பல்வேறு விதமான அபாயங்களும் நெருக்கடிகளும் இன்றை நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் கல்வியும் கலையும் பண்பாடுமே நமது கையில் துணையாக இருப்பதாக ஈழத்தின் எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் தலைவருமான தீபச்செல்வன் தெரிவித்தார்.
ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் நிதி உதவியில் கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கிளிநொச்சி நகரத்தில் இருந்து பல கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய இந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போராட்டத்துடனும் நெருக்கடியுடனும் கல்வி கற்கின்றனர் என்பது அவர்களின் முகங்களில் தெளிவான சித்திரமாகத் தெரிகின்றது.
தாய் இல்லை, தந்தை இல்லை, அல்லது அவர்களை பிரிந்து வாழ்கின்ற இந்தக் குழந்தைகளின் ஏக்கம் நிரம்பிய முகங்களை பார்க்கின்ற போது மனதுக்கு மிகவும் துயரமாக இருக்கிறது.
ஆனாலும் எல்லாத் துயரங்களையும் கடந்து வாழ்வில் முன் செல்வதற்கு கல்வியும் கலையும் பண்பாடும்தான் இன்று நமக்கு துணை புரிகின்றன.
பல்வேறு விதமான நெருக்கடிகளின் மத்தியில் எமது தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் எல்லாவற்றையும் கடந்துவிட முடியும் என்பதற்கு இப் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆர்வமும் இவர்கள் பெற்றுச் சாதித்த இப் பெறுபேறுகளும் கட்டியம் கூறுகின்றன.
இந்த மாணவர்களுக்கு மிகவும் குறைந்த விலையிலான புத்தகப் பைகளே போதும் என உதவி கோரிய போது, அவர்களுக்கு நிறைவான உதவியை செய்ய வேண்டும் என்றும் தரமான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் விரைந்து உதவிகளை பெற்று அனுப்பிய கனடா உதயன் பத்திரிகை நிறுவனரும் அப் பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களை நன்றியுடன் நினைவு கொள்ளுகிறேன்.
அதேபோன்று இந்த உதவியில் அவருடன் இணைந்த உறவுகளையும் நினைவு கொண்டு இந்த மாணவர்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன்… என்று மேலும் குறிப்பிட்டார்.