கோவிட்-19 நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறிந்து தடுப்பதற்கென, ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளிடம் தன்னார்வ அடிப்படையிலான இலவச நோய்த்தொற்றுக்கான பரீட்சார்த்த பரிசோதனைத் திட்டம் ஒன்று ஒன்ராறியோ அரசினால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 6,800 இற்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நடைமுறை முன்னேற்றகரமாக இருந்தபோதிலும், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாய பரிசோதனை செய்வதற்கும், கொரோனா நோய்த்தொற்றின் புதிய வகைகள் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்து எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஒன்ராறியோ அரசாங்கம் கனடிய நடுவண் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாற்றமடைந்து வரும் நிலைமையைக் கண்காணிப்பதற்கு கனடாவின் பொது சுகாதார அமைப்புடனும் பிற அதிகார கட்டமைப்புகளுடனும் ஒன்ராறியோ மாகானம் தொடர்ந்து பணியாற்றும். மேலதிக பணியாளர்கள், மேம்பட்ட சோதனைகள் மற்றும் தொற்று ஏற்பட்ட வழியை அடையாளங்காணுதல் போன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி பொதுமக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒன்ராறியோ அரசு தொடர்ந்து ஆதரவளித்தும், அவற்றை ஒருங்கிணைத்தும் வருகின்றது.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ, றூஜ் பார்க். -ஒன்ராறியோ- கனடா