(மன்னார் நிருபர்)
(30-01-2021)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் அரசியல் பிரதி நிதிகளாக இருந்தாலும் சரி , பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன மத பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவை வழங்குங்கள். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் இன்று சனிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் அமைதி போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டு பிடித்து தரக் கோரியும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை பாதீக்கப்பட்ட தமிழர்களாகிய நாங்கள் கரி நாளாக அனுஸ்ரிக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கந்த சாமி கோவிலுக்கு முன்பாக எதிர் வரும் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம்.
அதே சமயத்தில் மட்டக்களப்பில் 3 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி , பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன மத பேதங்கள் இன்றி எமது போராட்டத்தில் கலந்து கொண்டு எமது போராட்டத்திற்கு ஆதரவை வழங்குங்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற உரிமையுடனும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்று வீதிகளில் தேடிக் கொண்டுள்ள தாய் மார்கள் என்ற அடிப்படையிலும் உங்களிடம் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.
-எமது போராட்டத்தை சர்வதேச ரீதியில் வலு சேர்க்கும் வகையில் சர்வதேசம் எங்கள் மீது தமது பார்வையை செலுத்தியுள்ள நிலையில் மேலும் வலு சேர்க்கும் வகையிலும் அனைவருடைய ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.
-காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது? என்பது தொடர்பில் குற்றவியல் விசாரனைகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் எமது பிள்ளைகள் கிடைக்கும் வரை எங்களுடன் அனைத்து தரப்பினரும் துணையாக நிற்க வேண்டும். என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.