கனடாவின் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு நிதிசேர்க்கும் முகமாக உலகெங்குமிருந்து பல இணையவழி நிகழ்ச்சிகள் பல அமைப்புக்களாலும் தனிநபர்களினாலும் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வாக கனடாவிலிருந்து- தைத் திங்களின் ராகங்கள் என்னும் பல்சுவை கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் இயங்கிவரும் நிரோ டான்ஸ் கிரியேசன்ஸ் என்னும் கலை கலாச்சார அமைப்பு நீண்ட காலமாக பொதுப்பணிகளிலும் கலைசார்ந்த அபிவிருத்தி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேற்படி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த இணையவழி நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ம் திகதி கனடா- அமெரிக்கா நேரம் மதியத்திற்கு முன்பாக 11.00 மணிக்கு ஆரம்பமாகி 12.30 க்கு நிறைவுறும். மேற்படி நிகழ்வை முகநூல் மற்றும் இணையவழி ஊடாக கண்டு களிக்கலாம். உதவிகள் வழங்கலாம்.
அத்துடன் கனடா ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள ‘தமிழ் இருக்கைக்கு’ நிதி அன்பளிப்பை வழங்க விரும்புவோர் http://www.torontotamilchair.ca என்னும் இணைய முகவரிக்குச் சென்றும் தங்கள் அன்பளிப்பை வழங்கலாம். தனி நபர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியனவும் இந்த அரும்பணிக்கு அள்ளி வழங்கும் வண்ணம் கேட்கப்படுகின்றார்கள். மேலதிக விபரங்களுக்கு 416 707 9104 என்னும் கனடா தொலைபேசி இலக்கத்தை வற்அப்ஸிலும் அழைக்கலாம்.
3 மில்லியன் கனடிய டாலர்கள் தேவையான இந்த தமிழ் இருக்கை நிறுவும் நிதிக்கு, தற்போது 2.25 மில்லியன் டாலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் இன்னும் தேவையான நிதி .75 மில்லியன் கனடிய டாலர்கள் (ஏழரை இலட்ச டாலர்கள் மட்டுமே) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன் ஆசிரிய பீடம்