கனடா உதயனுக்காக தீபச்செல்வன்