யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்..
இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதனைத் தொடர்ந்து ஆரம்பமான விடுதலைப் போராட்டம் என்பனவே எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலட்சக் கணக்கான மக்களை புலம் பெயர வைத்தன என்று கூறுவதில் மாற்றுக் கருத்தக்களே தோன்ற முடியாது. எவ்வளவிற்கு போராட்டங்களினாலும் இராணுவ மட்டும் சிவில் அடக்கு முறைகளினாலும் துன்புறுத்தல்களும், அச்சமும், சொத்துக்கள் இழப்பும், தாக்குதல்களினால் அப்பாவி மக்களும் உயிர் துறக்கின்ற சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றதனால், தமிழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள்.
இவ்வாறு இலங்கையை விட்டு பல்வேறு வழிகளையு ம் மார்க்கங்களையும் பயன்படுத்தி வெளியேறத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையினர். விமான நிலையங்கள் ஊடாக சட்டரீதியான பயணங்களை மேற்கொண்டார்கள். சில கடல் மார்க்கமாக சட்டத்திற்கு முரணான பயணங்களை மேற்கொண்டார்கள். சிலர் விமான நிலையங்களுக்கு ஊடாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டாலும், சட்டத்திற்கு முரணான வகையில் பத்திரங்களையும் கடவுச்சீட்டுக்களையும் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
இப்படியாக இலட்சக்கணக்கானவர்கள் பல்வேறு வகையான பயணங்கள் மூலம் இலங்கையை விட்டுச் சென்றாலும், அவர்கள் அனைவருக்கும் பொதுவான காரணம் ஒன்றாகவே இருந்தது. “இங்கு இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிரையும் உடமைகளையும் உறவுகளையும் இழப்பதிலும் பார்க்க, எங்கேயாவது ஒரு நாட்டிற்கு போய் அங்கு அகதியாய் வாழ்ந்தாலும் பரவாயில்லை” என்ற ஓரே தூர நோக்கு தான் அவர்கள் தாயக மண்ணை விட்டு நீங்கிச் செல்ல தூண்டியது என்றே கூறலாம்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த ‘அகதிப் பயணங்கள்’ இப்போது போரும் போராட்டமும் அற்றுப் போன மண்ணிலிருந்து இன்னும் தொடங்குகின்றனவா என்ற கேள்வியை யாராவது கேட்டால், அதற்கு இல்லை என்ற பதிலும் உடனே வராது.
போராட்டங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் காரணமாக பிறந்த மண்ணை விட்டு நீங்கியவர்கள் எங்கே சென்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்தால், அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் தான் சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்தது. குறிப்பாக மேற்குலக நாடுகளை நோக்கி எமது உறவுகள் சென்றமைக்கு காரணம், யுத்தமும் போராட்டமும் ஆரம்பிக்கும் முன்னரேயே எமது மக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்று உயர்ந்த நிலையிலிருந்தார்கள். அவர்களது வழிகாட்டலில் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்குலக நாடுகளை நாடிச் சென்றார்கள். அதற்கு இன்னும் சில காரணங்களும் இருந்தன.
வெளிநாடுகள் சிலவற்றில் நியாயமான காரணங்களோடு அகதிகளாகச் சென்றவர்களை சில வருடங்கள் செல்ல அந்த நாட்டின் நிரந்தர பிரஜைகளாவும் அதனைத் தொடர்ந்த குடியுரிமை பெற்றவர்களாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியற் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அதோடு ஆங்கிலம் போன்ற மொழிகள் அரச மொழிகளாக இருக்கும் நாடுகளில் இலகுவாகக் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்து வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு. இவ்வாறாக எமது ◌தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கு என்னும் தமிழர் நிலத்திலிருந்து கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்சு, சுவிற்சலாந்து, அவுஸ்த்திரேலியா, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் அங்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பெற்று பின்னர் பல சிரமங்களை அனுபவித்து தற்போது அவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நிரந்தர வதிவிட உரிமை பெற்று பின்னர் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்று மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் வாழ்ந்த வருகின்றார்கள்.
ஆனால் நாட்டை விட்டு வெளியேறிவர்களில் போதிய பொருளாதார வசதிகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரின் உதவிகள் போதியளவு இல்லாதவர்கள் சட்டவிரோத பயணங்ளை மேற்கொண்டு இந்தியாவில் தமிழ் நாட்டுக் கரைகளை சென்றடைந்தார்கள். இதில் ஆச்சரியம் என்றவென்றால் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழ்நாட்டிற்கான படகுப் பயணங்கள் இன்னும் தொடர்கின்றன என்றால், அது எமக்கு பல விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதே உண்மை.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஈழ அகதிகள் என்று தினமும் அழைக்கப்படும் எமது மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட ஒரு பார்வையும் பரப்புரையும் தான். தங்கள் பொருளாதார பலத்தின் அடிப்படையில் படகுப் பயணங்களை மேற்கொண்டு தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் போன்ற கரைகளில் நம்பிக்கைகளுடன் கால் பதித்து, எமது மொழி காற்றோடு கலந்து நிற்கும் மண்ணல்லவா? அந்த மண்ணும் மக்களும் எம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோ தங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் எமது தமிழ்நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வரும் உறவுகள். அவர்களை ‘அகதிகள்’ என்று குறித்து எழுதவே விரல்கள் நடுங்குகின்றன. மனச்சாட்சி எச்சரிக்கின்றது.
ஒரே காலத்தில், ஓரே காரணத்திற்காக தங்கள் மண்ணை விட்டு நீங்கிச் சென்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ச்சியாக அகதிகள் என்ற அந்தஸ்த்து இல்லாத மனிதர்களாக முகாம்களிலும் தனியார் வீடுகளிலும் தங்கள் வாழ்வின் நாட்களை கழிக்கின்றார்களே. இவர்களை யார் கவனிக்கின்றார்கள் என்று ஆராய்ந்தோம். மகிழ்ச்சி தரக்கூடிய தகவல்கள் எதுவுமே எமக்கு கிட்டவில்லை.
தமிழ்நாட்ல் தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களை கண்காணிக்கும் அல்லது பராமரிக்கும் பொறுப்பு இநதிய மத்திய அரசின் கீழ் உள்ள சில நிறுவனங்களினால் தான் கவனிக்கப்படுகின்றது என்ற தகவல் வெளிப்படையான ஒன்றே. இத்தனை ஆண்டுகள் அந்த நாட்டில் வாழும் எம் உறவுகளுக்கு சகல வாய்ப்புக்களைம் சலுகைகளையும் அனுபவிக்கக் கூடிய அந்தஸ்த்து இன்னும் வழங்கப்படவில்லை. இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகின்றது.
ஆனால் ஆப்கானிஸ்த்தான் பங்காளதேஸ் போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்த சீக்கியர்கள், பௌத்தவர்கள், ஜெயின் இனத்தவர்கள், கிறிஸ்த்தவர்கள் ஆகியோருக்கும் இந்திய குடியுரிமையை வழங்க அந்◌நாட்டுச் சட்டத்தில் இடமிருப்பதாகக் கூறி தற்போது அந்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு தசாப்பத்திற்கு மேலாக இந்தியாவின் ஒரு மாநிலமாக விளங்கும் தமிழ் நாட்டில் சிரமங்களை பல சிரமங்களை அனுபவித்தும் கடுயாக உழைத்தும் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை அந்தஸ்த்து வழங்கப்படுவது மறுக்கப்படுகின்றது. அந்த மக்களை இந்தியா மட்டும் புறக்கணிக்கவில்லை. மாறாக அவர்களோடு ஒரே மண்ணில் வாழ்ந்த தமிழ் மக்களாகிய நாமும் புறக்கணிக்கின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
எமது ஈழத்து உறவுகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மேற்குலக நாடுகளில் வாய்ப்புக்கள் வசதிகளோடு வாழ்ந்து வருகின்றார்கள். பொருளாதாரத்திலும், கல்வியிலும், சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் செல்வாக்குள்ளவர்களாக பிரகாசிக்கின்றார்கள். அவர்களின் ஒரு சிறுபகுதியினராவது ஒன்றாக இணைந்து தமிழ்நாட்டில் உள்ள எமது உறவுகளின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா என்று சிந்திக்க வேண்டும் அல்லவா, இதற்காக அமைப்பு = ரீதியாக எமது புலம்பெயர் தேசத்து உறவுகள் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையே இந்தக் கட்டுரை மூலம் முன்வைக்க விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் சற்று அதிகமான எமது உறவுகளில் அறுபதாயிரம் பேர் முகாம்களில் வாழுகின்றனர். நாற்பதாயிரம் பேர் முகாம்களுக்கு வெளியில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் வெயில் வாழ்ந்து வருகின்றவர்கள் கூட எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் அவர்களை அரசாங்கம் கண்காணித்த வண்ணம் அவர்களது வாழ்வுச் சுதந்திரம் மனித உரிமைகள் ஆகியவை தொடர்பான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்றும் அறியப்படுகின்றது. மேலும் சுமார் 25000 பிள்ளைகள் தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவர்களுடைய பிறப்புப் பதிவுகளும் சீராகவே இல்லை.
ஆனாலும் தமிழ்நாட்டில் வாழும் ஈழ மக்களுக்கு இலவச கல்வி,மருத்துவம் மற்றும் பங்கீட்டு உணவுப் பொருட்கள் ஆகியன வழங்கப்பட்டாலும் அரசாங்க தொழில் பெறும் வாய்ப்புக்கள் அற்றவர்களாகவே துன்புறுத்தப்படுகின்றார்கள் . சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ஒருவர் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆராய்ந்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார. பிரதமர் மோடி அவர்களும், இந்தியாவில் வாழும் குடியுரிமை பெறாதவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் போது, அவர்களது மதம் மற்றும் மொழி போன்ற விடயங்கள் கருத்தில் எடுக்கக் கூடாடது என்று பணிப்புரையை வழங்கியிருந்தார்.
எனினும் தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் என்னும் அவப்பெயரோடு வாழ்ந்து வரும் எமது உறவுகளை அங்கிருந்து மீட்டெடுக்க அல்லது அங்கு குடியுரிமை அந்தஸ்த்து பெற்று மரியாதையுடன் வாழ இந்திய மத்திய அரசோடு காத்திரமான தொடர்புகளை ஆரம்பித்து நல்லதோர் தீர்வைப் பெற புலம்பெயர் நாடுகளிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் பலமிக்கவர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நாளுக்காக காத்திருக்கின்றோம். அகதிகள் என்ற பதம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பரிதாபத்திற்குரிய பெயராகவே ஆரம்பத்தில் கணிப்பிடப்பட்டது. ஆனால் உலகில் பல நாடுகளிலும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள எதேச்சதிகார சக்திகளினாலும் முதலாளித்துவத்தின் சதிகளினாலும் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக்கப்பட்டே வருகின்றனர். எனினும் எமது தமிழ்நாட்டு ஈழ அகதிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும்.