ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் கூறுகின்றார்
“தற்போதைய நோயின் தாக்கம் நிறைந்துள்ள காலத்தில் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு வீடுகளை விட பாடசாலைகளே தற்போது பாதுகாப்பு அதிகம் நிறைந்த இடமாக விளங்குகின்றது. எனவே தான் எமது அரசாங்கம் பாடசாலைகளில் நேரடியாக கல்வி கற்பதைத் தூண்டி வருகின்றது. எனவே பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.”
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மாகாண கல்வி அமைச்சர். நேற்று பிற்பகல் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பல் மொழி ஊடகங்களின் பிரதிநிதிகளையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இணையவழி ஊடாக சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த ஊடகச் சந்திப்பின் இணைப்பாளராக விளங்கினார்.அங்கு அமைச்சர் மேலும் பேசுகையில், எமது மாகாண முதல்வரின் தலைமைத்துவத்தின் கீழ் நான் மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்ற வகையில் எனது பணிகளைச் செய்துவருவதில் மகிழ்ச்சியடைகின்றேன. தற்போது நாம் திறந்து வைத்துள்ள பாடசாலைகளில் 10 இல் 8 பாடசாலைகள் எவ்விதமான நோய்த் தொற்றும் இன்றி பாதுகாப்பாக உள்ளன. எமது பாடசாலைகளின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏனைய பணியாளர்களையும் கவனிக்க வைத்திய தாதிகள் கடமையாற்றுகின்றனர். எனவே நாம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மாணவர்களுக்கு பாதுகாப்பானதும் உறுதியானதுமான முகக் கவசங்களை வழங்குகின்றோம். நாமும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின்படியே நடக்கின்றோம்
பள்ளிச் சூழலை கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒன்ராறியோ அரசு மேலதிக நிதியினை வழங்குகிறது. அத்துடன் புதிய ஏற்பாடுகளாக பல விடயங்களை அறிமுகம் செய்துள்ளோம். இவை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு தான் அறிமுகம் செய்யப்படுகின்றன.
கனடிய மத்திய அரசின் கோவிட்-19 தொற்றிலிருந்து பள்ளிச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 381 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இந்நிதியானது, பாடசாலைகளின் உள்ளே சுத்தமான காற்றோட்ட வசதிகளைச் செய்யவும், இணையவழிக் கற்றலுக்கான ஆதரவினை வழங்கவும், மாணவர்களின் உளநலத்தை மேம்படுத்தவும், மேலதிகமான பணியாட்களை நியமிக்கவும் பயன்படுத்தப்படும். பள்ளிகளுக்கு வழங்கப்படும் 1.6 பில்லியனுக்கும் அதிகமான இப்புதிய நிதியுதவி மூலம், மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் குடும்பங்கள் பாதுகாக்கப்படும்.
பெப்ரவரி 08, 2021 முதல் ஒன்ராறியோவின் பல பகுதிகளில் 520,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கவுள்ளனர். மீளவும் கல்விக்கூடங்களை ஆரம்பிப்பதற்கு ஏதுவாகவும், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதியும், நிபுணர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்ராறியோ அறிமுகப்படுத்தியுள்ளது:
– 1 முதல் 3ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வகுப்பறையிலும், போதியளவு தனி மனித இடைவெளியைப் பேண முடியாத பாடசாலையின் வெளிப்புறங்களிலும் முகக்கவசம் அணிதலை கட்டாயமாக்குதல், மேல்நிலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், பாடசாலை ஆரம்பிக்கும் முன்பு மாணவர்கள் ஒன்றாக உள்ளே செல்வது, பாடசாலை முடிந்த பின் மாணவர்கள் ஒன்றாக வெளியேறுவது போன்றவற்றைத் தவிர்த்து புதிய வழிமுறைகளைக் கொண்டுவருதல், தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் தட்டுப்பாட்டை சமாளிக்க, 2021ஆம் ஆண்டில் ஆசிரியப் பட்டப்படிப்பை நிறைவு செய்யவிருக்கும் தகுதியானவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்களை வழங்கி பணிக்கமர்த்துதல்.