தமிழ்நாடு திருவள்ளுவர் இலக்கிய மன்றம் தனது 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு இவ்வாண்டு நடத்திய சிறந்த மரபுக் கவிதை நூல்களுக்கான தெரிவுப் போட்டியில், கனடா வாழ் ‘மாவிலி மைந்தன் சண்முகராஜாவின் ‘மனவெளி மேகங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் முதல் பரிசைப் பெற்றுள்ளது என்பதை உலகெங்கும் உள்ள கலை இலக்கிய நண்பர்களோடு கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது .
தமிழ்நாட்டில் பல இலக்கிய ஆளுமைகளினால் ஆரம்பிக்கப்பெற்ற இந்த திருக்குறள் இலக்கிய மன்றம் இவ்வாண்டு நல்லழகம்மை-செல்லப்பன் அறக்கட்டளை நிறுவனத்தோடு இணைந்து நடத்திய மரபுக் கவிதை நூல் தெரிவுப் போட்டியில் பல தமிழ்நாட்டுக் கவிஞர்களின் கவிதை நூல்களும் தெரிவிற்காக அனுப்பப்பட்டிருந்தன.
இந்த தெரிவுப்போட்டியில் கனடா வாழ் மாவிலி மைந்தன் சண்முகராஜாவின் மரபுக் கவிதை நூல் முதல் பரிசைப் பெற்றது, கனடா வாழ் கலை இலக்கிய நண்பர்களுக்கும் கனடா கவிஞர்கள் கழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயம் என கனடாவில் உள்ள சில இலக்கிய ஆர்வலர்கள் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.
எல்லாமாக ஏழு கவிதை நூல்கள் பரிசு பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பதும் பரிசளிப்பு விழா எ திர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி சென்னை மாநகரில் நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பரிசு பெற்ற கவிஞர் மாவிலி மைந்தன் அவர்கள் தாயகத்திலும் கனடாவிலும் ஒரு மருத்துவத் தாதியாக பணியாற்றி ஓய்வு பெற்றாலும், கனடாவில் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கற்றல் அடிப்படையில் தமிழ் மொழியில் முதுமானிப் பட்டம் பெற்றவர் என்பதும், கனடா கவிஞர் கழகத்தின் முன்னாள் தலைவர் என்பதும் கவனிக்கத் தக்கது.
இந்த தகவல் சென்னையிலிருந்து ‘கவிதை உறவு ‘ ஆசிரியர், கவிஞர் ஏர்வாடி இராதாகிருஸ்ணன் அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. -கனடா உதயன் ஆசிரிய பீடம்