(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“கனடா ஒரு பல்கலாச்சார நாடு. இங்கு உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த பல்வேறு இன, மத. மொழி சார்ந்த மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றன. இந்த மாகாணத்தின் முதல்வர் என்ற வகையில் நான் கடந்த சில வருடங்களாக அவதானித்தது என்னவென்றால் இங்கு பல வருடங்களாக இயங்கிவரும் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் மற்றும் வானொலிகள் ஆகிய தேசிய ஊடகங்களுக்கு இணையாக கடந்த அரை நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் கால்பதித்த பல்கலாச்சார ஊடகங்கள் ஊடகப் பணியாற்றுகின்றன. அவற்றின் ஊடகச் சேவையை முதல்வர் என்ற வகையில் நானும், எனது அமைச்சர்களும், ஏனைய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டு வருகின்றோம். அவற்றின் பயன்பாடுகளை நாங்கள் தெரிந்து கொண்டுள்ளோம்”
இவ்வாறு பபுகழாரம் சூட்டினார், ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்கள். கொரோனாவின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக கனடாவில் மத்திய அரசின் பிரதமர் அவர்களும் ஏனைய மாகாண அரசுகளின் முதல்வர்களும் தினந்தோறும் கனடாவின் தேசிய ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். கோவிட்-19 தொற்றின் பாதிப்புக்கள், அந்த பாதிப்புக்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமது அரசுகள் என்ன என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன, என்ற தகவல்களை அவர்கள் வழங்கிவருகின்றார்கள்.
இவ்வாறான ஊடகச் சந்திப்புக்களின் வரிசையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று காலை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பல்மொழிப் பத்திிரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களை ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக்போர்ட் அவர்கள் இணையவழி ஊடாக சந்தித்து உரையாடினார்.
முதலில் முதலவர் அவர்கள் தமது அரசின் கோவிட்-19 தொற்று மற்றும் அதன் பாதிப்புக்கள் போன்ற விடயங்களையும், தற்போது. பாவனைக்கு வந்துள்ள தடுப்பூசி வழங்கல் விடயமாக தமது மாகாண அரசாங்கம எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும்; எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை விளக்கினார்.
மேலும், தமது ஒன்றாரியோ அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரும் ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் சிறந்து சேவைகளை வழங்கும் முறைகள் பற்றியெல்லாம் விளக்கினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த கொடிய தொற்று நோய் காலத்தில் பல் கலாச்சார ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் சவால்கள் ஆகியன தொடர்பான எடுத்துக் கூறி, தனது நிர்வாகத்தின் கீழ், கனடாவின் தேசிய ஊடகங்களுக்கு வழங்குகின்றன வாய்ப்புக்கள் மற்றும் சலுகைகள் போன்று, பல்கலாச்சார ஊடகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து முதல்வர் அவர்கள் பல்லினப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை அளித்தார். குடிவரவு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பதிலளித்த முதல்வர் அவர்கள், கனடாவிலும் குறிப்பாக பெரிய மாகாணமான ஒன்றாரியோவிலும் அதிகளவில் வேலை வாய்ப்புக்கள் உள்ளதாவும், அதற்கு வெளிநாடுகளிலிருந்து தகுதியானவர்களை குடியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் படி தான் கனடியப் பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்
மொத்தததில் அன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அத்துடன் கனடாவில் செயற்பட்டு வரும் பல்கலாச்சார ஊடக நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள் கிட்டிய ஒரு அரச ஒன்றுகூடலாகவும் விளங்கியத என்றே கூறலாம்.