சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
(மன்னார் நிருபர்)
(19-02-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 233 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
-மன்னார் மாவட்டத்தில் நேற்று (18) வியாழக்கிழமை மேலும் ஒரு கொரேனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் மன்னார் நகர் பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் கடமையாற்றி வருகின்ற நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-இவருடன் சேர்ந்த்து பெப்ரவரி மாதம் மாதம் மட்டு 51 நபர்களும் இந்த வருடத்தில் மாத்திரம் 216 நபர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 233 நபர்களும் இது வரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் குறைவடைந்துள்ளது.
எனினும் கொரோனா தொற்று அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதினால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
மேலும் இந்த மாதம் மொத்தமாக 1454 பீ.சி.ஆர்.பிரிசோதனைகளும்,தற்போது வரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 82 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதன் 2 ஆவது கட்டமாக சமூகத்திற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர் வரும் மார்ச் முதலாம் வாரம் ஆரம்பிக்கப்படும்.
30 வயது தொடக்கம் 60 வயது வரை தொழில் செய்கின்ற அனைவருக்கும்,60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1250 தடுப்பூசிகள் சுகாதார துறையினருக்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸாருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை அனைவரும் விரைவாக பெற்றுக்ககொள்ள வேண்டும்.
சமூகத்தில் 85 சதவீதமான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன் வந்தால் எமது சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றுச் சங்கிலியை முழுமையாக உடைத்து கொரோனா தொற்றில் இருந்து இந்த மாவட்டத்தை முழுமையாக பாதுகாக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.