கனடாவின் சிறு வர்த்தகம், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் மேரி இங் தெரிவிப்பு
“கனடாவில் தலைதூக்கியுள்ள ஆசிய இனவாதத்திற்கு எதிராக போராடுவது என்பது நாம் அனைவரும் சந்தித்த ஒன்றே எனவே தற்போதும் தொடரும் ஆசியர்களுக்கு எதிரான இனவாத்திற்கு எதிராகப் போராட வேண்டிய கட்டத்தில் நாம் அனைவரும் உள்ளோம்”
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் சிறு வர்த்தகம், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் மேரி இங். மேற்படி விடயம் தொடர்பாக, எமது கனடா உதயன் பத்திரிகை மற்றும் நண்பன் இணையத்தளம் ஆகியவற்றுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேற்படி அறிக்கையின் ஆங்கிலப் பிரதி இங்கு இணைக்கபபட்டுள்ளது.
அந்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு அமையும்.
நான் எனது ஏழு வயதில் ஹொங் ஹொங் நாட்டிலிருந்து எனது பெற்றோருடன் கனடாவிற்கு குடியேறினேன். என்னைப் போலவே இந்த நாட்டில் குடியேறிய பல குடும்பங்களின் பிள்ளைகள் தங்கள் கதைகளைக் கூறுவார்கள். எனது கதையும் இங்குள்ள கணக்கில் அடங்காத கனடியர்களின் கதையைப் போன்றது தான். நானும் இனவாதத்தால் குறிவைக்கப்பட்டேன். அந்த கூட்ட அறையில் நான் மட்டுமே ஒரு வேற்றின பெண்ணாக அதை எதிர்கொண்டேன். ஆனாலும் எனக்குத் தெரியும் கனடாவின் பல்லினக் கொள்கைதான் எமது பலம் என்பது.
நான் கனடாவில் முதன் முதலாக வகுப்பறைக்குச் சென்ற அந்த நாளில் என்னோடு அங்கு கற்பதற்கு வந்த பல பல்லினங்கள் சார்ந்த பிள்ளைகளையும் அவர்களோடு நான் சேர்ந்து கற்ற விடயங்களையும், ஒன்றாக விளையாடியதையும், எப்போதும் திரும்பவும் நினைவில் கொண்டுவருவதுண்டு. இது தான் கனடாவின் சிறப்பியல்களில் ஒன்றாகும்.
இந்த கோவிற்-19 காலப் பகுதியிலும், நாம் இனவாதத்தின் வளர்ச்சியை கனடாவில் காண்கின்றோம். உதாரணமாக வன்குவர் நகரில்ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவாத எதிர்ப்பு அல்லது வெறுப்பைத் தரக்கூடிய செயல்கள் ஆகிய சுமார் 700 வீதம் அதிகரித்துள்ளதை நாம் எமக்குக் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிகின்றோம். இந்த விடயமானது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இந்த விடயமானது எமக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஒரு ஞாபகப்படுத்தும் எச்சரிக்கை ஒலி என்பதும் இதற்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் எமக்கு உணர்த்தியுள்ளது.
கனடாவில் வாழும் உங்கள் அனைவரையும் என்னையும் போன்ற நாம் அனைவரும் எங்கள் கதைகளையும் எங்கள் வளர்ச்சியையும் கண்டு பெருமைப்பட வேண்டும். கனடாவில் இனவாதத்திற்கான இடமே இல்லை என்பதை நாம் உணரவேண்டும். அத்துடன் கனடிய பிரதமர், எமது அரசாங்கம் அவர்களுடன் நானும் இணைந்து நின்று இங்குள்ள இனவாதம் மற்றும் இனப்பாகுபாடு ஆகியவற்றை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு கனடிய அமைச்சர் மேரி இங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.