தமிழகத்தின் ஓவியக் கலைஞர் மருது புகழாரம்
“என்னைப் போன்ற பல ஓவியர்கள் தமிழ்நாட்டில் இந்தத் துறையில் பணியாற்றிவருகின்றார்கள். நாங்கள் அனைவருமேயாழ்ப்பாணம் மார்க் மாஸ்டர் அவர்கள் பற்றியும் அவர் உருவாக்கிய ஓவியர்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். நான் பயணம் செய்யும் வெளிநாடுகளில் கூட பல ஈழத்து ஓவியர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவருமே அற்புதமான ஓவியங்களை இன்னும் படைத்து வருகின்றார்கள். இவ்வாறான ஓவியர்களுள் கனடாவில் வாழ்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் திடீர் மரணத்தைத் தழுவிய கருணா என்னும் எனது நண்பர் தலை சிறந்தவர் என்றுதான் நான் கூறுவேன். கனடாவின் ‘தாய்வீடு’ பத்திரிகையோடு தன்னை இணைத்துக் கொண்டு கலைத்துறையில் ஈடுபட்டு வந்த நண்பர் கருணாவின் நினைவுகள் என்றும் எம்மை விட்டகலாது”
இவ்வாறு தெரிவித்தார் தமிழகத்தின் ஓவியக் கலைஞர் மருது அவர்கள். கனடாவின் வாழ்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமான ஓவியர் கருணாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று முன்தினம் இணையவழி ஊடாக கனடாவில் இடம்பெற்றன.
கனடா தாய்வீடு பத்திரிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வை திரு பொன்னையா விவேகானந்தன் தொகுத்து வழங்கினார்.
மேற்படி அஞ்சலி நிகழ்வில் கனடாவிலிருந்து மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் உள்ள கலைத்துறை சார்ந்தவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி தமிழகத்தின் ஓவியர் மருது அவர்கள் தனது அஞ்சலி உரையில் பின்வருமாறு தெரிவித்தார்.
“கருணா அவர்கள் நாம் இன்னும் வியந்து பேசக் கூடிய மனிதராவார். அவர்கள் தன்னை ஒரு ஓவியராகக் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரிடத்தில் பல திறைமைகள் மறைந்து கிடந்ததை நான் அவதானித்தேன். அவரோடும் அவரது நண்பர்களாக பலரோடும் நான் கழித்த பல நாட்கள் என் வாழ்க்கை அழிக்க முடியாத அத்தியாயங்களாகவே இன்னும் பதிந்துள்ளன.
ஓவியம், புகைப்படக் கலை மற்றும் மேடை நாடகம் சார்ந்த துறைகளில் முத்திரை பதித்து நின்றவர் திடீரென் நிரந்தர நித்திரைக்குச் சென்றுவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.
தாய்வீடு பத்திரிகையின் ஆசிரியர் திரு திலீப்குமார் தனது உரையில், “இரண்டு வருடங்கள் கழிந்தாலும் நாம் மறக்க முடியாத ஒரு அற்புதக் கலைஞனாகவும் நண்பனாகவும் திகழும் கருணாவை இழந்து தவிக்கும் ஒருவனாக நான் உள்ளேன். அவர் மூலம் நான் கற்றுக்கொண்ட அச்சுக்கலை , எழுத்து வடிவமைப்பு மற்றும் வரைகலை போன்ற அறிவு சார் வியடங்கள் தொடர்ந்து கைகொடுக்கின்றன. எனவே எமது பத்திரிகைப் பயணம் தொடரும் வரை கருணா என்னும் கலைஞன் தொடர்ந்து எம்மோடு பயணிப்பார் என்று உறுதியாக நம்புகின்றேன்’ என்றார்.
மேலும் பலர் அங்கு உரையாற்றினார்கள்.