-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.04:
63 ஆண்டு கால சுதந்திர மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்-திற்கும் மறுமலர்ச்சிக்கும் உரிய தலைவராக மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)யின் தேசியத் தலைவர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி திகழ்கிறார்.
மலேசியாவின் தற்கால அரசியல் புதிய வடிவத்தையும் மாறுபட்ட பாங்கையும் எட்டியுள்ளது. நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான மலாய் இன மக்களின் அரசியல் அதிகாரத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் போக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் மூன்றாவது இனமாகவும் சிறுபான்மைச் சமுதாயமாகவும் உள்ள இந்தியர்களின் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலமும் சமூக, பொருளாதார, கல்வி, ஆன்மிக நிலையும் கேள்விக்குறி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசிய இந்தியர்களின் அரசியல் எதிர்காலமும் சவாலுக்கு ஆளாகியுள்ளது.
அதன் வெளிப்பாடாகத்தான், கடந்த ஆட்சியில் நான்கு முழு அமைச்சர்கள் இடம்பெற்றிருந்த நிலை மாறி, தற்போதைய அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதைப்போல கடந்த கால தேசிய முன்னணி ஆட்சியில் துணை அமைச்சர்களாக நால்வர் இடம்பெற்றிருந்த நிலையில், தற்பொழுது ஒருவர் மட்டுமே பொறுப்பு வகிக்கிறார்.
இந்திய இளைய சமுதாயத்தின் வேலை வாய்ப்பு, உயர்க்கல்வி வாய்ப்பு, வர்த்தக-தொழில்முனைப்புக்கான சூழல் யாவும் பெரும் ஐயத்திற்குள்ளாகி உள்ள இன்றைய நிலை குறித்தும் எச்சரிக்கை செய்து வருகிறார் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி.
மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய ஏழு விழுக்காட்டினராக இருக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம், எதிர்காலத்தில் நான்கு-ஐந்து விழுக்காட்டு அளவுக்கு சரியக்கூடிய அபாயம் இருப்பதை எடுத்துக்காட்டி இப்போதே இந்தியர்கள் விழிப்படைய வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி எச்சரித்து வருகிறார். இதன் தொடர்பில், இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் முனைப்பும் காட்டி வருகிறார்.
சோழ மண்டலத்தை ஆண்ட பெருமன்னனான இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றி ஆட்சியை நிறுவிய கடாரம் என்னும் பகுதி மலேசியாவின் வட பகுதியில் உள்ளது. நவீன மலேசியாவில் அதன் பெயர் கெடா மாநிலம்.
அந்த மாநிலத்தில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருநாளின்போது விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதைப்போல இரு ஆலயங்கள் அந்த மாநில அரசால் அடுத்தடுத்து உடைத்து அகற்றப்பட்டன. அவற்றுக்கான மாற்று ஏற்பாடு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசு சிறிதும் அக்கறைப்படவில்லை.
நாடு விடுதலை அடைந்த காலக்கட்டத்திலும் அதற்கு முன்பும் மலேசியாவின் பொருளாதாரம் தோட்டத் தொழிலை சார்ந்திருந்தது. முதலில் இரப்பர் உற்பத்தி மூலமும் அடுத்த செம்பனை உற்பத்தி மூலம் மலேசியா பொருளாதார மேம்பாடு அடைவதற்காக பேரளவில் பாடுபட்டவர்கள் இந்திய தோட்டத் தொழிலாளர்கள். அப்படிப்பட்ட பாட்டாளி பெருமக்களின் வழிபாட்டுத் தலங்களின் இட உரிமையைக் காரணம் காட்டி கெடா மாநில அரசு அகற்றியதற்கு, குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தமிழர்களின் ஆன்மிக வாழ்க்கைக்கு துணைபுரிந்த அந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டதற்கு பேரளவில் மறுதலித்தவர் பொன்.வேதமூர்த்தி.
அதைப்போல இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் பராமரிப்புக்கும் மத்தியக் கூட்டாட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பொன்.வேதமூர்த்தி.
அரசாங்க வேலைவாய்ப்பிலும் இந்தியர்களின் மக்கள் தொகை விகிதாச்சார அளவிற்கு ஏற்ப வாய்ப்பு கிட்டுவதில்லை. இது குறித்தெல்லாம் இந்திய இளைஞர்களிடையே எடுத்துக்கூறி, கல்வியிலும் தொழிற்கல்வி திறன்பயிற்சியிலும் இந்திய இளைஞர்கள் அக்கறையும் முனைப்பும் காட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பொதுவாக, பொன்.வேதமூர்த்தியின் அரசியல் பயணம் இளைய சமுதாயத்துடன் இணைந்துள்ளது. கல்வி ஒன்றுதான் எதிர்கால மீட்சிக்கான ஒரேவழி என்பதை வாய்ப்பு கிடைக்குபொழுதெல்லாம் அவர் எடுத்துச் சொல்கிறார்.
மற்ற தலைவர்கள் நிகழ்கால அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதைப் போல அல்லாமல், இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலவாழ்வுக்கு இவர் முன்னுரிமை கொடுத்து வருகிறார். அதனால்தான், மலேசிய முன்னேற்றக் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டம், கருத்தரங்கம் யாவும் இளைய சமுதாயத்தை மையமிட்டே நடத்தப் படுகின்றன.
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டுவரும் பலதரப்பட்ட சிக்கலும் ஆரம்பம் முதலே தொடர்கின்றன. இதனால்தான், ஹிண்ட்ராஃப்(HINDRAF-Hindu Rights Action Force) என்னும் சமூக-அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டபோது, அது மாபெரும் எழுச்சியைக் கண்டது. 2008 பொதுத் தேர்தலின்போது, மலேசியாவில் அதிரடி மாற்றம் ஏற்பட்டதற்கு ஹிண்ட்ராஃப் இயக்க எழுச்சிதான் காரணம்.
இந்த ஹிண்ட்ராஃப் எழுச்சிக்காக உள்ளும் புறமும் பாடுபட்ட தலைவர் பொன்.வேதமூர்த்தி. பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட தமிழ் தோட்டப் பாட்டாளிக்காக பிரிட்டனில் வழக்கு நடத்தி, அதை ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையம்வரை கொண்டு சென்றார்.
கடந்த ஆட்சியில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், தேச ஒற்றுமைக்கு சிறப்பாக செயல்பட்ட பொன்.வேதமூர்த்தி, பொதுவாக நலிந்த மக்களின் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடக்கூடியவர் என்பதால், நாட்டின் பூர்வகுடி மக்களுக்காகவும் அயராது செயல்பட்டார்.
இதற்காக, 2019 ஏப்ரல் முதல் வாரத்தில், பூர்வகுடி மக்களின் மறுமலர்ச்சிக்காக அப்போதைய பிரதமர் துன் மகாதீரின் ஒத்துழைப்புடன் தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தார். 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுதந்திர மலேசியாவில் பூர்வகுடி மக்களுக்காக தேசிய அளவிலான மாநாட்டை நடத்திய அமைச்சர் இவர் மட்டும்தான். இந்தப் பூர்வகுடியினர், பெரும்பாலும் காடுகளிலேயே வசிப்பவர்கள்.
இப்பொழுது நாடு கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும், நான்காவது தொழிற்புரட்சியை நோக்கிதான் நாடு செல்கிறது. அதனால், இந்திய இளைஞர்களும் உயர்க்கல்வி மாணவர்களும் கல்வித் தகுதியுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கல்வியிலும் தொழில்பயிற்சியிலும் அக்கறைக் காட்ட வேண்டும் என்று இவர் வலியுறுத்தி வருகிறார்.
222 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலேசியாவில், 64 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய வாக்காளர்களாக இந்தியர்கள், குறிப்பாக எம்ஏபி கட்சியினர் இருப்பதால், இதன் தொடர்பிலான விழிப்புணர்வை இளைய சமுதாயத்தில் எடுத்துரைத்து வருவதுடன் மக்கள் தொகை குறித்த எச்சரிக்கையையும் விதைத்து வருகிறார்.
நாடு 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்ஏபி கட்சியை சீரமைத்துள்ளார். சமூக அக்கறை கொண்டவர்களையும் எழுச்சிமிக்க இளைஞர்களையும் கொண்டு புதிய தலைமைத்துவத்தை வடிவமைத்துள்ளார்.
அதன்படி வழக்கறிஞர் இரவீந்திரன் சண்முகம் கட்சியின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சுகுமான் நாராயணன் மோகன் எல்லப்பன் முனைவர் அ.குமரன் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மலேசிய முன்னேற்றக் கட்சி இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலனை முன்னுறுத்தி தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடர்கின்றது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24