உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
கனடாவில் நேற்று முன்தினம் 30ம் திகதி காலமான முன்னாள் கல்வி அதிகாரி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் கனடாவில் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததோடு பல சமூக, பண்பாடு மற்றும் தமிழ் மொழி சார்ந்த அமைப்புக்களோடும் தன்னை இணைத்துக் கொண்டு எமது மொழிக்காகவும் இனத்திற்காகவும் சேவையாற்றியவர். எப்போதும் மிகுந்த துடிப்போடு இயங்கிவந்த அவரது இழப்பு கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கும் கிளைகளைக் கொண்டியங்கும் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
இவ்வாறு கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டு அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:ஶ்ரீ
திடீர் மறைவுற்ற சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது கல்வியை பூர்த்தி செய்து கொண்ட பின்னர் ஆசிரியப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் இலங்கையின் பல பகுதிகளிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பின்னர் பதவி உயர்வு பெற்று வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றினார். அப்போது தனது நிர்வாகத்தின் கீழ் இருந்த பல பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஆசிரிய ஆசிரியைகளின் நலன்களுக்காவும் அருஞ்சேவையாற்றியவர் என்பது இங்கு குறிபிடத்தக்கது.
தொடர்ந்து 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடியேறிய அவர் அந்த நாட்டிலும் பாடசாலைகளின் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக இணைந்தார். பின்னர் பல அமைப்புக்களோடு இணைந்து பணியாற்றினார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றிய அவர் தொடர்ந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக்கிளையின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பெற்று பணியாற்றினார். பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக கிளைகளோடும் ◌தொடர்புகளைக் கொண்டு மிகுந்த விருப்புடன் தமிழ்ப் பண்பாட்டுப் பணியில் ஈடுபட்டு வந்த அமர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்களின் இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் திரு வினாசித்தம்பி துரைராஜா, அகில அமைப்பின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வட அமெரிக்கப் பிரிவின் தலைவர் திரு சிவா கணபதிப்பிள்ளை, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் கையெழுத்திட்ட அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.