-நக்கீரன்
மலேசிய தேசியப் பாதுகாப்பு நிதிக்காக இங்குவாழ் தமிழர்கள் அதிக நிதி வழங்க வேண்டும். மலேசியாவுக்கு எழுந்துள்ள ஆபத்தை நீக்குவதிலும் போக்குவதிலும் அதிகமாக பாடுபடவேண்டும் என்று இங்கு வாழ்கின்ற தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பேரறிஞர் அண்ணா கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் பேசியபோது மலேசியத் தமிழர்களை வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டார்.
தேர் அசைவதைப் போன்ற கம்பீர நடை, சிவாத தலைமுடி, கண்ணாடியைத் தேடாத முகம், வெற்றிலை-பாக்கு கரை படிந்த பற்கள், அழுக்கான வேட்டி, துண்டு அகலாத தோற்பட்டை, குன்றம் போன்ற உருவம், வாயைத் திறந்தாலே அடுக்கு மொழியில் வெளிப்படும் தமிழ், யார் என்ன கேட்டாலும் அடுத்த நொடியே மிடுக்கு நடையில் கேள்வியும் கேள்வியைக் கேட்டவரும் உடைபடும்படியான பதில், இவை யாவும் கலந்துதான் அண்ணா என்று படித்து அறிந்ததை நேரில் கண்டறியும் வாய்ப்பு மலேசியத் தமிழர்களுக்கு 1965 ஜூலை மாதத்தில் கிடைத்தது.
அந்த நேரத்தில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்க வாசகம் தலைமையில் கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் பேசியபோதுதான் மேற்கண்டவாறு தேசிய பாதுகாப்பு நிதிக்கு தமிழர்கள் அதிக நிதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
முதல் அதிபர் சுகார்னோ தலைமையிலான இந்தோனேசியா, மலேசியாவிற்கு எதிராக தடந்தோள் தட்டி, வீராப்பு காட்டிய நேரமது. அதனால்தான், மலேசியாவுக்கு எழுந்துள்ள ஆபத்தை நீக்குவதிலும் போக்குவதிலும் மலேசியத் தமிழர்கள் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அண்ணா.
அதே நேரத்தில், ஒரு சிலரின் உள்ளத்தில் ஊருக்கு உபதேசம் தேவையா என்று கேட்கத் தோன்றும்.
நான் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கிறவன் அல்லன். தமிழ் நாட்டில் நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன் அல்லேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கே இருக்கிற ஆளுங்கட்சியைக் கீழே இறக்குவதுதான் என் வேலை. இதைச் செய்வதிலே கொஞ்சமும் வெட்கமோ தயக்கமோ கொள்ளவில்லை என்ற அண்ணா, சொன்னபடி அடுத்த ஈராண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார்.
சுதந்திரம் வாங்கித் தந்தக் கட்சி என்னும் பெருமையுடனும் தேசிய அளவில் வலிமையுடனும் விளங்கும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஒரு மாநில ஆட்சியைக் கைப்பற்றிய முதல் மாநிலக் கட்சி என்னும் பெருமையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுக பெறப் போகிறது என்பதை தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்துதான் அண்ணா அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.
அந்த நேரத்தில் ஏறக்குறைய இரு வாரங்கள் தீபகற்ப மலேசியா முழுவதும் சுற்றி வந்தார். அண்ணா.
மதிக காஜாங் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அண்ணா பேசுவதற்கு முன், அந்தக் கிளையின் அந்நாளைய செயலாளர் பொன்.வேலு, வரவேற்புக் குழு சார்பில் அண்ணாவைப் பேச அழைத்தபோது அரசியலைத் தவிர்க்கும்படியும் அறிவியலைப் பேசுப்படியும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு முதல் நாள்தான் கிள்ளான் துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார் அண்ணா. மனித வாழ்க்கை முழுதும் விசைமயமாக மாறி வருவதாக அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்ட அவர், பொத்தானை அழுத்தினாலே வீட்டில் மாவு அறைக்கும் வேலை முதல் டன் கணக்கிலான பாரத்தை தூக்குவதுவரை எல்லாம் சுலபமாக நிறைவேறுகிறது என்றார்.
கம்பாரில் ஒரு சீனப் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசியபோது, கம்பார் என்ற பெயரைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து இது என்ன பாட்டுக்கொரு புலவன் கம்பன் பிறந்த ஊரா என்று நகைமிகப் பேசி, தானும் மகிழ்ந்து கூட்டத்திற்கு வந்தோரையும் சிரிக்க வைத்தாராம் அண்ணா.
அந்தப் பயணத்தின்போது, பேராக் மாநிலத்தில் ஓடும் பாரி ஆற்றில்(Sungai Pari) அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயர் பிபிபி கட்சி சார்பில் சீனிவாசகம் சகோதரர்களால் சூட்டப்பட்டது.
இன்று பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி மஇகா மூத்த தலைவர் டான்ஸ்ரீ சு.வீரசிங்கமும் சுயமரியாதை இயக்க மூத்தத் தலைவர் இரெ.சு. முத்தாயாவும் அண்ணாவைப் பற்றிய நினைவலைகளை மக்கள் ஓசையுடன் பகிர்ந்து கொண்டனர்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24