மன்னார் நிருபர்
(13-02-2021)
வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.02.13) முற்பகல் இடம்பெற்றது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் போதி சுவர் புனரமைப்பிற்கான அடிக்கல்லை கௌரவ பிரதமர் தனது கரங்களினால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவிடம் வழங்கி அடிக்கல்நாட்டும் பணியை அவரிடம் ஒப்படைத்தார்.
அதற்கமைய பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை சுபவேளையில் ஆரம்பமாகியது. இந்த புண்ணிய நிகழ்வை நாட்டில் யுத்தத்தை நிறைவுசெய்து சமாதானத்தை ஏற்படுத்திய தலைவரின் கரங்களினால் ஆரம்பிக்க கிடைத்தமையை ஒரு பாக்கியமாக கருதுவதாக பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்தார்.
இதன்போது அனுசாசனம் நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசிரியர் கொடபிடியே ராஹுல தேரர், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தைரியமான தலைவரான கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு யார் என்ன கூறினாலும் நாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவரது எண்ணத்திற்கமைய முன்நோக்கி கொண்டு செல்வதற்கு மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றி கௌரவ பிரதமர்,
தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்திலிருந்து பக்தர்களால் வழிபடப்படும் பெல்லன்வில ரஜமஹா விகாரையில் காணப்படும் போதி மரம், அனுராதபுரத்தில் உள்ள ஜயஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து தோன்றிய போதி மரம் என்பதை நாம் அறிவோம்.இலங்கை புத்த சாசனத்தின் சிறந்த ஆன்மீக வளமாக விளங்கும் இந்த போதி மரத்தின் புதிதாக வெளிவந்த தளிர்கள் மற்றும் வேர்களின் படிப்படியான வளர்ச்சிக்கு போதுமான இடத்தை அனுமதிக்க பாதுகாப்பு சுவரை விரிவுபடுத்த வேண்டும்.
அதற்கு உகந்த வகையில் பண்டைய போதி சுவர்கள் மற்றும் போதி மரங்களின் பாதுகாப்பு குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரிவாக்கம் மற்றும் கட்டுமானம் செய்யப்படுவது அவசியம். அதன் மூலம் போதி மரத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சிறு வயதிலிருந்தே ஒரு பரீட்சை நெருங்கும்போது எமக்கு பெல்லன்வில ரஜமஹா விகாரையே நினைவிற்குவரும். இது நாம் அனைவரும் பழகிய ஒரு கொள்கை என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு பரீட்சை நெருங்கும் போது, நாம் அனைவரும் எங்கிருந்தாலும் பெல்லன்விலவிற்கு வருகிறோம்.
பெல்லன்விலவிற்கு வருகைதந்து போதி மர வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்தே நாம் பரீட்சைக்கு செல்வோம். அவ்வாறானதொரு தொடர்ப்பு நமக்கு இந்த பெல்லன்வில விகாரையுடன் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மதிப்பிற்குரிய மஹாசங்கத்தினர் மற்றும் அமைச்சர்களான காமினி லொகுகே, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, ஜகத் குமார, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.