தன் ஒரே மகளை தந்தையின் துப்பாக்கிச் சன்னத்திற்கு இரை கொடுத்த தாயின் துயரம் இரு வருடங்கள் கடந்தும் தொடர்கிறது
கனடாவில் இரண்டு வருடங்கள் முன்னர் தன் ஒரே மகளை தன் கணவரின் கரங்களுக்குள் ஒப்படைத்து சில மணி நேரத்திற்கும் அவளை அதே தந்தையே சுட்டுக் கொன்ற சோகம் தாங்காது இன்னும் கண்ணீர் வடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மகள் தந்தையால் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட இதே நாளான பெப்ரவரி 8ம் திகதி தான் தனது மகளது பாடசாலை அருகே வழமையாக சென்று அமர்ந்திருந்து மகிழும் அதே வாங்கொன்றில் தான் பறிகொடுத்த தனது மகளின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கணணீர் வடிக்கின்றார் தயார் பிரியா. தன்னிடம் பேசுவதற்கு வந்த ஒரு பத்திரிகையாளரிடம் பிரியா தன் கதையைக் கூறத் தொடங்குகின்றார்.
“நான் எனது ரியாவைப் பறி கொடுத்த பின்னர், ஒருவரிடமும் இந்தக் சம்பவங்கள் பற்றிக் கூறவில்லை. எனக்குள் அழுத வண்ணம் காலத்தைக் கழித்து வருகின்றேன். ஆனால் இன்று நான் கூறுவதற்குக் காரணம், எனக்கு நடந்தது போன்று வேறு பெண்களுக்கோ அன்றி தாய்மார்களுக்கோ மனதை வருத்தும் சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்” என்றார்
கனடாவின் மிசிசாகா நகரில் கடந்த 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஒரு 11 வயது சிறுமி தனது தந்தையால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றாள் என்ற செய்தி ஒவ்வொருவர் கைத்தொலைபேசியிலும் ‘அபாய அறிவிப்பாக’ ஒலியெழுப்பியது. அந்த குறுஞ்செய்தியைப் படித்தவர்கள், தந்தையே கடத்திச் சென்றாரா? என்ன காரணம்? என்று எண்ணிய வண்ணம் தங்கள் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் 42 வயதுடைய தாய்க்கு மட்டும் மனது கனத்தது. சில மணி நேரத்திற்கு முன்னர் ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தின் வாகனத் தரிபபிடத்தில் தனது காரிலிருந்து மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று தந்தையின் காரில் உற்சாகத்துடன் ஏறிச் சென்ற ரியா என்னும் சிறுமி தான் இவ்வாறு கடத்தப்பட்டிருக்கின்றாள் என்று.
அதற்கு காரணம் இருந்தது. கயானா நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டு ராஜ்குமார்-பிரியா தம்பதி தமது மகள் ரியாவுடன் வாழ்ந்து வந்த போது, கணவன்-மனைவி இருவருக்கும் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டு பின்னர் அது விரிவடைந்து தோன்றிய குடும்பப் பிரச்சனை காரணமாக இரண்டு வருடங்களாகப் பிரிந்து வாழத் தொடங்கினார்கள்.
மகள் ரியா தாயாரான பிரியாவுடன் சென்று வாழ, தந்தை ராஜ்குமார் வேறொரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். ஆனால் நீதி மன்றம் வரைக்கும் சென்ற இவர்களது குடும்பப் பிரச்சனையால், நீதி மன்றத் தீர்ப்பின் பிரகாரம் மாதத்தில் சில மணித்தியாலங்கள் ரியா என்னும் அந்த சிறுமி தனது தந்தையோடு சென்று தங்கியிருந்து அவரோ உணவருந்தி வரும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.
சில நாட்களில் தொலைபேசியில் பிரியாவை அழைக்கும் ராஜ்குமார், ” நான் இனிமேல் உனக்கு கஸ்டங்கள் தரமாட்டேன். மகளோடு வந்து விடு ,சேர்ந்து வாழ்வோம்” என்ற அழைத்த போதும், அவரால் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் மற்றும் கொடுமைகள் காரணமாக அந்த அழைப்பை புறக்கணித்து வந்த பிரியா மகள் ரியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக தன் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவழித்தார்.
2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி. ரியாவின் 11வது பிறந்த நாளான அன்றைய தினம் தாயார் பிரியா மிகுந்த மகிழ்ச்சியோ ரியாவின் பிறந்த நாளை தொடர்பாக என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதே நேரத்தில் மகள் ரியாவின் விருப்பத்தின் பேரில் நண்பிகள் சிலரோ சில நிமிடங்கள் செலவழிக்க வேண்டும். பின்னர் தந்தையோ சென்று அவரோ சில மணி நேரங்களைக் கழித்து அவரை மகிழ்விக்க வேண்டும். பின்னர் தாயாருடன் தனக்குப் பிடித்த உணவகம் ஒன்றிற்கு சென்று இரவு அருந்த வேண்டும்.
இவை தான் 11வயது ரியாவின் விருப்பதிற்குரிய சந்திப்புக்களாக இருந்தன.
மாலை நேரம் நெருங்க, தந்தை ராஜ்குமார் தொலைபேசியில் அழைத்து தான் மகள் ரியாவை அழைத்துச் செல்ல குறிப்பிட்ட ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காத்திருப்பதாகக் கூறுகின்றார். உடனே தாயார் பிரியா மகள் ரியாவை அழைத்துக் கொண்டு காரில் அந்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தை நோக்கிச் செல்கிறார்.
அங்கே தந்தையின் காரைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்தில் தாயாருக்கு ‘போய்வருகின்றேன்” என்று கூடச் சொல்லாமல் ஓடிச்சென்று தந்தை ராஜ்குமாரின் காரில் ஏறிக்கொள்கின்றார் ரியா.
அதன் பின்னர் வீடு சென்ற பிரியா, சில வேலைகளைக் கவனித்த வண்ணம், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ராஜ்குமாரின் தொலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. ரியாவை தன்னிடம் ஒப்படைப்பதற்காகவே அவரது அழைப்பு வருகின்றது என்று எண்ணிய பிரியா “ஹலோ” என்கின்றார். மறு பக்கத்தில் ராஜ்குமாரின் குரல் பதட்டமும் கோபமும் கலந்ததாக ஒலித்தது
” மகள் ரியா இனிமேல் உன்னிடம் வர மாட்டாள். அவளை இனிமேல் நீ பார்க்கவே மாட்டாய்” என்று சொல்லிட்டு அழைப்பை துண்டிததார் ராஜ்குமார். என்ன நடந்து விட்டது என்று அறிந்து கொள்ள முடியாதவராக பதட்டமும் பயமும் கொண்டவராக பொலிசாருக்கு அழைத்து விபரங்களைச் சொல்லுகின்றார் பிரியா.
சில மணி நேரங்களின் பின்னர் மற்றவர்களுக்கு வந்தது போன்று அந்த ‘அபாய அறிவிப்பு’ ஓலி பிரியாவின் தொலைபேசிக்கும் வருகின்றது. தனது பிள்ளைக்கு ஏதோ நடந்து விட்டது என்று அலறிய வண்ணம் அருகிலிருந்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார் பிரியா
பிரியாவிற்கு நெஞ்சு வெடித்துவிடும் போன்று இருந்தது. இதற்கு முன்னர் கூட பல தடவைகள் ராஜ்குமார் தன்னிடம் எச்சரிக்கை செய்த வசனங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
“உன்னையும் உனது பிள்ளையையும் பிரித்து விடுவேன். உன்னை மகிழ்ச்சியாக இருக்கவே விடமாட்டேன்” என்ற அந்த வார்த்தைகளை மீட்டுப் பார்த்தபோது பிரியாவின் உடல் நடுங்கியது.
பொலிஸ் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் அவரை அழைத்துக்கொண்டு ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்றார்கள். வீடு பூட்டிக்கிடந்தது. கதவைப் உடைத்துப் பார்ப்போமா? என்று அதிகாரிகள் கேட்க பிரியா சம்மதித்தார்.
உள்ளே சென்றபொது வீட்டில் ராஜ்குமார் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அறைகள் சிலவற்றை பார்த்தபோது ரியா ஒரு அறையிலிருந்த கட்டில் ஒன்றில் உயிரற்ற சடலமாகக் கிடந்தாள். பொலிசார் அருகில் சென்று பார்த்தபோது, ரியாவின் பிடறியில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
மயக்கத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த பிரியாவை பொலிஸார் அம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் கொலையாளி என்று சந்தேகப்பட்ட தந்தை ராஜ்குமாரைத் தேடி வலை வீசினார்கள் பொலிசார்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து சுமார் 130 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் தனது வாகனத்திற்குள்ளேயே தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்த அவரது சடலத்தைக் கைப்பற்றினார்கள் பொலிசார்.
தனது மனைவி மீண்டும் தன்னோடு வந்து வாழ மறுத்தற்கு பழி தீர்க்கும் முகமாக தனது செல்லக் குழந்தையும் கொன்று தன்னையும் அழித்துக்கொண்டார் ராஜ்குமார்.
ஆனால் தனித்து விடப்பட்டவராகவும், தனது செல்வ மகளை தந்தையின் கரங்களுக்கு இரைகொடுத்த கொடுமை, தனியாக விடப்பட்ட சோகம் இவற்றின் மத்தியில் தனது மகள் ரியாவிற்காக அவரது பிறந்த நாளன்று ரியாவின் புகைப்படமொன்றுடன் அமர்ந்த வண்ணம் அவளது நினைவுகளை துயரத்துடன் பகிர்ந்து கொள்கின்றார் பிரியா.
இங்கே காண்ப்படும் படங்களில் ரியாவின் தந்தை கொலையாளி ராஜ்குமார், தாயார் பிரியா 11 வயதில் தனது தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிய அழகிய சிறுமி ரியா ஆகியோர்