இலங்கையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், இன ஒதுக்கல், அரசியல் கைதிகள் விடுதலை,போரில் காணாமல் போனவர்களுக்கு நீதி விசாரணை ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அங்குள்ள தமிழர்களும், இசுலாமிய மக்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்து கொள்வதோடு, சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் என உறுதியாக கூறுகிறேன்.
ஈழத்தில் 2009 இன அழிப்பு போருக்கு பிறகு, சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளால், தமிழர்கள், தமிழ் இசுலாமியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும், தமிழர்களின் நிலங்கள், வாழ்விடம் ஆகியவை அபகரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. தெருக்களுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டுதல், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைப் பறித்துக்கொண்டு, அவற்றில் பவுத்த விகாரைகளை எழுப்புதல், தமிழர்களின் ஆலயங்களை அழித்து ஒழித்தல் போன்றவற்றின் மூலம் தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை, சுவடு தெரியாமல் அழிக்கின்ற வேலைகளை இலங்கை அரசு, ராணுவத்தின் துணை கொண்டு செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, புத்தர் பெருமான் வழியில் அமைதியையும், ஒற்றுமையும் உருவாக்கக் கூடிய புத்த பிக்குகளே, தமிழர் இன ஒதுக்கலை தொடர்ந்து ஆதரித்தும், பேசியும் வருவது வேதனையளிக்கிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில், பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை இலங்கை ராணுவ உதவியுடன் கைப்பற்றிக் கொண்ட சிங்கள பவுத்த பிக்குக் கொலம்ப மேதாலங்க தேரர் என்பவர், அந்த ஆலயத்தை ‘குருகந்த் ரஜமஹா’ எனும் பவுத்த விகாரையாக மாற்றிக் கொண்டார். அந்த புத்த புக்கு மறைந்தவுடன், தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் புத்த பிக்குவின் உடலை வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழர் வாழும் பகுதிகளில், நில அபகரிப்பு, உரிமை மறுப்பு போன்ற சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசு பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
சிங்களபேரினவாத அரசின் அராஜக போக்கை கண்டித்து, மனித அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், இசுலாமிய அமைப்புகள், இளைஞர்கள், இலங்கையிலே கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறியும், காவல்துறையின் நெருக்கடிகளையும், தடைகளையும் மீறியும், தமிழர்கள் இந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒடுக்கப்பட்ட இனத்தின் மீதான அநீதிகளுக்கெதிரான இந்த போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. தமிழர்களின் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்து கொள்வதோடு, சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.