மன்னார் நிருபர்
(07-02-2021)
‘மிஹிந்து நிவஹன’ திட்டம் பௌத்த துறவிகளின் பெற்றோருக்கு மாத்திரமன்றி முழு சாசனத்திற்கும் நிழல் தரும் ஒரு திட்டமாகும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.02.07) தெரிவித்தார்.
சியாம்பலாண்டுவ புத்தம புரான ரஜமஹா விகாரையில் நடைபெற்ற ‘மிஹிந்து நிவஹன’ திட்டத்தின் ஆரம்ப விழாவில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்காக தமது குழந்தைகளை சாசனத்திற்கு தியாகம் செய்த பெற்றோரின் நினைவாக, இந்த மிஹிந்து நிவஹன’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த திட்டம் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் பௌத்த விவகாரம் தொடர்பான திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
ஹெவன்வெரவ கிராமத்தின் புத்தம கோசள மற்றும் புத்தம நந்தரதன தேரர்களின் பெற்றோரான டீ.எம்.சீலவதி மற்றும் கிரிபண்டா ஆகியோருக்காக நிர்மாணிக்கப்படும் ‘மிஹிந்து நிவஹன’ விற்கான அடிக்கல் இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ மற்றும் இந்திக அநுருத்த ஆகியோரினால் நாட்டப்பட்டது.
இதன்போது கௌரவ பிரதமரினால் இத்திட்டத்தின் சன்னஸ் பத்திரம் இலங்கை ராமஞ்ஞா மஹா நிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய மகுலேவே ஸ்ரீ விமல தேரரிடம் கையளிக்கப்பட்டது.
முதல் கொடுப்பனவு காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில், கௌரவ பிரதமர் முதல் கொடுப்பனவு காசோலைகளை பயனாளிகளான என்.எம்.விஜேகோன் பண்டா, பி.ஆர்.எம் குணசேகர மற்றும் ஏ.எம்.சோமசிரி ஆகியோருக்கு வழங்கினார்.
குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
நம் நாட்டின் வரலாற்றில் பௌத்த சாசனத்திற்கு இதுபோன்ற புண்ணிய நிகழ்வு நிகழ்த்தப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். இந்த பாரிய வீட்டுத்திட்டத்தை எங்கள் பௌத்த துறவிகளின் பெற்றோருக்காக ஒதுக்குகிறோம்.
இந்த திட்டத்திற்கு ‘மிஹிந்து நிவஹன’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த நாட்டிற்கு பௌத்தத்தை கொண்டு வந்த மாபெரும் மிஹிந்து தேரரின் நினைவாக இந்த வீட்டுத் திட்டத்திற்கு நாங்கள் பெயரிட்டுள்ளோம்.
இந்த பெயரை வைப்பதற்கான காரணத்தை விளக்கியதற்கான காரணம் ஏனெனில் இது மிக முக்கியமான விடயம். சில நேரங்களில் மிஹிந்து எனக் குறிப்பிட்டவுடன் சிலர் மஹிந்த என்று எண்ணக்கூடும். எனது பெயரும் அது என்றபடியால்.2015 ல் நாங்கள் தேர்தலில் தோல்வியுற்று வீட்டிற்குச் சென்றபோது எனக்கு நினைவிருக்கிறது, நல்லாட்சி அரசாங்கம் எங்கள் பெயரில் உள்ள அனைத்தையும் பழிவாங்கியது.
நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை அவர்கள் நிறுத்தினர். புத்தம போன்று பல கஷ்டப் பிரதேசங்களில் ஆரம்பித்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அவர்கள் நிறுத்தினர்.
அது மட்டுமல்லாமல், இந்த பகுதிகளுக்கான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நல்லாட்சியின் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினோம். உங்கள் கிராமத்திற்கு செல்லும் வீதிகளை மீண்டும் உருவாக்கத் தொடங்கினோம். உங்கள் நீர் பிரச்சினையையும் நாங்கள் தீர்ப்போம்.
மஹிந்தோதய ஆய்வகங்களின் பலகைகளை அகற்றியது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான திட்டத்தையும் நிறுத்தினர். எனவே, இங்கே ‘மிஹிந்து’ என்பது ஒரு பெரிய நாகரிகத்திற்கு அடித்தளம் அமைத்த மிஹிந்து தேரரின் நினைவாக வழங்கப்பட்ட பெயர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாமல், முந்தைய நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் பௌத்த சாசனத்தையும் பழிவாங்கியது. தலதா பெரஹரவின் போது யானைகளை வழங்குவதையும் மட்டுப்படுத்தியது. தற்போது இதனை பலரும் மறந்து போயுள்ளனர்.
அதுமாத்திரமின்றி பெரஹராவில் ஈடுபடுத்தப்பட்ட யானையை எப்.சி.ஐ.டி. க்கும் அழைத்து சென்றனர். தம்புள்ள ரஜமஹா விகாரையின் உண்டியலுக்கு சீல் வைத்தனர்.
இவ்வாறானதொரு யுகத்தை கடந்து நாம் தற்போது அதனை மாற்றி வருகின்றோம். அன்று பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்தை மாற்றி இன்று பௌத்த துறவிகளின் பெற்றோருக்கு நிழல் தரும் வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம்.
இத்திட்டத்திற்காக இவ்வாண்டில் 12 ஆயிரம் இலட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இந்நிதியை கொண்டு 2000 வீடுகளை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.துறவிகளுக்கு வழங்குவது என்பது நாட்டிற்கு வழங்கப்படும் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம். அவர்களுக்கு வழங்கப்படுவதை ஒரு சுமையாக கருதுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த நாட்டின் எதிர்காலம் மற்றும் தேசத்திற்கான முதலீடாக நாங்கள் இதனை கருதுகிறோம்.
சாசனத்தில் துறவிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இளம் துறவிகள் துறவற வாழ்க்கையிலிருந்து வெளியேறுவது இன்று இந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு துறவு வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கு காரணம் தமது பெற்றோருக்கு தங்குவதற்கு ஒரு வீடேனும் இல்லை. எமக்கு ஒரு வேலைவாய்ப்பை பெற்று தாருங்கள் எமது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்கு என இளம் துறவிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் மஹாநாயக்க தேரர்களும் பொறுப்புவாய்ந்த அனைத்து துறவிகளும் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.இன்று ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் போது சாசனத்திற்கு ஒரு குழந்தையை தியாகம் செய்வது என்பது மிகவும் கடினம்.
இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை சாசனத்திற்கு தியாகம் செய்யும் பெற்றோருக்கு எங்கள் மரியாதையை செலுத்த வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். ஒரு குடும்பத்தில் குழந்தைகள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் சாசனத்திற்கு செல்லும் பிள்ளைகளும் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துறவிகளின் அந்த சுமையை குறைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் தேரர்களின் ஆலோசனையை எப்போதும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முந்தைய அரசாங்கத்தைப் போல அல்ல. நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டன.
மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் நாட்டின் நலன் கருதி தேரர்கள் வழங்கிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டோம். நாட்டின் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் எந்தவொரு நாங்கள் ஒருபோதும் உருவாக்க மாட்டோம். அவ்வாறு செய்ததும் இல்லை.
இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை 30 ஆண்டுகளாக அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம். அமைதி நிலைநாட்டப்பட்டது. அபிவிருத்தி தொடங்கியது.அதன்பின்னர், நல்லாட்சியின் காலத்தில் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் அமைதியைக் கொண்டுவருவதில் கருவியாக இருந்த போர்வீரர்கள் மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நாட்டில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து திட்டங்களும் தயாராக இருந்தன. இது மக்களுக்கு நில உரிமை மற்றும் இந்த நாட்டில் வாழும் உரிமையை பறிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகினோம்.நாங்கள் எங்கள் நாட்டின் உரிமைகளை மக்களுக்கு வழங்கும் அரசாங்கம். இதனை தேரர்கள் போன்றே நாட்டை நேசிக்கும் மக்களும் மனதில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், நாட்டின் சுதந்திரத்திற்காக தைரியமான முடிவுகளை எடுத்துள்ளோம். எனவே, நாட்டை நேசிக்கும் துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த அரசாங்கத்தில் எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாரிய முடிவுகளை எடுத்த குழு நாங்கள்.
உங்கள் ஆதரவு மற்றும் புரிதலுடன் மட்டுமே நாங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்த முடியும்.மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்தது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
அன்று மிகவும் கஷ்ட பிரதேசமாக விளங்கிய கிராமங்களில் ஒன்றாக கருதப்பட்ட இந்த கிராமம் தற்போது அந்த கஷ்டத்திலிருந்து ஓரளவிற்கு மீண்டெழுந்துள்ளது. ஒரு வீதி உள்ளது. மின்சாரம் உள்ளது. குறித்த நிகழ்வில் மஹாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ, இந்திக அநுருத்த, விஜிம பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, குமாரசிறி ரத்நாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.