மேயர் பெற்றிக் பிரவுன் உறுதியாகத் தெரிவிப்பு
“இலங்கை அரசு அரங்கேற்றிய கொடிய போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்று ஆதரவு வழங்க கனடாவின் பிரம்டன் நகர சபை எப்போது தயாராக உள்ளது. இங்கு வாழும் தமிழ் மக்கள் ஒரு வளமான சமூகமாக உள்ளது. கனடிய நீரோட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது எமது கடமை என்பதை நாம் உணர்கின்றோம்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு முக்கிய அடையாளமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டிருந்த ‘நினைவுத் தூபியை இலங்கை அரசும் இராணுவமும் தமது கையாட்களைக் கொண்டு தகர்த்தெறிந்தது.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் இந்த இன அழிப்பையும் அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே தான் எமது பிரம்டன் நகரசபை எல்லைக்குள் கனடாவில் நாமும் ஒரு ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிறுவ உள்ளோம். இதற்காக எமது நகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை வழங்கி எமது சபையில் இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு தெரிவித்தார் பிரம்டன் நகரசபையின் நகர பிதாவும் தமிழ் மக்களின் நல்லாதரவைப் பெற்றவருமான மரியாதைக்குரிய பெற்றிக் பிரவுண் அவர்கள். நேற்று முன்தினம் புதன்கிழமை இணையவழி ஊடாகவும் தொலைபேசி வாயிலாகவும் பிரம்டன் நகரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயன் பிரதம ஆசிரியரிடம் தெரிவித்தார்.
பிரம்டன் மாநகரசபையானது தற்போதைய கோவிட்-19 தொற்று தொடர்பாக எடுத்துவரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை தொடர்பாக நகர பிதா பல்லின ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது பிரம்டன் நகர சபை எல்லைக்குள் தடுப்பூசி விநியோகம் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் விபரங்கள்; தொடர்பாக கேள்வியொன்றை முன்வைத்த உதயன் பிரதம ஆசிரியரிடம் அதற்குரிய பதிலை வழங்கிய பின்னர் நகர பிதா அவர்கள் தொடர்ந்து பிரம்டன் நகரசபை எல்லைக்குள் நிறுவப்படவுள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி’ தொடர்பாகவும் உரையாடத் தொடங்கினார்.
அவர் இந்த விடயம் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள தொடங்கியபோது, “இந்த பத்திரிகையாளர் சந்திப்பானது, கோவிட்-19 தொடர்பானதாக இருந்தாலும் தமிழச் சமூகம் தொடர்பான எனது கருத்துக்களைக் கூறுவதற்கு நான் விரும்புவதற்கு காரணம், தமிழ்ச் சமூகத்தின் வலிகளையும் தமது தாயகத்தில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன். அதற்கு மேலாக எமது பிரம்டன் மாநகர சபையில் எல்லைக்குள் வாழும் தமிழ் மக்களின் சிறப்புக்களை நான் நேரில் கண்டுள்ளேன். அவர்களின் வலிகளை நாம் எமது வலிகளாகவே பார்க்கின்றோம்.
எனவே தான் எமது மாநகர சபை எல்லைக்குள் உள்ள சபையின் பூங்கா ஒன்றில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி’ எழுந்து நிற்கப்போகின்றது. எனவே இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கி இந்த திட்டத்தை முன்மொழிந்த எமது பிரதேச அங்கத்தவர் Martin Medeiros அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றார்ஃ
தொடர்ந்து பெற்றிக் பிரவுண் அவர்கள் பிரம்டன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை நிறுவ வேண்டும் என்ற தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட பிரம்டன் பிராந்திய சபையின் 3ம் மற்றும் 4ம் வட்டாரங்களின் உறுப்பினர் திரு Martin Medeiros ஒலிவாங்கியின் முன்பாக வந்து தனது செயற்பாடுகளைப் பற்றி விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்” எமது பிரம்டன் நகரசபையினால் எடுக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிறுவும் பணியைப் பாராட்டி ஐரோப்பிய நாடுகளிலும், மற்றும் அமெரிக்கா, இந்தியா,ஆஸ்த்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பாராடடுக்கள் கிடைத்துள்ளன. இதனால் எமது நகரசபை பிதா அவர்களும் ஏனைய சபை அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம். அத்துடன் நாம் அனைவரும் பல நகரசபைகளோடு தொடர்பு கொண்டு அந்தந்த சபைகளின் எல்லைக்குள்ளும் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைக்களுக்கு சான்றாக விளங்கும் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை’ நிறுவும் வண்ணம் வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். பல சபை அங்கத்தவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் உங்கள் பத்திரிகை வாயிலாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். தொடர்ந்து உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.