(மன்னார் நிருபர்)
(25-01-2021)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ‘கோவில் மோட்டை’ பகுதியில் பாரம்பரியமாக அரச காணியில் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து விவசாய செய்கைகளை மேற்கொண்டு வந்த மக்கள் அக் காணிகளை மத ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை (25ம் திகதி) காலை மடு பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் கடந்த 30 வருடங்களாக கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் 27 குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தமது நிலங்களை தமக்கே வழங்குமாறு கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த கிராம மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற நிலையில் கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை பிரிதொரு உரிமையாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட மக்கள் மடு பிரதேசச் செயலாளரிடம் தமது கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.
-தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஏ. ஸ்ரான்லி டி மேலை தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்கையில்,,
குறித்த காணி தொடர்பான பிணக்கு பல வருடங்களாக நீடித்த நிலையில் அன்மையில் எனது தலைமையில் மக்களின் ஆலோசனையின் பின்னர் அவர்களின் முன் மெழிவின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) மக்கள் போராட்டம் மேற்கொண்டதாக தெரிய வருகின்றது.
எனவே மக்களின் குழப்ப நிலை காரணமாக கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி உயர் மட்ட முடிவுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.