இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு தனது 73வது சுதந்திர தினத்தைத் தடல்புடலாகக் கொண்டாட ஆர்ப்பரிக்கும் சமகாலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிலநாட்களுக்கு முன்பு சிறிலங்காவை நோக்கி ஒரு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். பொறுப்புக் கூறல் நிலையில் இருந்து இலங்கை தோல்வி கண்டிருக்கின்றது என்றும் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் மாற்றுத் தெரிவுகளை நாட வேண்டும் எனவும் காட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பொறுப்பில் இருந்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்களின் முன்மொழிவுகள் இலங்கையின் பொறுப்புக்கூறலைச் சுட்டிக்காட்டி இறுக்கமாக இருந்தபோதும் 47 உறுப்பு நாடுகளும் ஆணையாளர்களின் முன்மொழிவுகளை நீர்த்துப்போக வைத்தன. இம்முறையும் இப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பினும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கம் மேற்குலக நாடுகளைக் கடுப்பாக்கியுள்ளது. ஆகவே சிலவேளைகளில் ஐ.நாவின் 46வது அமர்வின் தீர்மானத்தில் ஒருசில இறுக்கமான முன்மொழிவுகள் வரவும் வாய்ப்புள்ளது.
இந்தோ – பசுவிக் பிராந்தியம் வல்லரசுகளின் புவியியல் மற்றும் பொருளாதாரப் போட்டிக்குள் அகப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் ஆதிக்க அதிகாரப் போட்டிக்குள் பழந்தமிழராகிய எமது அரசியல் அபிலாசைகளும் பகடைக்காயக்கப்படும் அபாயம் அதிகரித்துக்கொண்டே போகின்றது. சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவில் அதிகரித்துக்கொண்டே போவதோடு கடன்களைக் கொடுத்து சிறிலங்காவைத் தனது நீண்ட காலப் பிடிக்குள் வைத்திருப்பதே சீனாவின் வியூகம். சீனாவின் மூலோபாயங்களை உற்று நோக்கினால், பொருளாதார நலன்களுக்கு அப்பால் இராணுவ நலன்களும் அடங்கியுள்ளது போலத் தென்படுகிறது. இலங்கையின் தீவுப்பகுதிகளில் ஏவுகணைகளுடன் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான வாய்புகளும் உள்ளது. தெற்கை ஆக்கிரமித்த சீனா தற்பொழுது தமிழர் வாழும் வடக்குக் கிழக்கிலும் அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள அரசின் ஆதரவுடன் தனது காலை ஊன்ற ஆரம்பித்துள்ளது.
சிங்களப் பேரினவாதிகள் மகாவம்ச மாயைக்குள் மூழ்கி பௌத்த மமதையில் நின்று தமிழர்களைக் கொன்றொழித்துத் தமிழர் தாயகநிலங்களைக் கபளீகரம் செய்து, வடக்குக்கிழக்கு தமிழர்தேசங்களில் சிங்களவர்களை இராணுவ பலத்துடன் குடியமர்த்தி முழு இலங்கைத்தீவினையும் சிங்கள பௌத்த நாடாக்கும் எத்தனிப்பானது பொருளாதார நலம் சார்ந்த பிற சக்திகளின் துணையுடனே நடைபெறுகின்றது.
ஐ.நாவிலும் சரி சர்வதேச அரசியலிலும் சரி ஈழத்தமிழர்களை கறிவேப்பிலை போலப் பாவிக்கும் நிலைதான் இன்று உள்ளது. சீனா தனது முதலீடுகளை சிறிலங்கவில் மேலும் அதிகரிக்கும் போது இந்தியாவும் மேற்குலகும் புறம் தள்ளப்படும் நிலை ஏற்படும். அப்பொழுது ஈழத்தமிழர்கள் பூகோள அரசியலில் ஒரு முக்கிய பங்காளிகளாவது தவிர்க்கமுடியாததாகும்.
2009ம் ஆண்டு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடதுருவம் தென்துருவம் என வேறுவேறு திசைகளில் பயணித்த புலம்பெயர் அமைப்புக்களும் தாயக அரசியல் கட்சிகளும் முதற்தடவையாக ஒன்றிணைந்து கூட்டு முன்மொழிவுகளை ஐ.நாவிற்கும் ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் மூலக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளனர். 12 வருடங்களுக்குப் பின்னர் இந்தக் கூட்டு முயற்சி என்பது தமிழர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தாலும் இன்னும் ஒருசில புல்லுருவிகள் எமது மத்தியில் இருந்துகொண்டு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைச் சீரழிப்பபவர்களாகவே உள்ளனர். பச்சோந்தி அரசியல் செய்பவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டுமாயின் மேலும் பல அமைப்புக்கள் நேர்கோட்டில் உத்வேகத்துடன் பயணிக்க வேண்டியது அவசியம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கல் நினைவுத்தூபி இடித்தழிப்பு:
சனவரி 8, 2021 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாக்கல் நினைவு நினைவுச்சின்னம் சிறிலங்கா அரச அதிகாரிகளால் புல்டோசர் மூலம் தகர்த்து அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவத்தால் 2009ல் இனவழிப்புச் செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் தமிழ் மாணவர்களால் கட்டப்பட்டது. ஒரு நினைவுச்சின்னத்தை அழிக்கும் இந்த செயல் ஆனது சிறிலங்கா அரசாங்கத்தின் தவறுகளின் ஆதாரங்களை அழிக்கும் வன்மம் நிறைந்த செயலாகும் ஆகும்.
இராணுவ ஆக்கிரமிப்பும் (Militay Occupation), பயங்கரவாத புலனாய்வுத் துறை (Terrorist Investigation Department), மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளால் (Criminal Investigation Division) நடந்துகொண்டிருக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்:
தொடரும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள்: பெரும்பான்மை-சிங்கள இராணுவத்தின் பெரும்பாலான பிரிவுகள் வடகிழக்கின் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அரசியல் எதிரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது பாலியல் பலாத்காரம், அச்சுறுத்தல், கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
30 ஆகஸ்ட் 2020 அன்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (I.T.J.P) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களைத் தேடுவதால் இளம் தமிழ் ஆர்வலர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் மட்டும் இதுபோன்ற பதினைந்து பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம். (ITJP)
தொல்பொருள் திணைக்களத்தால் நடந்துகொண்டிருக்கும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மத மாற்றங்கள்:
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கமால்குணரத்ன தலைமையில் சனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷ பௌத்த மகா சங்கத்தை இணைத்து கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் நோக்கத்தில் ஒரு தொல்பொருள் பணிக்குழுவை மே மாதம் அமைத்தார்.
பௌத்த கோவில்கள் தமிழ்க் குடியிருப்பாளர்களின் அனுமதியின்றி (ஈழத்தமிழர்களின் பூர்வீக வசிப்பிடங்களில்) கட்டப்படுவருகின்றது. பலதலைமுறையாக வாழ்ந்த தமிழர்களின் பகுதிகளை சிங்களமயமாக்கும் நோக்குடன் மட்டுமே இந்த பணிக்குழு முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. தமிழருக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்காகத் தொல்பொருளியல் எச்சங்கள் நிலத்தடியில் இருப்பதாகக் காரணங்காட்டி தமிழர்களின் நிலங்கள் சுரண்டப்படுகின்றது. வடகிழக்கு பகுதிகள் முழுவதிலும் உள்ள சிங்கள குடியிருப்புகள் பெரும்பாலும் ஒரு இராணுவ முகாமுக்குள் ஆரம்பத்தில் ஒரு சிறிய புத்தர் சிலை அமைப்பதன் மூலம் தொடங்கப்பட்டு பின்னர் அது பெரும் பௌத்த விகாரைகளாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. சிங்கள குடியேறிகள் இறுதியாக பௌத்த பேரினவாத அரசின் ஆதரவுடன் தமிழப் பிரதேசங்களுக்கு நகர்த்தப்படுகிறார்கள்.
அண்மையில் எம் கண்முன்னே நடைபெற்ற ஒரு உதாரணம்: முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் அய்யனார் புராதன தமிழ் இந்துக் கோவிலில் தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் இராணுவத்துடன் வந்த இலங்கையின் தேசிய பாரம்பரிய அமைச்சர் விதுரா விக்ரமநாயக்க தலைமையில் திரிசூலம் பிடுங்கி எறியப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டது. பௌத்தர்கள் எவரும் வாழாத ஒரு தமிழ்ப் பகுதியை வன்கவர்ந்து புத்தர் முளைத்துள்ளார். அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை வைப்பதற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் மக்களின் இலக்கும் அரசியல் அபிலாசையும்:
சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபரான நந்தசேன கோத்தபாய ராஜபக்ச சிறீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்தை இன்னும் ஒருசில தினங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகும் நிலையில், ஈழத்தமிழ் மக்களால் இந்த நாள் ஒரு கரிநாளாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பௌத்த பேரினவாதிகளின் ஒற்றையாட்சி முறைமைக்குள் நின்று அடக்குமுறைக்கு ஆளாகமுடியாது. தமிழர் சுயமரியாதையுடன் வாழவேண்டுமானால் பிரிந்துசென்று வடக்குக் கிழக்கு இணைந்த பாரம்பரிய எமது பிரதேசத்தில் தன்னாட்சிகொண்ட தனியரசை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தனித் தமிழீழத் தீர்மானமானது 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்களாணையைப் பெற்றது.
ஈழத்தமிழ் மக்கள் தங்கள் நிரந்தர அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இனவழிப்பாளர்களை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதோடு பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.
‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
‘’அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை”