பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடைபயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான் இங்கு உரையாற்றுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
அவர்அங்கு உரையாற்றிய காணொளியும் இங்கு காணப்படுகின்றது
அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது
“சபாநாயகர் அவர்களே,
இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காக நடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர் தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள். இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலே அவர்களது நோக்கம்.
சபாநாயகர் அவர்களே, இலங்கைத் தீவு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து குற்றம்புரிவோர் தண்டிக்கப்படாத நிலை காணப்படுவதுடன், சட்டத்தின் ஆட்சியும் செயலிழந்துள்ளது.
இலங்கை அரசு கடந்த சில மாதங்களில் மட்டும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்து, போர்க் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, முஸ்;லிம் சிறுபான்மையினரின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்ததுடன், குடிசார் அமைப்புக்கள் பலவற்றை இராணுவம் பொறுப்பேற்றும் உள்ளது.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டுமெனக் கடந்த வாரம் முடிவு செய்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர், இலங்கை தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இன்றிச் செயற்பட அனுமதிக்கப்பட்டால் முன்னரைப்போன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறுமென எச்சரித்துள்ளார்.
ஆகையால், இலங்கைத் தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்”