(மன்னார் நிருபர்)
(04-02-2021)
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(4) காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்றது.
-சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வின் முதல் நிகழ்வான தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
-தேசியக்கொடியினை பிரதம வருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேச விடுதலைக்காக உயிர் நீத்த அனைவருக்கும் அமைதி பிரார்த்தனை இடம் பெற்றது. பின் நிகழ்வுகள் ஆரம்பமானது.
வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் சர்வ மத தலைவர்களினால் சமாதான புறா மற்றும் ஐதரசன் வாயு நிரம்பிய பலூன் பறக்கவிடப்பட்டதோடு சர்வ மத தலைவர்கள் மற்றும் விருந்தினர்களினால் சுதந்திர தின செய்தி வழங்கப்பட்டது.
-அதனைத்தொடர்ந்து நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-மேலும் மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட மூலிகைத்தோட்டம் திறந்து வைக்கப்பட்டதோடு,மர நடுகை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மாவட்டச் செயலக பணியாளர்கள், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.