இலங்கை அரசின் மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இயங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் யாழ். மாநகர முன்னாள் மேயருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம், பெப்ரவரி 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்ட மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேலும் விரைவாகவும், வினைத்திறனாகவும் நிறைவேற்றும் பொருட்டும், இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தைக் கவனத்திற்கொண்டு யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நியமனம் தொடர்பான பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் இவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்துவதற்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.