ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 2021ஆம் ஆண்டுக்கான அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளது. நீதிக்காக தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம் இந்த ஆண்டாவது நீதி நிலைநாட்டப்படுமா என ஏங்கிக் கொண்டிருக்கிறது. இப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திரண்டு தீச்சட்டி ஏந்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நீதிக்காக பல வகையிலும் துடித்துக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு ஜெனீவா வழங்கப் போவது என்ன?
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை என ஈழ இனப்படுகொலை கருதப்படுகின்றது. 2009ஆம் ஆண்டில் உலகின் கண்களுக்கு தெரியும் விதமாகவே ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஆர்மோனியப்படுகொலை போல, ருவாண்டா இனப்படுகொலை போல கண்களுக்கு தெரியாமல் இப் படுகொலை நடக்கவில்லை. நவீன தொடர்பாடல் சாதனங்கள் அதிகமும் வளர்ச்சி பெற்ற காலத்தில் நடந்த ஈழ இனப்படுகொலை குறித்த சாட்சியங்கள் பலவும் உடனுக்குடன் வெளியாகி இருந்தன. இதனை பன்னாட்டுச் சமூகமே பார்க்கக்கூடியதாகவே இருந்தது.
முள்ளிவாய்க்கால் யுத்த களத்தில் ஈழத் தமிழ் மக்கள் வகைதொகையின்றி இனவழிப்பு செய்யப்பட்டனர். மருந்துகள் தடுக்கப்பட்டும் இனப்படுகொலை நடந்தது. உணவு மறுக்கப்பட்டும் இனப்படுகொலை நடந்தது. போர் தவிர்ப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டு, மக்கள் அங்கே ஒன்றுகூடச் செய்யப்பட்டு, மக்கள்மீது கொத்துக் கொத்தாக குண்டுகள் பொழியப்பட்டன. அத்துடன் தடை செய்யப்பட்ட நஞ்சுக் குண்டுகள் முள்ளிவாய்க்காலில் வீசப்பட்டமையை அண்மையில்கூட தி கார்டியன் ஊடகம் உறுதி செய்திருந்தது. மிக வெளிப்படையாக திட்டமிட்டு நடந்த ஈழ இனப்படுகொலை குறித்த சாட்சியங்கள் பலவும் இந்த உலகத்திற்கு தெரிந்தவையே.
ஊடகப் போராளி இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதும், அப்பாவிப் பாலகன் பாலச்சந்திரன் இனப்படுகொலை செய்யப்பட்டதும் மிகப் பெரிய மீறல்கள் என்பதை ஐ.நா தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது. ஈழ இனப்படுகொலை முடிந்த பின்னர் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் பல தடைவை நடந்திருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் என்ற வித்திலும், போர்க்குற்ற மீறல்கள் என்ற வித்திலும் ஐ.நா ஈழ இனப்படுகொலையை அணுகி வந்தாலும் இன்னமும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுத்தும் வருகிறது.
ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ளவே ஐ.நாவுக்கு பல வருடங்கள் ஆனது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை ஐ.நா உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறலை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியது. ஆனால் ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்தையும் ஈழத் தமிழ் மக்களையும் ஏமாற்றும் விதமாக சில ஆணைக்குழுக்களையும் அலுவலகங்களையும் அமைத்து காலத்தை கடத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் சரி, மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் சரி, தற்போது கோத்தபாய அரசாங்கமும் சரி இதே வேலையை செய்தே தமிழர்களை ஏமாற்றி வருகின்றது.
இனப்படுகொலையை மறுத்து வரும் இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்கால் போரில் தாம் தமிழ் மக்களை கொல்லவில்லை என்றும் குண்டுகளுக்குப் பதிலாக பூக்களையே தூவி வந்ததாகவும் பேசி வருவதுதான் வேடிக்கை. பல ஆண்டுகளுக்குப் பின்னர், போரின் போது சுமார் ஐந்து ஆயிரம் மக்களை தாம் படுகொலை செய்திருக்கலாம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருந்தார். இது முக்கியமானதொரு இனப்படுகொலை ஆதாரமாகும். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது பல மடங்கு அதிகம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது.
போருக்குப் பின்னர் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். வணக்கிற்குரிய மன்னார் ஆயர் இராசப்பு யோசேப்பு, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேருக்கும் அதிகமாக வன்னி மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அரச புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு கூறியுள்ளார். இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசாங்கம் இதனை ஒரபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பது உண்மையே.
ஆனாலும் அவ்வப்போது உண்மைகள் வெளிப்படுகின்றது. அதில் ஒன்றே சரத்பொன்சேகாவின் பேச்சும். அதுபோன்று நந்திக்கடலில் நாயை சுட்டுக் கொன்றதைப் போல புலிகளை சுட்டுக் கொன்றேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அதேநேரம், போரின் போது தாம் பொதுமக்களை கொல்லவில்லை என்றும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்றும் ஸ்ரீலங்கா அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். என்றால் புலிகள் என்ற பெயரில் தமிழ் மக்கள் நாயைப் போல் சுட்டு அழிக்கப்பட்டுள்ளனரை் என்பதே உண்மையாகும்.
ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் உரைகளும் பேச்சுக்களும் ஈழத்தில் மிககப் கொடிய முறையில் இன அழிப்பு நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும். பகிரங்கமான இப் பேச்சுக்களை தகுந்த சான்றாதாரங்களாக கொள்ள முடியும். இந்த நிலையில் தற்போது ஜெனீவாவை எதிர்கொள்ள அரசியல் காய் நகர்த்தல்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. இம்முறை ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை எதிர்த்து 41 நாடுகள் வாக்களிக்கும் என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் பல நாடுகளுடன் இதற்கான பேச்சுக்களிலும் ஈடுபட்டிருக்கிறது.
எப்படி இருந்தாலும் மேற்கில் சில நாடுகள் ஸ்ரீலங்கா அரசு மீது கடுமையாக குற்றம் சுமத்தி வருகின்றது. அந்த நாடுகளை சேர்ந்த அரசியல் மற்றும் சிவில் பிரிதிநிதிகள் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். எனினும் இம்முறை கொண்டுவரப்படவுள்ள ஸ்ரீலங்கா அரசு குறித்த தீர்மானம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பரிந்துரைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. நடந்த இனப்படுகொலைக்கும் நடக்கும் இனவழிப்புக்கும் தீர்வாக சர்வதேச விசாரணையும் சர்வதேச நீதிமன்றமும் தேவை என்பது ஈழத் தமிழ் மக்களின் தீராத எதிர்பார்ப்பாக இருப்பதை பன்னாட்டுச் சமூகம் நன்கு அறியும்.
தமது அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் உத்தமர்கள் என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியிருந்தது. அதனை சர்வதேச விசாரணை ஒன்றின் வாயிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அஞ்சியபடி தாம் உத்தமர்கள் என்பது வேடிக்கையானது. அத்துடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் எத்தகைய இனப்படுகொலையை செய்தது என்பதை உலகமே அறியும். அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என வடக்கு மாகாண சபை ஆதார பூர்வமாக சட்டபூர்வமான முறையில் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
இந்த நிலையில் உள்ளக விசாரணை என மீண்டும் காலத்தை இழுத்தடிக்க ஸ்ரீலங்கா அரசுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. இனப்படுகொலை செய்த தரப்பு ஒருபோதும் நீதிபதியாக இருக்க முடியாது. நீதியும் நிலை நாட்டப்படாது. கடந்த காலத்தில் தமிழ் தலைவர்களின் இணக்கத்துடன் ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் ராஜபக்ச தரப்பினரை காப்பாற்றும் தந்திரத்திற்காகவே கால அவகாச நாடகம் பயன்படுத்தப்பட்டது. ஸ்ரீலங்காவுக்குள் நீதி கிடைக்கும் என ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு காலத்திலும் நம்பவில்லை. எனவே சர்வதேச விசாரணையும் நீதியுமே ஈழத் தமிழ் இனத்தின் இருப்புக்கு அடிப்படை தேவையாக உள்ளது.
கனடா உதயனுக்காக கிளிநொச்சியில் இருந்து தீபச்செல்வன்