-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
(மன்னார் நிருபர்)
(19-02-2021)
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியை கடைப்பிடித்து போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே இந்த போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம் பெற்ற ஓர் போராட்டம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் , பொது மக்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிசார் தேடித் தேடி விசாரிக்கின்றார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதி மன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் என காட்டுவதற்காக இந்த முயற்சி நடை பெறுகின்றது.
என்னைப் பொறுத்த மட்டில் மக்களுடைய எழுச்சி போராட்டம் இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கனிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உள் சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம் , மகாவலி வலயம் , புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்ற வற்றிற்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.
இதே நேரம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது.
இதனால் மக்கள் புரட்சிகளை தடை செய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன் முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர அவர்களின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும். ஏன் எனில் ஐ.நா சபை தீர்மானம் நிறை வேற்றினால் இரண்டாக உடையும் என்று கூறியிருக்கின்றார்.
சரத் வீர சேகர அவர்களின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என செயற்படுகின்றார். ஆகவே தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
அதே நேரம் இந்த பொலிசாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தை கொண்டு வந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற ஐ.நா சபையில் எமது கோரிக்கைகள் எல்லாம் இல்லாது செய்கின்ற முயற்சி எடுக்கப்படுகினறது.
அதன் காரணத்தினால் தான் எமது இளைஞர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும், பொதுமக்களிலும் கை வைக்கின்றார்கள். பொலிசாரின் அடக்கு முறைகளை கிழக்கு மாகாணம் பொத்துவிலில் உடைத்தெரிந்து அதே எழுச்சி பொலிகண்டிவரை இருந்துள்ளது அது எங்களுடைய வெற்றி.
மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியை கடைப்பிடித்து போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் செய்யப்பட்ட ஒரு விடயம் .
இது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். எந்த ஒரு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எமது மக்கள் அடிபணிய மாட்டார்கள்.
இலங்கை தேசம் இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடினார்கள். அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறினார்கள் .
ஆனால் மக்கள் எங்களை அழிக்க முடியாது அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற அந்த செய்தியை சரியான நேரத்தில் இந்த எழுச்சி ஊர்வரத்தின் மூலம் இலங்கைக்கும் உலகத்திற்கும் செய்து காட்டியுள்ளார்கள்.
ஆகவே எமது மக்களை யாரும் அடக்க முடியாது எங்களுடைய பிரச்சனைகளை இந்த ஜனநாயக போராட்;த்தின் ஊடாக தெரிவிப்போம்.
அந்த வகையில் உலக நாடுகள் நிச்சயமாக எங்களுடைய பக்கம் கரிசனை காட்ட வேண்டும்.அதுவே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது. ஆதை விட அயல் நாடு இந்தியா நிச்சயமாக தமிழர்களுடைய பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த எழுச்சிப் பேரணியின் நோக்கமாக இருக்கிறது.
ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை அடக்கு முறைகளை எங்களது பூர்வீகத்தை இல்லாதொழிக்கின்ற அந்த நிலமைகளை தட்டிக் கேட்கின்ற எழுச்சியை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும். எமது மக்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடி பணிய மாட்டார்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் மேலும் தெரிவித்தார்.