கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலிந்து எரியூட்டும் இலங்கை அரசின் கொள்கை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று ஐநா எச்சரித்துள்ளது. ஒரு இனம் சார்ந்த கொள்கை நிலைப்பாடாக அதுவுள்ளது ஏற்புடையதல்ல என்கிறது ஐநா அறிக்கை.
இது தொடர்பில் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர் குழு இலங்கை அரசு இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு எதிராக கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதானது ஏற்கனவே நிலவும் காழ்ப்புணர்ச்சி, சகிப்புத்தன்மை இல்லாத சூழல் மற்றும் வன்முறையை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
அவ்வகையில் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை இனியும் இலங்கை அரசு வலிந்து எரியூட்டுவது தொடர முடியாது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்கள் என்று உறுதியாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான சடலங்களை எரிப்பது மட்டுமே அதைக் கையாள ஒரே வழியென்று கருதி செயல்படுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும். இலங்கையிலோ அல்லது வேறு நாடுகளிலோ அவ்வகையில் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதன் மூலம் தொற்று நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ளது என்று எவ்விதமான அறிவியல் அல்லது மருத்துவ ஆதாரங்களோ இல்லை“ என்று அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை கோவிட்-19 தொற்றால் இலங்கையில் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவிலுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவை அனைத்தும் அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் எரியூட்டப்பட்டன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைப் புதைப்பதன் மூலம் நிலத்தடி குடிநீர் மாசுபடக் கூடும் என்று அரசின் தலைமை தொற்றுநோய் வல்லுநர் கூறியதை அடுத்து சடலங்களை அவசியம் எரியூட்டுவது எனும் முடிவை அரசு எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்போ உடலை எரிக்கும் போது நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. அதே போன்று இலங்கையின் பொதுச் சமூக மருத்துவ வல்லுநர்களும், இலங்கை மருத்துவர்கள் சங்கமும் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களைப் புதைப்பது பொதுச் சுகாதாரக்கு கேடு ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியுள்ளது.
பொதுச் சுகாதாரத்திற்கு சவால் விடும் கோவில்-19 தொற்று நோய் பரவல் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் உயிரிழந்தவர்களின் மாண்பை மதித்து இறந்தவர்களின் கண்ணியத்தை பேண வேண்டும், அவர்களது கலாச்சார மற்றும் மத சம்பிரதாயங்கள் அல்லது நம்பிக்கை ஆகியவை காக்கப்பட வேண்டும்“ என்று அந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
“காழ்ப்புணர்ச்சி, அதிதீவிர தேசியம் மற்றும் இனம் சார்ந்த முடிவு போன்றவற்றின் அடிப்படையில் பொது சுகாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப்படுவதையும் அதை நடைமுறைப் படுத்துவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினரை பழிவாங்கும் செயலாகும்“ என்று அந்த வல்லுநர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். “அரசின் அப்படியான செயல்பாடு ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் மனப்போக்கு, காழ்ப்புணர்ச்சி, இன முறுகல் மற்றும் மத ரீதியாகச் சகிப்புத்தன்மை இல்லாதது ஆகியவற்றை மேலும் அதிகரித்து, அச்ச உணர்வை விதைத்து. நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து மேலும் வெறுப்பையும் வன்முறையையும் ஊக்குவிக்கும்“ என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசு இப்படியான கொள்கைகளை எடுப்பது ஏழைகள் மற்றும் பலவீனமானவர்கள் புறக்கணிக்கப்படுகிறோம் எனும் அச்சம் காரணமாக பொது மருத்துவ வசதிகளை அணுக முடியாத சூழலை ஏற்படுத்தக் கூடும் என்றும் தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இது அந்த தொற்று நோயைத் தடுப்பதில் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் அந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் தவறான பரிசோதனை முடிவு காரணமாகவும் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களின் அனுமதியின்றி எரியூட்டப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன என்று தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் அந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களைப் புதைக்கும் உபாயங்களை ஆராயுமாறு நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் தங்கள் கவனத்தில் எடுத்துள்ளதாக அந்த ஐந்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களைப் புதைப்பது அல்லது எரியூட்டுவது ஆகிய இரண்டு வழிகளையும் ஆராயுமாறு அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுக்கள் தெரிவித்தாலும் அது புறந்தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவ்வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே “கோவிட் தொற்றால் மரணமடைந்தவர்களை வலிந்து தகனம் செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசை காத்திரமாக வலியுறுத்துகிறோம்.
மேலும் அது தொடர்பில் தவறான தகவல் பரவுதல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் ஆகியவற்றையும் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி நாங்கள் கோருகிறோம்“ என்று அந்த ஐநா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அந்த ஐவர் வல்லுநர் குழு ஆழமாகவும் உறுதியாகவும் கூறியுள்ளது.