மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
மன்னார் நிருபர்
(25-02-2021)
சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டி அரசியலில் நிலைக்க நினைக்கும் இன்றைய புதுமையான கலாசாரத்தில், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை விரும்பிய உதாரணப் புருஷராக அமரர் வி.ஜே.மு.லொகுபண்டார விளங்கினார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று (25) பாராளுமன்றில் மறைந்த முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு.லொகுபண்டாரவின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமரர் லொகுபண்டார இராஜாங்க அமைச்சராக, அமைச்சராக, ஆளுநராக, சபாநாயகராக பல பதவிகளை வகித்து, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும்பெரிதும் உழைத்தவர்.
கல்வி அமைச்சராக அவர் இருந்தபோது, கல்வியில் பல மாற்றங்களைமேற்கொண்டவர். தேசிய பாடசாலைகள் போன்றவற்றை உருவாக்கி, மாணவர்களின் கல்வியில் புதியமாற்றங்களை மேற்கொண்டவர். நவீன கல்வித் திட்டங்களை உருவாக்குவதற்காக அவர்மேற்கொண்ட பிரயத்தனங்களை நாம் இன்றும் நன்றியுணர்வுடன் நோக்குகின்றோம்.
அதுமாத்திரமின்றி, நீதியமைச்சராகவும் சுதேசவைத்திய அமைச்சராகவும் இருந்த காலங்களில், அவர் ஆற்றிய பணிகளை நாடும் நாமும் நன்றியுடன்பார்க்கின்றோம். பதுளை மாவட்டத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களை அரவணைத்து அரசியல் செய்யும் நல்ல பண்பை உருவாக்கினார். நேர்மையான அரசியல்மூலம், அந்த மாவட்டத்துக்கான ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தை ஏற்று மக்கள்பணியாற்றினார்.
அவர் அன்று கட்டியெழுப்பிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை,இன்றும் அந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் ஞாபகப்படுத்துவதைக் நாம் காண்கின்றோம்.
சபாநாயகராக பணிபுரிந்த காலத்தில் நடுநிலை நின்று,தனது கடமையை செவ்வனே மேற்கொண்டவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி,எல்லா உறுப்பினர்களும் சமன் என்று எண்ணி நேர்மையாக நடந்துகொண்டவர்.
இவர் போன்றசபாநாயகர்களை இந்தக் காலகட்டத்தில் காண்பதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அமரர் முன்னாள் சபாநாயகர் லொகுபண்டாரவின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெரிய பாதிப்பாகும்.
அவரது இழப்பால் கவலையுற்றுள்ள மனைவி மற்றும் மகன் உதித்த லொகுபண்டார உட்பட குடும்பத்தினருக்கு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும், எமது சமூகம் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துக்கொள்கின்றோம்”. என்று கூறினார்.