‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவிப்பு
“தமிழ்நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடியுரிமை அந்தஸ்த்து எதுவுமின்றி எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கும் ஈழத் தமிழ் உறவுகளின் நலனில் எமது கட்சி கடந்த பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு எமது மண்ணில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளின் நலன்கள் தொடர்பாக நான் பல தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரோடு பேசி வருகின்றேன். எனினும் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் இணக்கமுள்ள ஏனைய அரசியல் தலைவர்களோடு இணைந்து செயற்படுவேன்”
இவ்வாறு, கனடாவில் இயங்கிவரும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பு, கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
மேற்படி இணையவழிக் கருத்தரங்கில் முக்கிய கருப்பொருட்களாக எடுத்துக்கொள்ளப்பட்டவை இரண்டு விடயங்களாகும். முதலாவது விடயமாக, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு வரும் தமிழக மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு அணுகுவது என்பதாகும். இரண்டாவது விடயம், கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் அகதிகள் என்று பெயரோடு எவ்வித சலுகைகளோ அன்றி உரிமைகளோ இன்றி தவிக்கும் ஈழத்து தமிழ் உறவுகளின் எதிர்காலம். ஆகியனவாகும்.
மேற்படி கருத்தரங்கை ரொரன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் தொகுத்து வழங்கினார். முதலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அங்ககத்தவருமான திரு நிமால் விநாயகமூர்த்தி சிறப்பரையாற்றினார். அவர் தனது உரையில் அன்றைய கருத்தரங்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் இரண்டும் இந்திய மத்திய அரசோடு சம்பந்தப்பட்ட அம்சங்கள் என்றும், எனவே இந்திய மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாதகமான நிலையொன்றை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றும். தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஈழ மக்கள் மீது அக்கறைகொண்டு குரல் கொடுத்துவருகின்ற குறிப்பிட்ட தலைவர்களை எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீவிரமாக கவனமெடுக்கும் வண்ணம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று குறிபிட்டார்.
அடுத்து கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினருமான நக்கீரன் தங்கவேல் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் நெடுமாறன், சீமான் வைகோ ஆகியோர் வரிசையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களும் முக்கிய பங்குவகிக்கின்றார் என்றும். கடந்த காலங்களின் அவரது உரைகளையும் செயற்பாடுகளையும் நன்கு கவனித்தவன் என்ற வகையில் அவரது உரையையும் கேட்பதற்கு தான் ஆர்வத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பிரதான உரையாற்ற திரு வேல்முருகன் அழைக்கப்பெற்றார்.
அவர் முதலில் தன்னை இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்ய சென்னை நண்பன் இணையத்தள அலுவலகத்தின் பொறுப்பாளருக்கும் கனடாவில் இயங்கிவரும் ரொரன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதான உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி, தான் தினந்தோறும் மனதில் நிறுத்தி அக்கறை ◌கொள்கின்ற அல்லது இலங்கை இந்திய அரசுகளின் மீது ஆத்திரம் மேலிட்டு உணர்ச்சிவசப்படுகின்ற விடயங்கள் இங்கு அலசி ஆராயப்படவுள்ளது தனது உற்சாகம் அளிப்பதாகக் கூறி, பல விடயங்களை எத்துதரைத்தார்.
தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் முருகையா இந்திரஜித், தமிழ்நாடு ‘புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முக்கிய செய்தியாளர் திரு ஜோதி நரசிம்மன், கனடா மொன்றியால் நகர் வாழ் வீணைமைந்தன் சண்முகராஜா தங்கள் கருத்துக்களை கூறுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரதும் கருத்துப்பகிர்வின் போது, அன்று பேச எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு தலைப்புக்கள் தொடர்பாகவும் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்து திரு வேல்முருகனிடமும் சில கேள்விகளை முன்வைத்தனர். அங்கு கலந்து கொண்ட பலரும் கேள்விகளை முன்வைத்தனர். இறுதியில் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் செயலாளரும் நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினருமான மரியராசா மரியாம்பிள்ளை நன்றியுரையோடு தனது கருத்துக்களையும் முன்வைத்தார்.