தீபச்செல்வன் – தமிழீழம்
இந்தப் பத்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் எறிகளையும் முட்பொறிகளையும் மிதித்தெறிந்து கொண்டு ஒரு தேசமாய், உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
புரட்சியினால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது என்ற தீர்க்க தரிசனம் தமிழர் தாயகத்தில் நிறைவேறி வருகிற காலம் இதுவாகும். வடக்கும் கிழக்கும் உரிமைக்கான உன்னதப் போராட்டத்தில் என்றும் இணைந்தே இருக்கும் ஒரே மாநிலம் என்பதை உணர்த்திவிட்ட காலம் இது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற நாட்களில் அவர் ஈழத் தமிழ் மக்களின் எஞ்சிய வாழ்வையும் அழித்துக் கொள்ளுவதாக உறுதியெடுத்துக் கொண்டதைப் போலவே இருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தபோது ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மகிந்த ராஜபக்சவினர் சிங்களப் பேரினவாத அரசை தமிழர் நிலத்தில் விரிவாக்க மிகப் பெரும் இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து முடித்துள்ளனர்.
அது மாத்திரமின்றி, ஈழத் தமிழ் மக்களை இனவழிப்பு செய்வதும், அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அழிப்பதும், அவர்களின் உரிமைகளை முற்றாக பறிப்பதுவுமே கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான சிங்களப் பேரினவாத்தின் அரசியல் நோக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற கோத்தபாய அரசாங்கம், ஈழத் தமிழ் மக்களின் எஞ்சிய வாழ்வையும் காலத்தையும் அழிக்கத் துவங்கியுள்ளது. கண்ணுக்குத் தெரியாத, இரத்தமின்றி, கத்தியின்றிய இந்த இன அழிப்புப் போரை நடாத்திக் கொண்டு சிங்களப் பேரினவாத இறுமாப்பில் ஆட்சி புரியும் கோத்தபாய அரசுக்கு எதிராக தமிழர் தாயகம் எழுச்சி கொள்கிறது.
வடக்கு கிழக்கு தாயகத்தில் நில ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும், இனவழிப்புப் போருக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற போராட்டப் பயணம், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காலம் காலம் தாழ்த்தி துவங்கப்பட்டாலும் போராட வேண்டும் என்ற பெரும் எழுச்சியுடன் இருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் களமாகியுள்ளது.
வடக்கு கிழக்கு எங்கும் இளைஞர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், அங்கே போராட்டக் களத்தில் முஸ்லீம் மக்கள் பங்கெடுத்திருப்பது பெரும் ஆதரவுக் குரலாகும். அத்துடன் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு வலுப்படுத்தியிருக்கின்றனர். இது முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். ஈழத்தில் சிங்கள அரசு சிறுபான்மை இனங்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்ட இன ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களாக தமிழர்களுடன் முஸ்லீம்கள் இணைந்து போராடுவது மிகுந்த ஆரோக்கியமும் வலிமையும் ஆகும்.
கொட்டும் மழையிலும் ஸ்ரீலங்கா காவல்துறையினரின் கடுமையான அச்சுறுத்தல்களின் மத்தியிலும் ஸ்ரீலங்கா நீதிமன்றங்களின் தடைகளின் மத்தியிலும் இந்த மக்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்தினர். இன அழிப்புப் போரினால் மிகப் பெரும் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இந்த எழுச்சிப் போராட்டம் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
உண்மையில் தமிழர் தாயகம் இப்படி எழுச்சி கொள்ள என்னதான் காரணம்? அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் எநெடுநாள் நிலைப்பதில்லை. அவற்றின் ஆட்டங்கள் ஒழிவதும் வெகு காலங்களில் இல்லை. 2009இல் ஈழத் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் வகைதொகையற்ற ரீதியில் படுகொலை செய்தது. இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்துகூட இந்த அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்டது. இன அழிப்புக்கான நீதியை வழங்குகின்ற எண்ணம் இந்த அரசாங்கத்திடம் துளியளவும் இல்லை. அத்துடன் இன அழிப்புப் போரை வீரப் போராக சித்திரித்து ஈழ மக்களை இன்றும் அழித்து வருகின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நீதிக்காகவும் தமிழர் தாயகம் போராடி வருகின்றது. அப் போராட்டங்களை ஒடுக்க இந்த அரசு முற்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை எச்சரிக்கின்றது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகிய பின்னர் மாத்திரம், 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி, நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு அதிர்ச்சி செய்தி?
இப்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக அந்த மக்களும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். 2019 நவம்பர் மாதம் கோத்தபாய ஜனாதிபதியாக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமுண்டு, தமது மனைவி பிள்ளைகள் என தம் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை கைது செய்து இன்றுவரை எந்த தொடர்பும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சட்ட விரோதமான செயல் அல்லவா? இது மனித உரிமைகளுக்கு விரோதமான குற்றச் செயல் அல்லவா? போர்க்காலம் போலவே காணாமல் ஆக்கல்களும் கைதுகளும் இன்னும் தொடர்கிறது என்பதே இதன் வெளிப்பாடு.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போதும் மாவீரர் தினத்தின் போது கொரோனா தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி, தமிழ் மக்களை ஒடுக்க முற்பட்டது இந்த அரசாங்கம். நீதிமன்றம் வாயிலாகவும் தனது காவல்துறை எந்திரம் வாயிலாகவும் தமிழ் மக்களின் போராட்டங்களை மாத்திரமின்றி, அவர்களின் நினைவேந்தல் மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் ஒடுக்கும் வேலையை இலங்கை அரசாங்கம் செய்து வந்தது. இத்தகைய அடக்கமுறைகளுக்கான பதிலாகவே தமிழர் தாயகம் இப்படி கொந்தளித்திருக்கிறது. அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கான அறுவடையாகவே தமிழர் தேசம் எழுச்சி கொண்டிருக்கிறது.
வடக்கு கிழக்கில் இருந்து எழுச்சி கொண்ட போராட்டத்தின் ஒரு உன்னத தருணமாக முள்ளிவாய்க்காலில் அஞ்சலி சுடரேற்றிய நிகழ்வை குறிப்பிடலாம். அத்துடன் அங்கே இருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மண் சேமித்துக் கொண்டனர். இப்போராட்டத்தை கண்டு அஞ்சிய இலங்கை அரசு பல சில்லறை வேளைகளில் ஈடுபட்டுள்ளது. தனது இராணுவத்தையும் காவல்துறையையும் வைத்து அச்சுறுத்தல்களை விடுத்ததுடன், போராட்டத்தின் வாகனப் பேரணி செல்லும் இடங்களில் ஆணிக்களைப் போட்டு வாகனங்களை சேதப்படுத்தவும் முயன்றது. அத்துடன் நீதிமன்றங்களை வைத்தும் தடை விதிக்க முயன்று தோற்றது. அத்துடன் சிங்கள அரசின் ஒத்தோடிகளை – அடிவருடிகளை தமிழர் தாயகத்தில் இறக்கி போலிப் பேரணிகளை செய்யும் நன்றாகவே தோற்றுள்ளது.
வட்டுவாகல் பாலத்தில் 2009இல் இனப்படுகொலையின் பின்னர் நடந்து சென்ற காட்சிகளையும் இப்போது எழுச்சி கொண்டு அதே பாலத்தில் நடக்கும் காட்சிகளையும் ஈழத் தமிழினம் ஒரு குறியீடாகப் பகிர்ந்து வருகிறது. தாம் இழைத்த இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசு ஒருபோதும் தப்பிக்கொள்ள முடியாது. அது வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பகிரங்கமான உண்மையாகியுள்ளது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து அழித்து, அதனை சிங்கள தேசமாக மாற்றும் இனநில அழிப்பையும் நிறுத்த வேண்டும் என்பதை மக்கள் புரட்சி ஒன்று தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்போதும் தமிழர் தேசத்தை புதைத்து சிங்கள பௌத்தத்தை நடும் ஸ்ரீலங்கா அரசின் பேரினவாத செயல் இவ் அரசை பெரும் குழியில் தள்ளப் போகின்றது. நீதியை மறுத்து, உரிமையை மறுத்து, தமிழ் இனத்தையும் நிலத்தையும் அழித்துவிடலாம் என சிங்கள தேசம் கற்பனை செய்கிறது. அது தமிழீழத்தைக்கூட மலரச் செய்துவிடும் என்பதையே தமிழர் தேசத்தின் இன்றை எழுச்சி எடுத்துரைக்கிறது.
—தீபச்செல்வன்