அண்மையில் இலங்கை அரச படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களையும் பெரும் கோபத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ள இந்த செயல், இலங்கை அரசின் எல்லை தாண்டிய இன அழிப்பாகவே நடந்திருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலை செயற்பாடுகள் இன்று நேற்று நடக்கவில்லை. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இந்திய இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகவே நிகழ்கின்றது.
இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழகத்தின் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (30), மண்டபத்தை சேர்ந்த சாம் (28), உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜன் (52), செந்தில்குமார் (32) ஆகியோர் ஸ்ரீலங்கா அரச படைகளால் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்திருந்த சமயத்தில் படகு விபத்து நடந்து மீனவர்கள் இறந்துள்ளதாக இலங்கை அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை தமிழக மக்கள் நம்பவில்லை. இலங்கை அரசு அவர்களை கொலை செய்திருப்பதாகவே மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஏனெனில் கடந்த காலத்தில், ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றி கொன்றுவிட்டு – இன அழிப்பு செய்துவிட்டு, அதற்காக இலங்கை அரசு கட்டிய கதைகளை உலகமே அறியும். ஈழ இறுதிப் போரின் போதும், போர் முடிந்த பிறகும் சரணடைந்தவர்களையும் கையளிக்கப்பட்டவர்களையும் இலங்கை அரசு என்ன செய்தது என்ற கேள்வி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் கொலை செய்கின்ற வழக்கை இலங்கை அரசு கொண்டிருப்பதால், தமிழக மீனவர்களும் அவ்வாறே அழிக்கப்பட்டுள்ளனர் என தமிழக உறவுகள் கூறுகின்றனர்.
ஈழத்தில் தமிழர்களை இன அழிப்பு செய்த இலங்கை அரசு, எல்லை தாண்டி தமிழக மக்களையும் படுகொலை செய்யத் துவங்கியுள்ளதா என்பதே தமிழகத்தின் இன்றைய கேள்வியாகவும் இருக்கின்றது. ஏனெனில் கடந்த காலத்தில் அதாவது, 2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, தமிழ் கடற்பரப்பு புலிகள் வசம் இல்லாமல் போன பின்னர், இதுவரையில் 570 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர் என்று தமிழகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் 2009இற்கு முன்னர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. இதன் சூத்திரதாரிகள் இலங்கை கடற்படை என தமிழக மக்கள் குற்றம் சுமத்துவது உண்மைதானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
பொதுவாகவே மீனவர்களின் வாழ்வு ஒரு நிச்சயமற்ற துயர வாழ்வாகத்தான் இருக்கிறது. அவர்கள் தொழிலுக்குச் செல்லும் பொதேல்லாம் திரும்பி வர முடியாத நிலை வரலாம் என்ற அச்சம் அவர்களின் வாழ்வை பெரிதும் பாதிக்கிறது. கடந்த காலத்தில் போர் நடந்த சமயத்தில் ஈழத் தமிழ் மீனவர்களும் இலங்கை அரச கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் பல மீனவர்கள் நேவியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்து அழிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கிளாலி வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடல் வழி சென்ற தமிழ் மக்களும் நேவியால் வெட்டிக் கொலை செய்த சம்பவங்கள் ஈழத்தை உலுக்கியிருக்கின்றன.
இந்த நிலையில் தற்காலத்தில் கடற் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கரிசனையும் அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. காலமற்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீனவர்களின் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை குறைத்திருந்தாலும் தமிழ மக்களுக்கு இன்னமும் நிச்சயமற்ற தன்மையும் ஆபத்தும் சூழ்ந்திருக்கிறது. இலங்கை அரச கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவது என்பது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. படகுகளை சேதப்படுத்தல், வலைகளை சேதப்படுத்தல், கைது செய்தல் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரச படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஈழமும் தமிழகமும் தாய் சேய் நாடுகள். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் வரலாறு முழுவதும் நெருக்கமான பந்தம் இருந்து வருகின்றது. மொழி, இனம், பண்பாடு, பொருளாதாரம், உறவு இன இந்தப் பந்தம் பரந்தது. அத்துடன் ஈழத் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் ஆபத்துக்களும் அழிப்புக்களும் நிகழ்த்தப்படுகின்ற சமயங்களில் எல்லாம் முதல் கண்டனக் குரல் தமிழகத்தில் இருந்துதான் வருகின்றது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் அவர்கள்மீதான இலங்கை அரசின் இன அழிப்புக்களை தடுத்து நிறுத்தவும் முத்துக் குமாரன் போன்ற தமிழக உறவுகள் தம்மை அர்ப்பணித்து செய்த தியாகங்களும் போராட்டங்களும் மகத்துவமானவை.
இன்றும் இலங்கை அரசுக்கு மாபெரும் அச்சுறுத்தல் கொண்ட தேசமாக தமிழ்நாடே இருக்கின்றது. இலங்கையில் சிங்கள அரசு செய்கின்ற அத்துமீறல்களுக்கு எதிராக தமிழகம் உக்கிரமாக குரல் கொடுத்து வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட சமயத்தில்கூட தமிழகத்தில் இருந்து வந்த கண்டனக் குரல்களை கண்டும் இலங்கை அரசு பின்வாங்கியது. ஈழத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்கவும் ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் தமிழகத்துடன் ஈழத்திற்கு இருக்கும் நெருக்கத்தை குலைக்க இத்தகைய செயல்களை செய்கிறதா இலங்கை அரசு என்ற சந்தேகம் இப்போது வலுத்து வருகின்றது.
ஈழத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் பாதிக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இத்தகைய விடயங்களை சிங்கள அரசு உருவாக்குகிறதா? தமிழகமும் ஈழமும் இங்கே முரண்பாடு கொள்ள ஏதுமில்லை. தாய் சேய் நாடுகளிடையே தொழில் பொருளாதாரத்தில் ஒரு இணக்கமும் எல்லையற்ற உறவும் இருக்க வேண்டும். எனவே அந்த அடிப்படையில்தான் இந்த விடயத்தை அணுக வேண்டும். இதில் ஈழத் தமிழ் மக்கள் தமிழகத்துடன் இருக்கும் நீண்ட பந்த்தின் அடிப்படையில்தான் சிந்திக்கவும் அணுகவும் வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழக மீனவர்களை தமிழ் கடற்பரப்பில் வைத்து படுகொலை செய்கின்ற சிங்கள அரசு, மறுபுறத்தில் சிங்கள மீனவர்களை தமிழர் தாயகத்தில் கொண்டு வந்து குடியேற்றுகின்ற, தொழிலில் ஈடுபடுத்துகின்ற வேலைகளை ஏன் செய்கின்றது? கொக்கிளாய், நாயாறு, முல்லைத்தீவு, வடமராட்சி என பல இடங்களில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. தமிழ் பகுதிகளில் வந்து தங்கியிருந்து மீன் பிடித் தொழிலில் சட்ட விரோதமாக ஈடுபட்டுச் செல்லுகின்ற சிங்கள மீனவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. தமிழர் கடலை சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்ற செயல் ஒரு புறம், மறுபுறத்தில் தமிழக மீனவர்களை படுகொலை செய்கின்ற வேலை நடக்கிறது.
தமிழக மீனவர்களை கைது செய்தால், அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சட்ட ரீதியாக அணுக வேண்டும். அதைவிடுத்து அவர்களை படுகொலை செய்கின்ற அதிகாரத்தை இலங்கை அரசுக்கு யார் அளித்தது? ஐ.நா மற்றும் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இன்னொரு நாட்டுப் பிரஜைகளை அதுவும் அப்பாவி தொழிலாளர்களை இப்படிப் படுகொலை செய்தது பாரிய மனித உரிமை மீறலாகும். பொளுளாதாரம் மற்றும் தொழில் சார்ந்து அணுக வேண்டிய இவ் விடயத்தில் தம்மை ஒரு கிரிமினல்களாக இலங்கை அரச படையினர் வெளிப்படுத்தியுள்ளமை புலப்படுகின்றது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த நிலையில், அந் நாட்டின் பிரஜைகளை கொன்று இலங்கை தன்னை யாரென நிரூபித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத் தீவுகள் சிலவற்றை சீனாவுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள நிலையில், அதே தினத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கையாக, சீனாவுக்கு ஆதரவாக, சீனாவின் தாக்குதலாகவே இப்படுகொலை நடந்திருப்பதாகவும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை கவனிக்க வேண்டிய விடயமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழக மீனவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் ஈழத்திற்கும் தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பில்லை. உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு இருந்தால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்பதையும் தமிழக மீனவர் படுகொலை மீண்டும் உணர்த்தியுள்ளது.
கனடா உதயனுக்காக தீபச்செல்வன்