(1927 ஆகஸ்ட் – 2021 ஜனவரி)
( அமரத்துவம் அடைந்த அற்புதப் படைப்பாளி ‘ஜீவா’ அவர்களின் மறைவினால் துயரில் ஆழந்துள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உலகெங்கும் வாழும் படைப்பாளிகள், வாசகர்கள் ஆகியோரோடு நாமும் இணைந்து அவரை வழி அனுப்பி வைப்போமாக! கனடா உதயன் ஆசிரிய பீடம்)
‘மல்லிகை’ என்னும் மாசிகையை 1966 ஆண்டு தொடக்கம் 2012 டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 48 வருடங்கள் நடத்தி, 401 இலக்கியக் கனம் கொண்ட இதழ்களை பதிப்பித்து ஒரு உன்னத படைப்பாளி, எழுத்தாளர்களை வழி நடத்திய படைப்பிலக்கியப் போராளி எமது அன்பிற்குரிய டொமினிக் ஜீவா மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் உள்ள எழுத்துலக நண்பர்களை உலுக்கிவிட்டது என்றே கூற வேண்டும்.
தான் ஒரு இலக்கியவாதியாக மட்டுமல்லாது, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான ஒரு பங்காளியாகவும் செயற்பட்டு, அதன் மூலம் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்வர் எங்கள் ஜீவா அவர்கள்.
இலங்கை சாகித்திய மண்டலத்தின் இலக்கியத்திற்கான விருதினை இவரது ‘தண்ணீரும் கண்ணிீரும்’ என்னும் சிறுகதைத் தொகுதி 1961 ல் பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவர். பின்னர் இரண்டாவது தடவையும் 1963ல் ‘பாதுகை’ எ;ன்னும் சிறுகதைத் தொகுதிக்கான பரிசைப் பெற்றுக்கொண்டார்.
1927ம் ஆண்டு யூன் மாதம் 27ம் திகதி பிறந்த ஜீவா அவர்கள், தனது 93 வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்த அவர் மண்ணையும் மனங்களையும் நேசித்த பெருமைக்குரியவர். உன்னதாமான சொற்பொழிவாளராகவும், அசுரத்தனமான உழைப்பாளியாகவும், திகழ்ந்து எழுத்தாளர் பரம்பரையின் பிதாமகராகவும் விளங்கினார். இவரது அபாரத் திறமையும், கூரிய பார்வையுமே அன்னாரை உன்னதமான படைப்பாளியாக வளர்த்தெடுத்தது என்றால் அது பொய்யாகாது.
இவரது பாடசாலைக் கல்வி ஏழாவது வகுப்பு வரை தான். அதன் பிறகு ஒரு சமூகத் தாழ்வை கடைப்பிடிக்கும் வட பகுதியில் பல வேதனைகளை அனுபவித்த ஜீவா அவர்கள், அவ்வாறான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்திருந்தாலும் படைப்பிலக்கியத் தளத்தின் உயரத்தை எட்டிய ஒரு திறமைசாலியாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த முற்போக்கு இதழ்களான தாமரை, சரஸ்வதி போன்ற சஞ்சிகைகளில் அட்டைப் படங்களையே அலங்கரிக்குமளவிற்கு இவருக்குரிய அங்கீகாரம் உலகின் பல பாகங்களுக்கும் விரிந்து சென்றதை ஒருவராலும் தடுக்க முடியாமல் போய்விட்டது.
‘மல்லிகைப் பந்தல்’ என்ற பிரசுரத்தை நிறுவி, அதன் வழியாக சுமார் 80 இற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த பெருமைக்குரிய பதிப்பாளராகவும் விளங்கிய ஜீவா அவர்கள் உள் நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டாலும், தனது பணியை நிறுத்திவிடாமல், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களுக்கு தனது மாசிகையான ‘மல்லிகை’ மூலம் களம் அமைத்துக் கொடுப்பதை நிறுத்தி விடவில்லை.
இவரது ‘மல்லிகை’ இதழில் புலம் பெயர் நாடுகளைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். இவர் தனது சஞ்சிகையை நீர்கொழும்பு, மட்டக்களப்பு, சிலாபம், என அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வந்தமையால் மலையக எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள் என பலர்அவரோடு இணைந்து செயற்பட்டார்கள். இனம், மொழி, மதம், என்ற பாகுபாடுகள் அற்ற ஜீவாவிற்கு சிங்கள நண்பர்கள் ஏராளம் இருந்தார்கள். அவர்களில் இலக்கியவாதிகள், முற்போக்கு அரசியல்வாதிகள் என பலர் அடங்குவார்கள். அவர்களின் படைப்புக்கள் இவரது ‘மல்லிகையில்’ மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகின. தமிழ்-சிங்களு – முஸ்லிம் ஒருமைப்பாட்டிற்கான பாலமாகவும் ‘ஜீவா’ திகழ்ந்தார். தமிழ்ச் சஞ்சிகையாளர்களின் தந்தை என்ற நிலைக்கு காலம் இவர் உயர்த்தி விட்டது.
தான்”மண்புழுவாக இருந்து மனிதனானேன்” என்று அடிக்கடிச் சொல்லுவார் ஜீவா அவர்கள். ஒரு சவரக் கடையிலிருந்து சர்வகலாசாலை வரை சென்றேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி நின்ற அவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒரு தடவை,ஜீவாவை சோவியத் யூனியன் அரசாங்கம் கூட அழைத்து கௌரவம் செய்தது. பல பரிசுகளை வழங்கியது. போராசிரியர் காலஞ்சென்ற சிவத்தம்பி அவர்கள்; ‘ஜீவா’ பற்றி பேசும் போது, ஈழம் பெற்ற ஒரு பெரிய எழுத்தாளர் அற்புதமான மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜீவா அவர்கள் தனது வாழ்க்கை வரலாறறினை ‘ழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல விருதுகள் பரிசுகள் பெற்ற எழுத்தாளர் ஜீவா அவர்கள் இலங்கைப் பிரமரால் வழங்கப்பெற்ற”தேசபந்து” உயர் விருதினையும் பெற்றவர் ஆவார்.
எம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள ஜீவா அவர்கள், ஈழத்தமிழ் மக்களின் தேசிய இலக்கியவாதி என்று புகழப்பட்டவர் ” எனது 50வது ஆண்டு மலரை வெளியிட்டு விட்டுத்தான் நான் இறப்பேன்” என்று கூறிவந்தாலும், ஆனால் அவரால் அதனைச் சாதிக்க முடியவில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, எம்போன்ற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கும் ஒரு மனக்குறையாகவே தொடரப்போகின்றது.
இறுதிக் காலத்தில முதுமை காரணமாக ‘படுத்த படுக்கையாகக் கிடந்தவர்’ ஜீவா அவர்கள். ஒரு கட்டிலும், ஒரு காற்றாடியுமே அவரது தோழர்களாக விளங்கின. இந்த இலக்கிய ஆசானின் சேவையும் சாதனையும் தமிழ் உள்ளவரை நினைவிற் கொள்ளப்படும் என்றே கூறலாம். உலக அரங்கில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கியகர்த்தாவை நாம் இழந்துள்ளோம். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழியாத் தடம் பதித்த ஜீவா பல மகத்தான சாதனைகளை படைத்துவிட்டுச் பறந்து சென்றுள்ளார். அவரை என்றும் மறவாமல் இருந்து அவர் தந்த படைப்புக்களை வாசித்து இன்புறுவோம்!
(‘சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன்- கனடா)