தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையால் களுவாஞ்சிக்குடியில் எருவில் மற்றும் சூரையடி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திரு. இ. சூரியகுமார் அவர்கள் கலந்துகொண்டு குறிப்பேடுகளை வழங்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக திரு. இ சூரியகுமார் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கும்போது பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்குக் குறிப்பேடுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் இப்பணி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக களுவாஞ்சிக்குடியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விரைவில் வழங்கி வைக்கப்பட உள்ளது.
இக்குறிப்பேடுகள் மாணவர்களின் கற்றலுக்கு உதவுவனவாக மாத்திரமல்லாமல் அவர்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரநடுகை தொடர்பான அக்கறையை வளர்த்தெடுக்கவும் உதவுகின்றன. இதற்கேற்ப குறிப்பேடுகளின் அட்டைகள் விழிப்புணர்வுப் படங்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் தாங்கியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.