வட இலங்கையில் நீண்ட காலமாக அதிக இலாபத்துடன் இயங்கி வந்து பின்னர் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து இயந்திரங்கள் பல அகற்றப்பட்டும் நிரந்தரமாக மூடப்பட்டும் இருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் யோசனைக்க அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக அறியப்படுகின்றது. மேற்படி தொழிற்சாலை மீளவும் இயங்க ஆரம்பித்தால் , அங்கு உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இந்த இரசாயன மூலப்பொருள்களின் தேவை தற்போது இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுவதாகத் தெரிவித்த அதிகாரிகள் பலர் , இரசாயன தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீள ஆரம்பித்தால், இந்த மூலப்பொருள்களின் தேவையில் பெரும் பகுதி உள்ளூரிலேயே, குறைந்த செலவில் பூர்த்திசெய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டினர்கள்
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் (11) நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் போதே மேற்படி விபரங்கள் தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற் இந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமை தாங்க , இந்தக் கலந்துரையாடலில், பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர், ஜீவானந்த விஜேசுந்தர, முகாமைத்துவ பணிப்பாளர் திஸ்ஸ லியனகே, நிபுணத்துவ ஆலோசகர் ராஜரட்ணம் மற்றும் ரஞ்சித் முதலிகே ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான தமது திட்டம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில், தொழிற்சாலையை மீள இயங்கச் செய்வதற்கான திட்டம் விரிவாக விளக்கப்பட்டது. அப்போது திரவ வடிவிலான கோஸ்டிக் சோடாவை பிரதான உற்பத்தியாகக் கொண்டியங்கவிருக்கின்ற இந்தத் தொழிற்சாலை மூலம், மேலதிக விளைபொருள்களாக குளோரின், ஐட்ரோகுளோரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைட் என்பனவும் உப உற்பத்திகளாக மேற்கொள்ளப்படுமென்று இதன்போது கெமிக்கல் கம்பனி பிரதிநிதிகள் விளக்கினர்.
இவை இதர பல உற்பத்தி முயற்சிகளான, சோப், சுத்தீகரிப்பு திரவங்கள், துணி சுத்தீகரிப்பு மற்றும் நிறமூட்டல், உணவு பதனிடல் என பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியமான மூலப்பொருள்களாக அமையுமென்று குறிப்பிட்ட அவர்கள், இதன்மூலம் மேலும் பல கைத்தொழில்துறைகள் பயனடையுமென்றும் தெரிவித்தனர்.
2,600 மில்லியின் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைச் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்படி 2023 ஓகஸ்ட் முதல் இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் ஆரம்பிக்குமென்றும் கூறிய அவர்கள், இந்தத் தொழிற்சாலை உற்பத்திகள் மூலம் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.