“நாயின் வேலையை நாய் பார்க்க வேண்டும். கழுதையின் வேலையைக் கழுதை பார்க்க வேண்டும்’ – என்பார்கள்.
மாறிக் காரியம் ஆற்ற முயன்றால் – நாயின் வேலையைக் கழுதையோ, கழுதையின் வேலையை நாயோ பாரக்க முயற்சித்தால் – சிக்கல்தான்.
இது வீட்டு வேலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டு வேலைகளுக்கும் பொருந்தும்.
சிவில் நிர்வாகிகள், இராஜதந்திரிகள் பணிபுரிய வேண்டிய உயர் பதவிகளில் எல்லாம் படை அதிகாரிகளைக் கொண்டு வந்து நியமித்திருக்கின்றார் நாட்டின் ஜனாத்பதி கோட்டாபய ராஜபக்ஷ.
இராணுவ அதிகாரியை நாட்டின் ஜனாதிபதியாக்கியதன் விளைவை நாடும் மக்களும் சந்தித்துத்தானேயாக வேண்டும்?
அதுபோல, சிவில் அதிகாரிகள், இராஜதந்திரிகள் பதவிக்கு முன்னாள் படை அதிகாரிகளை நியமித்ததன் விளைவையும் நாடு எதிர்கொண்டுதானாக வேண்டும்!
காவல்கார நாயின் குரைக்கும் வேலையை கழுதை பொறுப்பெடுத்து, கழுதை “காள்’ “காள்’ என்று கர்ண கொடூரமாய்க் கத்திக் காதைப் பிளந்தால் யார்தான் தாங்குவர்? பொறுக்க முடியாமல் அடித்துத் தானே துரத்துவர்…!
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவி என்பது முக்கிய இராஜதந்திர பொறுப்பு. சாணக்கிய தந்திரம் தேவைப்படுவது. அதற்குத் தேவையானது யுத்தத்தில் பயன்படுத்தும் வீர தந்திரோபாயம் அல்ல.
படைக் கையாள்கை வேறு; வெளிவிவகார இராஜதந்திரம் வேறு. ஜெனிவா நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை ஆதங்கத்தோடு வேண்டி நிற்கின்றது. தேடியலைகின்றது.
அதுவும் அயலில் உள்ள தேசங்களின் – குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் – ஆதரவும் ஒத்துழைப்பும் இலங்கைக்கு மிக மிக அவசியமாகும்.
“அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த’ கதையாக இந்தியாவின் ஆதரவைக் கோரும் வகையில் இந்தியாவின் முக்கிய நாளிதழான “த ஹிந்து’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இறுதியில் தேவையில்லாமல் இந்தியாவைச் சீண்டும் வேலையைப் பார்த்திருக்கின்றார்.
கடைசியாகக் குளிக்கப் போய், சேறு பூசிய கதையாக அவரின் முயற்சி முடிந்திருக்கின்றது.
இந்த இக்கட்டுச் சமயத்தில், இந்தியாவுடன் சேர்ந்து, ஓடி, சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி, விடயத்தை வெல்வதை விடுத்து, வெளிவிவகார இராஜதந்திரம் என்பது பீரங்கி வைத்து முழங்கி எதிர்த்தரப்பை பணிய வைப்பது என்ற பாணியில் அவர் செயற்பட்டிருக்கின்றார்.
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி தங்கள் நிலைப்பாட்டை ஓரிரு வாசகங்களில் குறிப்பிடக் கூடியதாக தெட்டத் தெளிவாக எடுத்துரைத்து விட்டார்.
இலங்கையில் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை – 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவை உள்ளடங்கலான அதிகாரப் பரவலாக்கலை – கொழும்பு ஆட்சிப் பீடம் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையை இந்தியா ஆதரித்து உறுதிப்படுத்தும்.
இதுவே தனது நிலைப்பாடு என்பதை இந்தியா ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற சர்வதேச அரங்கில் வைத்து அறிவித்த பின்னரும், இந்திய இராஜதந்திரத்தை வேறுவிதமாகச் சீண்டுகின்றார் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர்.
1987 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய, அந்த இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே செயற்பட்டது அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம்.
அதை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகின்றது இந்தியா. இலங்கையுடனான உறவு – ஊடாட்டம் – இரண்டு தூண்களில் தங்கியுள்ளதாக் கூறும் புதுடில்லி, அதில் ஒன்று 13ஆவது திருத்தம் உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வை முழு அளவில் வழங்குவதன் மூலம் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்வது என்று சுட்டியுள்ளது.
அந்தக் கடப்பாட்டை நிறைவு செய்தால்தான் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையை மதித்தல் என்ற மற்றைய தூண் பலமாக நிற்கும் என்ற புதுடில்லியின் கருத்துரையை நிராகரிக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகின்றார் கொலம்பகே.
“1987இன் செயற்பாடு முறைமைகள் மாறிவிட்டன. காலம் ஓடிவிட்டது; நிலைமைகள் மாறிவிட்டன. அந்தக் கால ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும்படி இந்தியா சதா அரித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர் தரப்பு சமஷ்டி என்கிறது. அதன் கீழ் காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கின்றார்கள். அப்படிக் கேட்டால் அது என்ன? தனி நாடுதானே?” – என்று இராஜதந்திரமே தெரியாமல் வாயைப் பிளக்கின்றார் ஜெயநாத் கொலம்பகே.
நாயின் வேலையைக் கழுதை பார்த்தால் இப்படித்தான் இராஜதந்திரமற்ற வார்த்தைகள் கொட்டும். இது இலங்கையின் தலைஎழுத்து…!