இச்செய்தி எழுதுப்படும் போது இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 290 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 297 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (28) ஒருவர் நேற்றையதினமும் (27) நேற்றுமுன்தினம் ஒருவரும் (26) ஜனவரி 24, 21, 16 ஆகிய தினங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் கடைசியாக சம்பவித்த மூன்று மரணங்கள் தொடர்பான விபரங்களையும் எமது செய்தியாளர் இணைத்துள்ளார்
295ஆவது மரணம்
கொழும்பு சிறைச்சாலையிலிருந்து, 61 வயதான ஆண் கைதி ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 16ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, மாரடைப்பு மற்றும் உக்கிர நீரிழிவு நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
296ஆவது மரணம்
கொழும்பு 06 (வெள்ளவத்தை/கிருலப்பனை) பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர ஆஸ்த்துமா நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
297ஆவது மரணம்
எந்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் சிக்கலான சிறுநீரக நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.