(மன்னார் நிருபர்)
(07-02-2021)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பூமலந்தான் கிராமத்தில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணியில் வாழ்ந்து வந்த 11 குடும்பங்களுக்கு குறித்த காணிகள் நன்கொடையாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரம் குறித்த காணிகளில் வாழ்து வந்தவர்களின் பெயரிற்கு மாற்றப்பட்டு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பூமலந்தான் கிராமத்தில் மக்கள் மீள் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
குறித்த பகுதியில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணிகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 11 குடும்பங்களுக்கு குறித்த காணிகளை காணியில் வாழ்ந்து வருபவர்களுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கும் வகையில் அவர்களின் பெயரில் வழங்க மன்னார் ஆயர் இல்லம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் உதவியுடன் குறித்த காணிகளுக்கான உறுதி எழுதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரம்(உறுதி) வழங்கும் நிகழ்வு மடு வீதியில் அமைந்துள்ள புனித சிந்தாத்துரை அன்னை ஆலயத்தில் அருட்தந்தை வி.றொசான் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மடு உதவி பிரதேசச் செயலாளர் திருமதி வினோஜிதா , மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்துகொண்டு 11 குடும்பங்களுக்குமான காணி அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் பெயரிற்கு மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளில் அவர்கள் வீடுகள் அமைத்துள்ள நிலையில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.