(மன்னார் நிருபர்)
(21-2-2021)
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்கிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(21) காலை மன்னார் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்கின் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்ற மன்னார் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
-இதன் போது நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா? கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-இதே வேளை பொத்துவில் தொடங்கி பொலி கண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், உற்பட பல்வேறு தரப்பினரிடமும் கடந்த இரண்டு தினங்களாக மன்னார் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் அபகரிப்பு உட்பட சிறுபான்மை மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்துக்கு இவற்றை கொண்டு வரும் வகையிலுமே, வடக்கு, கிழக்கு சிவில் சமூகத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.