தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், முழுமையான தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,….
எந்த கட்சி, எந்த முன்னணி என்பதல்ல இங்கு பிரச்சினை இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய, அசுர வேகத்திலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தந்திரோபாய வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான இந்த கூட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
பங்குபற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டிருக்கின்றோம்; நீங்கள் தலா இரண்டு பிரதிநிதிகளை தந்து ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை ஆராய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பிலே ஒரே நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் நோக்கம்.
இந்த நடவடிக்கை குழு என்பது மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது ஏனைய விடையங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் பங்கெடுத்த பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிவாஜிங்கம் உட்பட பலர் தங்கள் கருத்துக்களை துணிச்சலாகத் தெரிவித்ததாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்