தமிழராகப் பிறந்து தமிழ்த் தொண்டாற்றிய எத்தனையோ பெருமக்கள் நெடுந்தமிழ் வரலாறு முழுக்க காணப்படுகின்றனர். ஆனால், வேற்று மண்ணில் தோன்றி தாம் சார்ந்த கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக தமிழ் மண்ணிற்கு வந்து, தமிழ் கற்க முனைந்து, தமிழ்ச் சுவையில் மகிழ்ந்து, தமிழினிமையில் திளைத்து அப்படியே அருந்தமிழ்ப் பணியாற்றிய தகைசால் பெருமகனார் வீரமாமுனிவரும் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!.
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680 நவம்பர் திங்கள் 8-ஆம் நாள் பிறந்த இவரின் இயற்பெயர், கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இளமையிலேயே எளிய வாழ்வை விரும்பிய இவர், கிறித்துவ சமய உணர்வு மிக்கவராகத் திகழ்ந்ததால், 18 வயதிலேயே இயேசு சபையில் சேர்ந்தார். அத்துடன் இலக்கிய தாகமும் சிறு வயதிலேயே இவரைத் தொற்றிக் கொண்டதால், உலக மொழிகளைக் கற்கும் ஆர்வம் இவருள் எழுந்தது. அதன் விளைவால் 30 வயதினுள் கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, போத்துக்கீசிய மொழி, ஃபிரான்சிய மொழி, ஜெர்மனிய மொழி, ஆங்கில, ஈரானிய மொழிகளிலெல்லாம் தேர்ச்சியடைந்தார். இவர், 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் பணிபுரிந்து, 4 ஆண்டுகள் கிறித்தவ சமயக் கொள்கைகளைக் கற்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர், கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709-ஆம் ஆண்டில் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இன்றைய இந்தியாவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள கோவாவிற்கு இவர் வந்தார். அப்பொழுது இந்தியா என்ற நாடே இல்லை. சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழர்வாழ் நிலத்திற்குச் செல்ல எண்ணி, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு என்னும் ஊருக்கு வந்து பின் மதுரை மாநகருக்கு 1710-இல் வந்து சேர்ந்தார்.
அந்த நாட்களில் தமிழர் பின்பற்றிய பண்பாட்டையும் கைக்கொண்ட மொழியுணர்வையும் கண்டு வியந்த வீரமாமுனிவர், தமிழ் மக்களிடையே கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக முதலில் தமிழைப் பயில முயன்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தார். சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியத்தைக் கற்று, இலக்கியப் பேருரைகள் ஆற்றுமளவிற்குப் புலமை பெற்றார். சமயப் பணியாற்ற வந்த இவர், தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டார்.
இலக்கியச் சுவடிகளை பல இடங்களுக்கும் சென்று தேடி தேடி எடுத்ததால்; ‘சுவடி தேடும் சாமியார்’ எனவும் இவர் அழைக்கப்பட்டார். அரிதான பல ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டதையும் இவர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் மொழிபால் கொண்ட மாறாக் காதலால், தன் பெயரையே சத்திய நாதன் என்று மாற்றிக் கொண்டார். அதுகூட சமற்கிருத சொல் என்பதால் பின்னர் வீரமாமுனிவர் என்று தம் பெயரை திருத்திக் கொண்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்ட இவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார், இம்முனிவர்,
கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மண்டலத்தில் கிரேக்கமும் இலத்தீன் மொழியும் செழிப்புடன் விளங்கியதால், மேலைநாட்டவரும் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே தமிழில் உருவான முதல் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக்கொண்டுவந்தார்.
அக்காலத்தில் தமிழிலக்கியம் இயற்றப்பட்ட ஓலைச்சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்கு பதிலாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் வேறுபாட்டை எடுத்துக்காட்ட ‘ர’ என்ற சேர்த்து எழுதுவது வழக்கம். ‘ஆ’ என எழுத ‘அர’ என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தன. காட்டாக, அ, ஆ என்பதற்கு ‘அ, அர’ என்றும் ‘எ, ஏ’ என்பதற்கு ‘எ, எர’ என்றும் இருந்த நிலையை மாற்றி அ, ஆ, எனவும் எ,ஏ எனவும் மாற்றம் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணமெல்லாம் அந்நாள்களில் கவிதையாகவே இருந்தன. சாதாராண மக்களால் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இம்முனிவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தவர் இவர். பேச்சு வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்ததை இவரின் சிறப்பான முயற்சி எனலாம்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். இன்பத்துப் பாலைப் பற்றி, ‘அது வெறும் காதலைப் பற்றியது’ என தவறாகப் புரிந்து கொண்டு, அந்தப் பிரிவை இலத்தீனில் மொழி பெயர்க்கத் தவறிவிட்டார். பொய்யாமொழியார் சமைத்த திருக்குறளில் இடம்பெற்றுள்ள இன்பத்துப் பால் பிரிவு, காதல் ஒழுக்கத்தையும் இருபாலருக்குமுரிய கற்பு நெறியையும் பற்றியது என்பதை பின்னர் உணர்ந்த வீரமாமுனிவர், அதையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கத் தவறியமைக்காக மிகவும் வருந்தினாராம்.
1728-இல் புதுவையில் ‘பரமார்த்த குருவின் கதை’ என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் ஜீன் டி லா ஃபெண்டைன் (1621-1695) என்னும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை இவர் தமிழில் மொழி பெயர்த்தார். இதுதான் தமிழில் முதல் முதலாக வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப ‘தேம்பாவணி’ என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச்சான்றாக உள்ளது. உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர் இந்தத் தமிழ் முனிவர். திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை என்பன இவரின் பிற நூல்கள்.
வீரமாமுனிவரின் தமிழிலக்கியப் படைப்புகளில் தேம்பாவணியைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இக்காப்பியம் மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைக்கவில்லை.
வேற்று மண்ணிலிருந்து தமிழ் மண்ணிற்கு வந்ததோ சமயப் பணிக்கு; புரிந்ததோ நிறைவான தமிழ்ப்பணி. பா நடையில் இருந்த தமிழை உரை நடைக்குத் திருப்பியதுடன் அதற்கு இலக்கணமும் படைத்த வீரமாமுனிவருக்கு தமிழன்னையின் மடியில் எந்நாளும் இடமுண்டு!
இல்லறம் ஏற்காமல் துறவு வாழ்க்கை வாழ்ந்த வீரமாமுனிவருக்கு பிப்ரவரி 4(1747) நினைவு நாள்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24