-நக்கீரன்
20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மண்டலத்தில் நீண்ட காலம் ஆட்சி நடத்தி, தான் வலிமைமிக்கத் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இந்தோனேசிய அதிபர் சுகார்த்தோ.
டச்சுக்காரர்கள், நெதர்லாந்தியர், ஜப்பானியர் ஆதிக்கத்தின்கீழெல்லாம் இருந்த இந்தோனேசியா, 1945-இல் இரண்டாம் உலகப் போருக்குப் இன் சொந்தமாக சுதந்திர பிரகடனம் செய்துகொண்டது. இருந்தாலும், 1949-இல்தான் ஐநா மன்றம் இந்தோனேசியாவை அங்கீகரித்தது. அத்தகைய இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக விடுதலைப் போராட்ட தளகர்த்தர் சுகர்னோ பதவி ஏற்றார்.
அப்போது, இராணுவ ஜெனரலாக இருந்த சுகார்த்தோ இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, சுகர்னோவின் 22 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், இவரோ, 31 ஆண்டுகள் அந்த நாட்டை தன்னுடைய இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தார். அப்படிப்பட்ட சுகார்த்தோவிற்கு ஜனவரி 27, நினைவு நாள்.
உலகின் மிகப்பெரும் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கம்யூனிசக் கொள்கை நன்றாக வேர்விட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளை அழிப்பதாக சொல்லிக் கொண்டு தன் அரசியல் எதிரிகளையும் சேர்த்து ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய சுகார்த்தோவின் தொடக்க கால ஆட்சியில் இலட்சக் கணக்கானோர் காணாமல் போயினர்.
பொதுவுடைமை சிந்தனையாளர்களின் அடிச்சுவடே இல்லாமல் செய்ததனால், சுகார்த்தோவின் நடவடிக்கையை பாராட்டிய அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், சுகார்த்தோவின் ஜனநாயக அத்துமீறல் குறித்து கண்டு கொள்ளவே இல்லை. கம்யூனிஸ் சித்தாந்தம் கொண்ட சீன வம்சாவளியினர் வகைதொகையின்றி வேட்டை ஆடப்பட்டனர்.
இருந்தாலும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையும் அமைதியான வாழ்க்கையும் சீரான பொருளாதார வளர்ச்சியும் தொடர்ந்ததால் இந்தோனேசிய மக்கள், சுகர்த்தோவின் கொடுங்கோண்மை குறித்து பொருட்படுத்தவில்லை.
1990-ஆம் ஆண்டுகளில், அந்தத் தீவுக் கூட்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசம் அடைந்ததால் மக்கள் சலிப்பும் வெறுப்பும் அடைந்து சுகார்த்தோவிற்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தனர். அந்த வேளையில், சுகார்த்தோவின் உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதல் அதிபர் சுகர்னோவின் மகள் மேகாவதிக்கு அந்த நேரத்தில் அரசியல் ஆதரவு பெருகி வந்தது. அதனால், 1998இல் சுகார்த்தோ பதவி விலகினார். பி. ஜே. ஹபிபீ இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபரானார்.
சுகார்த்தோ அதிபராக இருந்த காலத்தில், 1970-ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில் சர்வதேச திரைப்பட விழா இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்றது. அந்த நேரத்தில், தமிழ்த் திரைப்பட உலகில் நட்சத்திர நாயகியாக வளர்ந்திருந்த சாவித்திரியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன், சாவித்திரி இரகசியமாக திருமணம் புரிந்து கொண்ட ஜெமினி கணேசனும் உடன் சென்றிருந்தார்.
பல நாடுகளில் இருந்தும் வந்த நட்சத்திய நடிக-நடிகையருக்கு சுகர்த்தோ தன்னுடைய அரண்மனை வீட்டில் தனிப்பட்ட முறையில் விருந்து கொடுத்தார். அந்த விருந்து நிகழ்ச்சி மேற்கத்திய பாணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே அனைவருக்கு மது பரிமாறப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, விழா நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு வந்து தயக்கத்துடன் ஒதுங்கி நின்றார்.
ஜெமினி கணேசன் வந்து, கொஞ்சமாக மது அருந்தும்படி சாவித்திரியை கேட்டபொழுது, தனக்கு பழக்கம் இல்லை என்று சொல்லி சாவித்திரி நளினமாக மறுத்துள்ளார்.
இருந்தபோதும் ஜெமினி விடவில்லை; அவை நாகரிகத்துக்காக கொஞ்சமாக மது அருந்துவது தப்பில்லை; நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்ற ஜெமினி, தன் கையாலேயே மதுக் கிண்ணத்தை சாவித்திரியிடம் நீட்டி இருக்கிறார்.
தனக்கும் சாவித்திருக்கும் இடையிலான காதல் வாழ்வில் புயல் வீச இருப்பதற்கான அச்சாரத்தை ஆரம்பித்து வைக்கிறோம் என்பதை ஜெமினி கணேசன், சுகார்த்தோவின் அரண்மனையில் அந்தப் பொழுதில் உணரவில்லை; வேண்டாம் வேண்டாம் என்று இன்று மறுதலிக்கிற மதுவை நாளை முதல் தாம் விடாமல் பற்றிக் கொள்ள இருக்கிறோம் என்பதை உணராமல், இரண்டாவது மனைவியாகவும் காதல் மனைவியாகவும் வாழ்க்கப்பட்ட சாவித்திரி, அன்புக் கணவன் தந்த மதுக் கிண்ணத்தை இடக் கையில் ஏந்திக் கொண்டார்.
ஜெமினி கணேசன் வலக் கையால் தந்த மதுக் கிண்ணத்தை சாவித்திரி, வேண்டா வெறுப்பாகவும் அரைமனதுடன் மட்டும் இடக் கையால் வாங்கவில்லை; உண்மையில் இடக் கை பழக்கமுள்ளவர் சாவித்திரி.
அதன் பிறகு நடந்ததை திரை உலகமும் தமிழ் இரசிகர்களும் நன்கு அறிவார்கள்.
ஒருவேளை, சுகார்த்தோவின் அந்த விருந்து நிகழ்ச்சி, சாவித்திரியின் திரை வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெறாமல் இருந்திருந்தால், 45 வயதில் சாவித்திரி இறந்திருக்க மாட்டார்; திரைத் தொழிலில் இன்னும் பல உச்சத்தைத் தொட்டிருக்கக் கூடும்.
1921-இல் பிறந்த சுகார்த்தோ, பதவி இழந்த பின், பத்து ஆண்டுகள் முதுமையுடனும் நோயுடனும் போராடி 2008-இல் மறைந்தார். ஆனால், தான் ஏற்பாடு செய்து ஒரு விருந்து நிகழ்ச்சி, தன் அபிமான நடிகையான சாவித்திரியின் வாழ்க்கைப் பயணத்தை புரட்டிப் போட்டதைப் பற்றி அறிந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாவித்திரியின் இரசிகராக இருந்த சுகார்த்தோ, சாவித்திரி நடித்த பாவ மன்னிப்பு திரைப்படத்தை பல முறை பார்த்தாராம். குறிப்பாக, அதில் நாகூர் இ.எம். ஹனிஃபாவும் டி.எம்.சௌந்தரராஜனும் பாடிய ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு வரிக்குமான பொருளைக் கேட்டு அறிந்தாராம்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24