ஸ்காபுறோவில் கடந்த 8 வருடங்களாக இயங்கிவரும் Frontline Community Services என்னும் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு ஒன்ராறியோ அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு தொகை கிடைத்துள்ளதை கனடா உதயன் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.
மேற்படி நிதியானது எமது சமுகத்திலுள்ள இனவாதம் மற்றும் வெறுப்பு அடிப்படையில் இடம்பெறும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் ஏற்ற திட்டங்களை வகுத்து அவைகளுக்கு ஏற்பட்ட இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்கபபட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சமுகத்தில் வெறுப்பின் அடைப்படையில் இடம்பெறும் குற்றங்களை எதிர்த்து போராட சமுகங்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ‘பாதுகாப்பானதும் இன்றியமையாததுமான சமுகம்’ எனும் பொருள்பட வழங்கப்படும் மானியத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 2.6 மில்லியன் டொலர் வரையான நிதியை ஒன்ராறியோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது இந்நிதியானது ஒன்றாரியோவிலுள்ள 26 இலாப நோக்கற்ற சேவை வழங்கும்ட நிறுவனங்கள், பூர்வகுடிகளின் அமைப்புக்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
இந்த நிதியின் உதவியோடு காவற்றுறையுடன் இணைந்து சமுகத்தில் பாகுபாட்டைக் குறைக்கும் திட்டங்களைச் செயற்படுத்தவும், காவற்றுறையில் பதிவாகும் வெறுப்பின் காரணமாக இடம்பெறும் குற்றங்களை அடையாளங்கண்டு சமுக ஒருங்கிணைப்பை வளர்க்கவும் உதவும்.
இதன் ஒரு பகுதியாக, Frontline Community Services என்னும் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வெறுப்பின் அடிப்படையில் இடம்பெறும் குற்றங்களைக் ஒழிப்பதற்கு நிதி உதவி செய்யப்படவுள்ளது.
“ரொறன்ரோ காவற்றுறை, ஒன்ராறியோ தெற்காசிய சட்ட மையம், பஞ்சாபிய சமுக சுகாதார சேவைகள் ஆகியவற்றுடன் இணைந்து வலுவானதும் இயைவுள்ளதுமான, சமுகங்களை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை நாம் செயற்படுத்தவுள்ளோம். ஆபத்துக்குள்ளாகக்கூடிய இளையவர்களுக்கான பட்டறைகள் – குறிப்பாக தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கான தற்காப்பு, சமுக இணைப்புகள், சமுகங்களில் வெறுப்பின் அடிப்படையில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான அவர்களின் இணைந்த பங்களிப்பு போன்றவற்றை இதன்போது ஏற்படுத்தவுள்ளோம்” என்று நேற்று நடைபெற்ற் இணையவழி கலந்துரையாடலில் Frontline Community Services சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைவி திருமதி விஜயா குலா தெரிவித்தார்
“முன்னணி சமுக மையத்துடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது சமுகத்திலுள்ள பங்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி இனவெறி மற்றும் வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதற்கு இந்த திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என அங்கு உரையாற்றிய ஸ்கார்பாரோ-வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், முதியோர்கள் தொடர்பான அமைச்சருமான ரேமண்ட் சோ அவர்கள் கூறினார்.
“எமது அரசாங்கம் எவ்வகையிலும் வெறுப்பு மற்றும் இனவாதம் போன்றவற்றை சகித்துக்கொண்டிராது என்பதுடன், ஒன்ராறியோ மக்கள் இப்படியான தடைகளைத் தாண்டி சமுக அடிப்படையிலான தீர்வுகளைக் காண நாம் தொடர்ந்து கவனம் செலுத்து வருகின்றோம்” என்று ஸ்கார்பாரோ – றூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.