(மன்னார் நிருபர்)
(24-01-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மன்னார் கல்வி வலயத்தில் இம்முறை கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் விசேட கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியோடு,பிரதான பாடங்களுக்கான கற்றல் நடவடிக்கையை இணைய செயலி ஊடாக முன்னெடுத்து வருவதோடு, பிரதான பாடங்களுக்கான மாதிரி வினா பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளில் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் கல்வி வலயத்தில் இம்முறை சாதாரண தர பரிட்சைக்கு 1400 மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் அவர்களை தனிமையாகவும் குழுவாகவும் இணைய செயலி ஊடாக பிரதான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாதிரி வினாத்தால்கள் அச்சிடப்பட்டு பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு கொண்டு செல்ல என்று மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழும தலைவர் யாட்சன் பிகிறாடோ உரிய பாடசாலை அதிபர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதில் இணைய வழி மூல கற்றல் செயற்பாடுகளுக்கும் மிக முக்கியமாக பாடங்களை ஆசிரியர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து இறுவட்டாக மாணவர்களுக்கு வழங்குவது ,மாதிரி வினாத்தால் வழங்குதல் பொருத்தமாக இருக்கும் என்றும் பாடசாலை அதிபர்களினால் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.