சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி
`அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்` என்பது போலுள்ளது இலங்கை பொலிசாரின் நடவடிக்கை. மழையோ வெயிலோ தமிழ் இளைஞர்களைக் கைது செய்வதும் பிறகு அவர்களின் குடும்பம் அல்லாடுவதும் போர்க்காலத்தில் இலங்கையில் சர்வசாதாரணமான ஒன்றாக இருந்தது.
நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது, இனி மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம் என்று போர் வெற்றி குறித்து அறிவித்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை.
ஆனால் விடுதலைப் புலிகள் குறித்த அச்சத்திலிருந்து இலங்கை அரசு இன்னும் மீளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
அவ்வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றனர் எனும் குற்றச்சாட்டின் வடக்கு இலங்கையில் கைது செய்யப்பட்ட 30 தமிழ் இளைஞர்களின் 16 பேரின் நிலை என்னவாயிற்று என்பது பற்றிய கவலைகள் மேலோங்கியுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து 30 தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு என்று பொலிசரால் அழைக்கப்பட்டு, கைதாகி கொழும்பு பயங்கரவாதப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ச்சியளிக்கும் இந்தச் சம்பவம் பெரியளவில் வெளியே தெரியாமலேயே இருந்தது.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற `பொத்துவில் முதல் பொலிகண்டி` வரையிலான அமைதிப் பேரணியின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அவர்களின் குடும்பத்தார் நடத்திய போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர்.
கிளிநொச்சி கந்தஸ்வாமி கோவில் முன்னால் தற்காலிக பந்தல் ஒன்றை அமைத்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியகப் போராடி வருகின்றனர்.
ஏற்கனவே காணாமல் போனவர்களின் உறவுகள் அவர்களைத் தேடி 1500 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில் வடக்கு இலங்கையிலிருந்து மேலும் 30 பேர் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ அரசு பதவியேற்ற பின்னரான காலத்தில் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பெரும் தொகுதியினர் இதுவே என்று கருதப்படுகிறது.
இலங்கை பயங்கரவாத பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 14 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட `துண்டில்` குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிக் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமது பிள்ளைகளின் நிலை குறித்து உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் தொடர்ந்து போராடும் 14 பேரின் உறவினர்கள் தமது பிள்ளைகள் உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் வேளை, இதர 16 பேரின் நிலை குறித்த மர்மம் நீடிக்கிறது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டன என்று இலங்கை பொலிசார் கூறுகின்றனர். ஆனால் எப்படியன வெடி பொருட்கள், என்ன அளவிலனாவை கைப்பற்றப்பட்டன என்பது குறித்து ஒரு விளக்கமும் இலை.
வட மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட `துண்டுச் சீட்டில்` கொழும்பு நகரமே இதற்கான `நீதிமன்ற எல்லை` என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கைதுகள் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தாலும் இதுவரை அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
“விடுதலைப் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர்“ என்று அரசு தொடர்ந்து கூறும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்ததான புகாரில் ஏனிந்த கைதுகள் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள தனது மகன் செல்வநாயகம் சசிதரன் குறித்து அவரது தாய் கோசலாதேவை செல்வநாயகம் கவலையடைந்துள்ளார்.
“அரசு புலிகளை அழித்துவிட்டதாகக் கூறும் போது, எனது மகன் எப்படி அதை மீண்டும் உருவாக்க உதவ முடியும்? இந்தப் பிள்ளைகள் அப்பாவிகள். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம்“
கோசலாதேவி செல்வநாயகம்
இவரது மகன் சசிதரனை ஒரு நாள் விசாரணைக்கு என்று அழைத்துச் சென்ற பொலிசார் அவரை முதலில் கிளிநொச்சியின் வைத்து கைது செய்தனர். செய்யப்பட்டுள்ளார். அங்கு 27 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வவுனியாவுக்கு கொண்டு சென்று 30 நாட்கள் தடுத்து வைத்த பிறகு, இறுதியாக விசாரணைக்கென்று கொழும்பு `பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு` கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரிடம் பேசுவதற்குக் கூட தங்களை டிஐடி பொலிசார் அனுமதிக்கவில்லை என்கிறார் தாய் கோசலாதேவி.
இதனிடையே தமது பிள்ளைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.
அவர்கள் தொடர்ந்து போராடினால் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
“கிளிநொச்சிப் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார் மற்றும் பிள்ளைகள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்“
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், வெடி பொருட்கள், சில ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ள என்று கூறும் பொலிஸ் பேச்சாளர், “அவர்கள் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்று கூறுவது முற்றாக உண்மைக்குப் புறம்பானது“ என்கிறார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசார் `ஆட்களை கொடுமை செய்வதற்காக` நன்கு அறியப்பட்டவர்கள் என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் தெட்டத் தெளிவாக கூறியுள்ள நிலையில், இந்தக் கைதுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை தொடர்பான விவாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் விவாதம் வரவுள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக அரசு நடந்து கொள்கிறது எனும் குற்றச்சாட்டுக்கு இது மேலுமொரு சன்றாகவுள்ளது.
கடந்த 2016 ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு (UNCAT) விசாரணையின் போது இலங்கை பெரும் அவமானத்தைச் சந்தித்தது. அரசின் புலனாய்வுத்துறைத் தலைவர் சிசிர மெண்டிஸ் தமிழர்கள் டிஐடி மற்றும் சிஐடியான் விசாரணைக்கு அழைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் திணறினார்.
அதன் பிறகு நீறு பூத்த நெருப்பாக இருந்த `டிஐடி விசாரணை` பிரச்சனை இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. போர் முடிந்த பிறகு அரசிடம் கையளிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த ஆயிரக்கணக்கான நபர்களுக்கு என்னவாயிற்று என்பது தெரியாத சூழலில், விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்த 30 பேரின் எதிர்காலம் குறித்து கவலைகள் மேலோங்கியுள்ளன.
தமது பிள்ளைகளை மீட்டுத்தர சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று கோசலாதேவி உட்பட கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.