யாழ்ப்பாண நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பெற்ற நெடுந்தூர பஸ் நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.
நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்ட பலகை ஒன்று நேற்று முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து அனைத்து பலகைகளும் நேற்று அகற்றப்பட்டு சீரமைத்து சில தினங்களுக்குள் மீளவும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.